"ஏங்க, உங்க அண்ணன்கிட்ட நீங்க இதுவரையிலும் எந்த உதவியும் கேட்டதில்லை. இந்த ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன். நம்ம பையனோட படிப்புக்காகத்தானே கேக்கப் போறோம்?" என்றாள் சரளா.
"ஒரே வீட்டில என்னோட சிரிச்சுப் பேசி, விளையாடி, சண்டை போட்டு, நெருக்கமா இருந்த அண்ணன்தானா இவன்னு எனக்கே சந்தேகமா இருக்கு. அந்த அளவுக்கு மாறிட்டான். அவன் வீட்டுக்குப் போறதுக்கே எனக்குத் தயக்கமா இருக்கு!" என்றான் குமரன்.
"சின்ன வயசில இருந்த மாதிரியே எப்பவுமே இருப்பாங்களா? என்ன இருந்தாலும், தம்பிங்கற பாசம் அவருக்கு இல்லாம இருக்காது. நீங்க போய், கேட்டுத்தான் பாருங்களேன்" என்றாள் சரளா.
"பாசமா, அவனுக்கா? அதெல்லாம் பணம் வரத்துக்கு முன்னாடி. கையில நாலு காசு வந்ததும், பணத்தைப் பாதுகாக்கிற பூதம் மாதிரி ஆயிட்டான் அவன்! அம்மான்னு நான் ஒருத்தி இருக்கறதையே அவன் மறந்துட்டான். அம்மா தம்பி வீட்டில இருக்காளே, நம்ம வீட்டில கொஞ்ச நாள் வந்து இருக்கச் சொல்லணுங்கற எண்ணம் கூட அவனுக்கு இல்ல. நானா அங்கே போன கூட, ஏதோ வேண்டாத விருந்தாளி வந்துட்ட மாதிரி முகத்தைக் கடுகடுன்னு வச்சுப்பான். எங்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டான். அவன் பொண்டாட்டிதான் என்னை மதிச்சு சோறாவது போடுவா! அதனாலதான் நான் அங்கே போறதையே நிறுத்திட்டேன். அவன் உனக்கு உதவி செய்யப் போறானா என்ன?" என்றாள் குமரனின் தாய் காந்திமதி, ஆற்றாமையுடன்.
"எதுக்கும் நான் ஒரு தடவை அண்ணனைப் பார்த்து உதவி கேட்டுட்டு வரேன். சின்ன வயசில என்கிட்ட எவ்வளவோ பாசமா இருந்தவன்தானே! அதில கொஞ்சம் கூடவா மீதி இல்லாம போயிடும்?" என்றான் குமரன்
"ரமேஷுக்கு எஞ்சினீரிங் காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு. ஆரம்பத்தில நிறையப் பணம் கட்ட வேண்டி இருக்கு. அதுக்கு மட்டும் பணம் தேவைப்படுது. அடுத்த செமிஸ்டர் எல்லாம் நானே பாத்துப்பேன். ஆஃபீஸ்ல பி எஃப் லோன் போட்டிருக்கேன். அடுத்த மாசம் வந்துடும். அது வந்ததும், உன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடறேன்!" என்றான் குமரன்.
"குமரா! பிசினஸ்காரங்கன்னா, கட்டுக் கட்டாப் பணம் வச்சுக்கிட்டிருக்கறதா எல்லாரும் நினைக்கிறாங்க. அது தப்பு. நானே பாங்க்ல கடன் வாங்கித்தான் பிசினஸை நடத்திக்கிட்டிருக்கேன். உன் அண்ணி வீட்டுச் செலவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கேட்டா கூட, சில சமயம் எங்கிட்ட இருக்காது. சில சமயம் பிசினஸ்ல நான் பணம் கொடுக்க வேண்டியவங்களுக்கு செக் கொடுத்துட்டு, அந்த செக் பாங்க்குக்கு வரப்ப, என் மானேஜர் பாங்க்குக்குப் போய், அந்த செக்கை பாஸ் பண்ணச் சொல்லி, பாங்க் மானேஜர்கிட்ட கெஞ்ச வேண்டி இருக்கும், நீ உன் பையனை எஞ்சினியரிங் காலேஜில சேர்த்துட்டு ஃபீஸ் கட்டப் பணம் தேடிக்கிட்டிருக்கியே, அந்த மாதிரி!" என்றான் குமரனின் அண்ணன் ஆதி.
குமரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அப்போது ஒரு வேலையாள் தயக்கத்துடன் அங்கே வந்து, "ஐயா! அந்த அனாதை இல்லத்திலேந்து மறுபடியும் வந்திருக்காங்க!" என்றான்.
"போன தடவை வந்தப்பவே முடியாதுன்னு சொல்லி அனுப்பி இருக்கணும்! அடுத்த மாசம் வாங்கன்னு ஒரு பேச்சுக்குச் சொன்னதைப் பிடிச்சுக்கிட்டு கரெக்டா வந்துட்டாங்க! நான் வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன், இப்ப பாக்க முடியாதுன்னு சொல்லிடு" என்று வேலைக்காரனிடம் கூறிய ஆதி, குமரனிடம் திரும்பி, "அப்புறம், குமரா! வீட்டில எல்லாரும் சௌக்கியம்தானே! அம்மாவை நல்லாப் பாத்துக்க. நான் கொஞ்சம் வெளியில போகணும். அப்புறம் பாக்கலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தான்.
'புதையலைக் காக்கிற பூதம் மாதிரி' என்று தன் அம்மா சொன்னது எவ்வளவு பொருத்தம்!' என்று நினைத்துக் கொண்டே எழுந்தான் குமரன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(மக்களுக்கு அச்சமூட்டும் செயல்களைச் செய்யாமை)
குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
No comments:
Post a Comment