Saturday, April 2, 2022

564. வந்தார், சென்றார்!

"புது ஜெனரல் மானேஜர் ரொம்பத் திறமையானவர் போல இருக்கே!" என்றார் ரீஜனல் மானேஜர் கங்காராம்.

"அப்படியா சொல்றே?" என்றார் பொது மேலாளரின் தனிச் செயலர் மூர்த்தி, சிரித்துக் கொண்டே.

இரண்டு மூத்த அதிகாரிகளும் தங்கள் இளம் வயதிலிருந்தே அந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வருபவர்கள்.

"உனக்கு இது நல்லாத் தெரிஞ்சிருக்கணுமே! அவரோட எக்சிக்யூடிவ் செகரட்டரிங்கற முறையில, நீ எப்பவும் அவர் பக்கத்திலேயே இருக்கியே! நான் இப்பதான் அவரை முதல்ல சந்திக்கிறேன்" என்றார் கங்காராம்.

அப்போது மூர்த்தியின் இன்டர்காம் ஒலித்தது. அதை எடுத்துக் கேட்ட மூர்த்தி, "சரி சார்!" என்று சொல்லி விட்டு, கங்காராமைப் பார்த்து, "சார் உன்னை உள்ளே வரச் சொல்றாரு. ஆல் தி பெஸ்ட்!" என்றார், சிரித்துக் கொண்டே.

த்து நிமிடங்களுக்குப் பிறகு, பொது மேலாளரின் அறையிலிருந்து வெளியே வந்த கங்காராமின் முகம் சிவந்திருந்தது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்தார்.

"என்ன கங்கா? உள்ளே ஏசி வேலை செய்யலியா?" என்றார் மூர்த்தி, சிரிப்பை அடக்க முடியாமல் வாயைக் கையால் மூடிக் கொண்டே.

"உள்ளே நுழைஞ்சப்ப ஏசி ரொம்ப அதிகமா இருந்த மாதிரி இருந்தது. அஞ்சு நிமிஷத்துக்குள்ள அறை சூடாயிடுச்சு!" என்ற கங்காராம், மூர்த்தியின் அருகில் வந்து, "என்ன, மனுஷன் இப்படிக் காய்ச்சி எடுக்கறாரு! நான் இப்பதான் அவரை முதல்ல பாக்கறேன். எல்லாரும் அவரைப் பத்தி ரொம்பப் புகழ்ந்து பேசினாங்க. ஆனா, மனுஷன் வாய்க்குள்ள எரிமலையே இருக்கே! அவர் வாயிலேந்து பேச்சு வெளியில வரச்சே, எரிமலைக் குழம்பு மாதிரி இருக்கு, ஆனா, வெளியில வந்தப்பறம், சாக்கடைத் தண்ணி மாதிரி நெடி அடிக்குது! ஒரு சினிமாவில விவேக் சொல்லுவாரே 'வாய்க்குள்ள ஒரு கூவத்தையே வச்சிருக்காங்க'ன்னு, அது மாதிரி இருக்கு! நீ எப்படி சமாளிக்கிற?" என்றார், மெல்லிய குரலில்.

"இன்டர்காம் ஆன்ல இருக்கு! நீ பேசினதெல்லாம் சார் காதுல விழுந்திருக்குமே!" என்றார் மூர்த்தி, தொலைபேசியின் வாயைக் கையால் மூடியபடி.

"ஐயையோ!" என்றார் கங்காராம், பதற்றத்துடன்.

"பதட்டப்படாதே! சும்மா சொன்னேன். உன் அலறலைக் கேட்டு சார் வெளியில வந்துடப் போறாரு!" என்றார் மூர்த்தி, சிரித்தபடி.

"நல்லவேளை. இப்படியா பயமுறுத்துவ!"

"சார் என்ன சொன்னார்?"

"எல்லா ரீஜனையும் விட என் ரீஜன்லதான் விற்பனை அதிகம், லாபமும் அதிகம். ஆனா, என்னோட செயல்பாடு ரொம்ப சராசரியா இருக்குன்னு சொல்றாரு. நான் மாட்டு வண்டி வேகத்தில போறேனாம். அவர் ஜெட் வேகத்தில பறக்கறவராம். அவரோட ஜெட்ல ஏறணும்னா, நான் மாட்டு வண்டியைத் தூக்கிப் போட்டுட்டு, ஜெட் வேகத்தில பறக்கணுமாம்! இதுக்கு என்ன அர்த்தம்னே எனக்குப் புரியல!" என்று பொரிந்து தள்ளினார் கங்காராம்.

