சரவணன் அந்த அலுவலகத்தில் சேர்ந்த பிறகு அவனுக்குப் பலரிடம் நட்பு ஏற்பட்டாலும், பாலாஜியைத்தான் தன் சிறந்த நண்பன் என்று அவன் தன் மனைவி தேவியிடம் குறிப்பிட்டிருந்தான்.
அலுவலகம் முடிந்ததும், இருவரும் ஓட்டலில் காப்பி அருந்தி விட்டுச் சற்று நேரம் பேசி விட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புவார்கள்.
ஒருநாள் பாலாஜி அவர்கள் விட்டுக்கு வந்தான். அப்போது அவன் தன்னிடமும், குழந்தைகளிடமும் கலகலப்பாகவும், வேடிக்கையாகவும் பேசியதைக் கேட்டதும், பாலாஜி பற்றித் தன் கணவன் கூறியது உண்மைதான் என்று தேவிக்குத் தோன்றியது.
கிளம்பும்போது, "நீங்க போடற காப்பிக்காகவே நான் அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவேன்!" என்று தேவியிடம் சொல்லி விட்டுப் போனான் பாலாஜி.
"ரொம்ப கலகலப்பாப் பேசறாரே! உங்க ஆஃபீஸ் நண்பர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்களா?" என்றாள் தேவி, சரவணனிடம்.
"ஒண்ணு ரெண்டு பேர்தான் இப்படி ஜாலியாப் பேசுவாங்க. ஆனா, இவனை மாதிரி இவ்வளவு கலகலப்பா வேற யாரும் பேசமாட்டாங்க!" என்றான் சரவணன்.
அதற்குப் பிறகும் இரண்டு மூன்று தடவை அவர்கள் வீட்டுக்கு வந்தான் பாலாஜி. அவன் மூன்றாம் முறை வந்து விட்டுப் போனபிறகுதான், தங்கள் இருவரையும் தன் வீட்டுக்கு வரச் சொல்லி ஒருமுறை கூட அவன் அழைக்கவில்லையே என்று தேவிக்குத் தோன்றியது.
ஆனால் உடனேயே, 'அவர் மட்டும் நாம் கூப்பிட்டா வந்தாரு? அவராகத்தானே வந்தாரு? அது மாதிரி நாமே வரணும்னு நினைக்கிறார் போல இருக்கு!' என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
பெரிதாகப் பெய்த மழையால், அவர்கள் வீடு இருந்த பகுதியில் மழைநீர் தேங்க ஆரம்பித்திருந்தது. மழை இன்னும் வலுக்கும் என்று சொன்னார்கள். அவர்கள் இருந்த வீடு தரைத்தளத்தில் இருந்தது. தொடர்ந்து மழை பெய்தால், வீட்டுக்குள் தண்ணீர் வந்து விடும் போல் இருந்தது.
அன்று சனிக்கிழமை. அலுவலக விடுமுறை என்பதால், சரவணன் வீட்டில்தான் இருந்தான்.
என்ன செய்வது, வேறு எங்காவது போகலாமா என்று கணவன் மனைவி இருவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
"உங்க நண்பர் பாலாஜி வீட்டில ரெண்டு நாள் தங்க முடியுமான்னு கேட்டுப் பாருங்களேன். அவர் மூணாவது மாடியிலதானே இருக்கறதாச் சொன்னாரு? வீட்டில, அவரும் அவர் மனைவியும் மட்டும்தானே இருக்காங்க?" என்றாள் தேவி.
சரவணன் சற்றுத் தயங்கி விட்டு, பாலாஜிக்கு ஃபோன் செய்தான்.
தங்கள் பிரச்னையைக் கூறி மழை விடும் வரை இரண்டு நாட்கள் பாலாஜி வீட்டில் தங்கிக் கொள்ள முடியுமா என்று சரவணன் கேட்டபோது, "ஓ. நிச்சயமா!" என்ற பாலாஜி, "இரு, ஒரு நிமிஷத்தில நானே உன்னைக் கூப்பிடறேன்!" என்றான்.
ஆனால், அரை மணி நேரம் ஆகியும், அவனிடமிருந்து ஃபோன் வரவில்லை,
சரவணன் பாலாஜிக்கு இரண்டு முறை ஃபோன் செய்தான். ஆனால் பாலாஜி ஃபோனை எடுக்கவில்லை.
"அவனுக்கு சிக்னல் கிடைக்கலியோ என்னவோ!" என்றான் சரவணன். அப்படி இருக்கும் என்று அவனே நினைக்கவில்லை என்பது அவன் பேசிய தொனியிலேயே தெரிந்தது.
சற்று நேரம் கழித்து, சரவணனின் ஃபோன் அடித்தது. "பாலாஜியாத்தான் இருக்கும்!" என்று சொல்லிக் கொண்டே ஃபோனை எடுத்தான் சரவணன்.
"யாரு ...மணியா? ...உங்களுக்கு எப்படி என் ஃபோன் நம்பர் தெரியும்?... ஓ, முன்னாடியே ஒரு தடவை ஃபோன் பண்ணி இருக்கீங்களா? சாரி. நான் உங்க நம்பரை சேவ் பண்ணல.... ஆமாம். பிரச்னை இருக்கு. ... நாங்களே எங்கே போகலாம்னுதான் யோசிச்சுக்கிட்டிருக்கோம்! ... அப்படியா?...வெரி கைண்ட் ஆஃப் யூ.... இல்ல..ஃபார்மாலிடிக்காக இல்ல, உண்மையாத்தான் சொல்றேன். இது ஒரு பெரிய உதவி இல்லையா? ... நிச்சயமா...நன்றி!"
"'யாருங்க?" என்றாள் தேவி, சரவணின் முகத்திலிருந்த மகிழ்ச்சியைப் பார்த்து.
"மணி. இவரும் என் ஆஃபீஸ் நண்பர்தான். ஆஃபீஸ்ல அப்பப்ப பேசிப்போம். ஆனா அவ்வளவு நெருக்கம் இல்ல. நம்ம ஏரியாவில தண்ணி தேங்கி இருக்குன்னு டிவியில பாத்துட்டு, அவர் வீட்டில வந்து இருக்கச் சொல்றாரு!" என்று சரவணன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவன் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதைப் பார்த்து விட்டு, "அவர் வீட்டு அட்ரஸ் அனுப்பி இருக்காரு. எவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்டு ஃபோன் பண்ணிக் கூப்பிட்டிருக்காரு பாரு! இவரோட நட்பு இவ்வளவு ஆழமா இருக்கும்னு புரிஞ்சுக்காம போயிட்டேனே!" என்றான் சரவணன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
பொருள்:
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; உளமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
No comments:
Post a Comment