Monday, April 4, 2022

782. அறை நண்பர்கள்!

"நீங்க ஏன் ரெண்டு பேர் இருக்கற இந்த அறையைத் தேர்ந்தெடுத்தீங்க? நீங்க நல்ல வேலையில இருக்கீங்க, தனி அறையையே எடுத்திருக்கலாமே!" என்றான் அரவிந்தன்

"முதல்ல, இந்த வாங்க போங்க வேண்டாம். நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயசுக்காரங்கதான். அதனால, அரவிந்தா, உன் கேள்விக்கு பதில் என்னன்னா, ஐ லைக் கம்பெனி. தனி அறையில இருந்தா, நான் செத்துடுவேன்!" என்றான் கேசவன்.

கேசவன் தன் இயல்புக்கேற்ப பல நண்பர்களை உருவாக்கிக் கொண்டான். அவன் நண்பர்கள் பலர் அவர்கள் அறைக்கு அடிக்கடி வந்தனர். அனைவரையுமே அவன் அரவிந்தனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். ஆனால், அவர்களுடன் நெருக்கமாவதில் அரவிந்தன் அதிக அர்வம் காட்டவில்லை.

ஒரு மாதம் கழித்து, அரவிந்தன் முதல் முறையாக ஒரு நண்பனை அறைக்கு அழைத்து வந்தான். ரவி என்ற அந்த நண்பனை கேசவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அந்த நண்பன் கிளம்பிச் சென்றதும், "உனக்கு ஒரு நண்பன் கிடைக்க ஒரு மாசம் ஆகி இருக்கு. எனக்கு அதுக்குள்ள பத்து நண்பர்கள் கிடைச்சுட்டாங்க!" என்றான் .

"உனக்கு இருக்கிற மாதிரி நண்பர்களை ஈர்க்கிற காந்தத் தன்மை எங்கிட்ட இல்லையோ என்னவோ!" என்றான் அரவிந்தன், விளையாட்டாக.

"என்னடா, அன்னிக்கு ரவின்னு ஒரு நண்பனை அழைச்சுக்கிட்டு வநத. அப்புறம் அவன் வரவே இல்லையே!" என்றான் கேசவன்.

"ஃபோன்ல பேசிப்போம், வெளியில எங்கேயாவது சந்திச்சுப்போம்" என்ற அரவிந்தன் தொடர்ந்து, "உன் நண்பர்கள்ள கூட பல பேர் இப்பல்லாம் வரதில்லையே?" என்றான்.

"தெரியல. சில பேர்தான் வராங்க. சில பேரோட எனக்கு நெருக்கம் குறைஞ்சு போச்சு. அவங்களுக்கு எங்கிட்ட ஆர்வம் குறைஞ்சுடுச்சா, எனக்கு அவர்கள்கிட்ட ஆர்வம் குறைஞ்சுடுச்சான்னு தெரியல!" என்றான் கேசவன், சிரித்துக் கொண்டே.

"நாம இந்த பேயிங் கெஸ்ட் ஹாஸ்டலுக்கு வந்து சரியா ஒரு வருஷம் ஆச்சு!" என்றான் கேசவன்.

"ஆமாம், காலம் ஓடினதே தெரியல! யாருக்கு முதல்ல கல்யாணம் ஆகி, வீடு பாத்துக்கிட்டுப் போகப் போறோமோ, தெரியல!" என்றான் அரவிந்தன்.

"நீ சொல்றதைப் பாத்தா, உனக்கு வீட்டில பெண் பாத்துக்கிட்டிருக்கற மாதிரி தெரியுது!"

"ஆமாம், பாத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. உன் விஷயம் என்ன?"

"என் வீட்டில அழுத்தம் கொடுக்கறாங்க. ஆனா, நான் தள்ளிப் போட்டுக்கிட்டிருக்கேன்" என்றான் கேசவன்.

"ஏன்?"

"கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம்னு பாத்தேன்."

"ஆரம்பத்தில அப்படித்தான் இருந்த. ஆனா, இப்பல்லாம் அறையை விட்டு அதிகமா வெளியில போறதில்ல. உன் நண்பர்களும் அதிகம் வரதில்ல. என்ன ஆச்சு?" என்றான் அரவிந்தன்.

"முதல்ல எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. ஆனா அவங்கள்ள பல பேர் நான் நல்லா செலவழிக்கிறவன், என்னோட இருந்தா காசு செலவழிக்காம சினிமா, ஓட்டல்னு அனுபவிக்கலாம்னுதான் எங்கிட்ட நட்பா இருக்காங்கன்னு எனக்கு அப்புறம்தான் புரிய ஆரம்பிச்சுது. அவங்க எண்ணத்தைப் புரிஞ்சுக்கிட்டு, நான் அவங்களோட சினிமா, ஓட்டலுக்கெல்லாம் போறதை நிறுத்தினவுடனே, அவங்க கொஞ்சம் கொஞ்சாமா எங்கிட்டேந்து விலகிட்டாங்க!" என்றான் கேசவன், சற்று வருத்தத்துடன்.

"ஆமாம், நான் கவனிச்சேன்." 

"ஆனா, உன் விஷயத்தில தலைகீழா நடந்த மாதிரி இருக்கு. ஆரம்பத்தில உனக்கு நண்பர்களே இல்ல. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நண்பர்கள் கிடைச்சு, இப்ப ஒரு அஞ்சாறு பேரு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சரியா?"

"சரிதான்" என்றான் அரவிந்தன்.

"அவங்களோட உன் நட்பு நல்ல வலுவா இருக்கிற மாதிரி இருக்கு. இத்தனைக்கும் நீ சினிமா, ஓட்டல்னு அதிகம் போற ஆள் இல்ல. "

"ஆமாம். என்னைப் பொருத்தவரை, நண்பர்கள்னா அவங்களோட நான் இருக்கிற நேரம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கணும், அவங்க முகத்தைப் பார்த்தாலே மனசில மகிழ்ச்சியும், நம்பிக்கையும் வரணும். அப்படிப்படவங்களோடதான் நான் நட்பு வச்சுப்பேன். அப்படிப்பட்டவங்களோட நட்பு வலுவாகிக்கிட்டே இருக்கும்கறது என்னோட அனுபவம். சில நண்பர்கள் விஷயத்தில எனக்கும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கு. அந்த நட்பெல்லாம் தானாகவே தேஞ்சு போய், இப்பல்லாம் தற்செயலா சந்திச்சுக்கிட்டா ஹலோன்னு மட்டும் சொல்லிக்கிற அளவுக்குக் குறைஞ்சுடுச்சு" என்றான் அரவிந்தன்.

"அப்படிப் பாத்தா, என்னோட உனக்கு இருக்கற நட்பு ரெண்டாவது வகைதானே? ஏன்னா, என்னோட உனக்குப் பழக்கம் ஏற்பட்டது நாம ஒரே அறையில இருக்கறதாலதானே? நீயா தேடிக்கிட்ட நட்பு இல்லையே!" என்றான் கேசவன்.

"நானா தேடிக்கிறேனா, தானா வந்ததாங்கறது முக்கியம் இல்ல. அந்த நட்பு வளருதா, தேயுதாங்றதுதான் கேள்வி. என்னோட சிறந்த நண்பர்கள்ள ஒத்தனாத்தான் உன்னை நினைக்கிறேன், எப்பவுமே அப்படித்தான் நினைப்பேன்!" என்றான் அரவிந்தன், கேசவனின் கைகளைப் பற்றியபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு

குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

பொருள்: 
அறிவுடையவரின் நட்பு வளர்பிறை போல் வளரும் தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு தேய்பிறை போல் தேய்ந்து வரும் தன்மையுடையது.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...