"அவர் சொன்னா சொல்லிட்டுப் போறாரு! நீ மாடுகளுக்கு புண்ணாக்கு, தண்ணி எல்லாம் கொடுத்து, நல்லாப் பாத்துக்க. இல்லேன்னா, உன் வண்டி ஓடாது!"

"நான் ஏற்கெனவே கொதிச்சுப் போயிருக்கேன். நீ வேற என்னைக் கிண்டல் பண்றியா? ஆனா, மத்த ரீஜனல் மானேஜர்லாம்  இவரை ரொம்பப் புகழ்ந்து பேசினாங்களே, அது எப்படி?"

"எல்லாம் வால் அறுந்த நரி கதைதான். நீ மட்டும் என்ன செய்யப் போற? உன் ஆஃபீசுக்குத் திரும்பிப் போனப்பறம், உன்னோட ஸ்டாஃப்கிட்ட, 'ஜி.எம். ரொம்ப டைனமிக், என்னை நல்லா உற்சாகப்படுத்தினாரு'ன்னு சொல்லப் போற!" என்றார் மூர்த்தி.

"அது என்னவோ உண்மைதான்! இவரோட எப்படி குப்பை கொட்டப் போறேன்னு தெரியலியே!" என்றார் கங்காராம்.

"குப்பையெல்லாம் நீ கொட்ட வேண்டாம். அவரே கொட்டுவாரு, உன் தலையில! உன் மேல படாம, நீ ஒதுங்கிக்கணும். அவ்வளவுதான்!" என்ற மூர்த்தி, சற்றுக் குனிந்து, "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த ஆள் இது மட்டும் அஞ்சாறு கம்பெனி மாறிட்டாரு. இவரால எங்கேயுமே நிலைச்சு நிக்க முடியல!" என்றார், ரகசியமாக.

"ஆமாம், நீ எப்படி சமாளிக்கற?" என்று கங்காராம் கேட்டுக் கொண்டிருந்தபோதே, மூர்த்தியின் இன்டர்காம் ஒலித்தது. 

"போய் சமாளிச்சுட்டு வரேன்" என்றபடியே உள்ளே சென்றார் மூர்த்தி.

சில மாதங்கள் கழித்து ஒருநாள், கங்காராம் தன் அலுவலகத்தில் இருந்தபோது, அவருக்கு மூர்த்தியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"என்ன? ஜி.எம், என்னை வரச் சொல்றாரா?" என்றார் கங்காராம், பாதி வேடிக்கையாகவும், பாதி கவலையாகவும்.

"இனிமே அவர் உன்னை வரச் சொல்ல மாட்டாரு. அவரே போகப் போறாரு!"

"என்ன ஆச்சு?"

"இவர் வந்தப்பறம் கம்பெனி செயல்பாடு மோசமா ஆயிடுச்சு. ரீஜனல் மானேஜர்கள் எல்லாம் டீமோடிவேட் ஆயிட்டாங்க. அதனால விற்பனையும் குறைஞ்சுடுச்சு, லாபமும் குறைஞ்சுடுச்சு. இவரோட அவமரியாதையான பேச்சையெல்லாம் பத்தி, சில ரீஜனல் மானேஜர்கள், டைரக்டர்கள்கிட்ட முறையிட்டிருக்காங்க. எங்கிட்ட கூட சில டைரக்டர்கள் விசாரிச்சாங்க. நேத்திக்கு நடந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில, அவரைப் பதவியை விட்டு நீக்க முடிவு பண்ணிட்டாங்க. ரீஜனல் மானேஜர்கள்ள சீனியரா இருக்கற சங்கரை, தற்காலிக ஜி.எம்.-ஆ நியமிச்சிருக்காங்க. அவர் செயல்பாடு நல்லா இருந்தா, அவரே தொடர்ந்து நீடிப்பாரு. இப்பதான் எனக்கு ஃபேக்ஸ் வந்தது. சங்கர் பதவி ஏத்துக்கிட்ட அப்புறம்தான், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். உனக்குத்தான் முதல்ல சொல்றேன். வாழ்த்துக்கள்!" என்றார் மூர்த்தி.

"எனக்கு எதுக்கு வாழ்த்துகள்? அவர் பிடியிலேந்து விடுபட்டதுக்கா? அப்ப, உனக்குத்தான் முதல்ல  வாழ்த்து சொல்லணும். ஆனா, நம்ம கம்பெனிக்கே நல்லது நடந்திருக்கே! நாம ரெண்டு பேரும் சேர்ந்து, நம்ம கம்பெனிக்கு வாழ்த்து சொல்லுவோம்!" என்றார் கங்காரம். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(மக்களுக்கு அச்சமூட்டும் செயல்களைச் செய்யாமை)

குறள் 564:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

பொருள்: 
நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...