Monday, April 25, 2022

575. 'கல்வி வள்ளல்'

'கல்வி வள்ளல்' துரைசாமியின் மணிவிழாவில், அவரை எல்லோரும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"கல்வியைத் தன் கண்ணாகக் கருதிப் போற்றுபவர் துரைசாமி."

"ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், அவருக்குக் கல்விக்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு, மற்ற ஏழைக் குழந்தைக்கும் கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காகவே, பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார் அவர்!"

கூட்டத்தில் பின்வரிசையில் அமர்ந்திருந்த கருணாகரன்,"பொய் சொல்றத்துக்கும் ஒரு அளவு இல்ல?" என்று முணுமுணுத்தது அவர் அருகில் அமர்ந்திருந்த ரமணனுக்குக் கேட்டிருக்க வேண்டும். அவர் மெதுவாகச் சிரித்தார். பிறகு கருணாகரனிடம் திரும்பி, "சார்! வரீங்களா? கொஞ்சம் வெளியில போய் நின்னுட்டு வரலாம்" என்றார்.

கருணாகரன் தலையாட்டி விட்டு, அவருடன் எழுந்து வெளியில் வந்தார்.

"என்னதான் உள்ளே ஏசி இருந்தாலும், திறந்த வெளியில வர காற்றோட சுகமே தனிதான்!" என்றார் ரமணன். 

"என்ன சார், இப்படிப் புளுகறாங்க? அவர் கேக்கற நன்கொடையில ஒரு ரூபா குறைஞ்சா கூட அட்மிஷன் கொடுக்க மாட்டாரு. அவர் ஏழைகளுக்குக் கல்வி கிடைக்கணுங்கறதுக்காக, கல்வி நிறுவனங்கள் தொடங்கி நடத்தறாராம்! என் பையன் நல்ல மார்க் வாங்கி இருந்தும், அவனுக்கே டொனேஷன், கல்விக் கட்டணம் தவிர, இந்தக் கட்டணம், அந்தக் கட்டணம்னு ஏகப்பட்ட பணம் கொடுத்திருக்கேன். இந்த விழா நடத்தறதுக்குக் கூட, மாணவர்களோட பெற்றோர்கள்கிட்ட பணம் வசூலிச்சதோட, கூட்டம் வரணுங்கறதுக்காக, பெற்றோர்கள் விழாவில கலந்துக்கணும்னு கண்டிப்பா சொல்லி இருக்காங்க!"

"உங்க பையனும், என் பையனும் நல்ல மார்க் வாங்கி இருக்காங்க. மார்க் குறைவா இருந்தா, இன்னும் நிறையப் புடுங்குவாங்க. எத்தனையோ ஏழைப் பெற்றோர்கள் தங்களோட சக்திக்கு மேல கடன் வாங்கிப் பணம் கட்டி இருக்காங்க. மாணவர்கள்தான்னு இல்ல, ஆசிரியர்களுக்கும் இங்க கஷ்டம்தான்!" 

"அப்படியா? ஏன், சம்பளம் ஒழுங்காக் கொடுக்க மாட்டாங்களா?"

"கொடுப்பாங்க. ஆனா, இவங்க பணம் வாங்கிக்கிட்டு சேத்துக்கற பையன்களை, ஆசிரியர்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு பாஸ் பண்ண வைக்கணும். இல்லேன்னா, அவங்களுக்கு வேலை போயிடும். அதுக்கு பயந்துகிட்டு, ஆசிரியர்கள் எல்லாரும், குறைஞ்ச மார்க் வாங்கற பையன்களுக்கு மாலை வேளையிலேயும், சனி ஞாயிறுகளிலேயும் தனியா வகுப்பு எடுத்து, பரீட்சையில எப்படியோ பாஸ் மார்க் வாங்கற அளவுக்கு கோச் பண்ணணும். ஆண்டு விடுமுறையின்போதெல்லாம் கூட, ஆசிரியர்களை கல்லுரிக்கு வரவழைச்சு, வேலை வாங்குவாங்க. கல்லூரி வேலை மட்டும் இல்லாம, இவங்களோட மத்த கம்பெனி வேலைகளையெல்லாம் கூட செய்யச் சொல்லுவாங்களாம்!"

"அடக் கடவுளே! நமக்குக் கொடுமை நடக்குதுன்னு நான் நினைச்சா, ஆசிரியர்களுக்கு அதுக்கு மேல கொடுமை நடக்குதே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"இங்கே வேலை செய்யற ஒரு பேராசிரியர் எனக்குத் தெரிஞ்சவர். அவர் எங்கிட்ட அடிக்கடி இதையெல்லாம் சொல்லிப் புலம்புவாரு."

"ஈவு இரக்கம் இல்லாத இந்த மனுஷனைக் கல்வி வள்ளல், ஏழைகளுக்குக் கல்வி கொடுக்கறதுக்குன்னே அவதரிச்சவர்னுல்லாம் அநியாயமாப் புளுகறாங்களே, இது அடுக்குமா?" என்றார் கருணாகரன், ஆற்றாமையுடன்.

"...கல்வியைத் தன் கண்களாக மதித்துப் போற்றி வருவதால்தான், நம் கல்வி வள்ளலுக்கு அவருடைய 70 வயதிலும் கண்ணாடி போட்டுக் கொள்ளத் தேவை இல்லாத அளவுக்குக் கண்பார்வை கூர்மையாக இருக்கிறது..."

'கல்வி வள்ளலைப்' புகழ்ந்து பேசப்பட்ட பேச்சுக்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)

குறள் 575:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

பொருள்: 
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாக இருப்பது கண்ணோட்டம் (இரக்கம், கருணை) என்னும் பண்பே, அது இல்லையானால் அது கண் என்று கருதப்படாமல், புண் என்றே கருதப்படும்.

Read 'Meenakshi's Employer' the English version of this story by the same author.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...