Saturday, April 9, 2022

567. கூர் மழுங்கிய ஆயுதம்

"சந்திரபிரகாஷ் நம்ம கட்சியில ஒரு மூத்த உறுப்பினர். எந்தப் பதவியையும் எதிர்பாக்காம, பல வருஷங்களா நம்ம கட்சிக்காக உழைக்கறவரு. உன் அப்பாவுக்கு வலது கையா இருந்தவரு. அவரோட ஆலோசனைகளுக்கு உன் அப்பா ரொம்ப மதிப்பு கொடுப்பாரு. தன்னோட அரசியல் வெற்றிகள் எல்லாத்திலேயும் சந்திரபிரகாஷுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டுன்னு உன் அப்பா வெளிப்படையா பல தடவை சொல்லி இருக்காரு. அப்படிப்பட்ட ஒத்தரைக் கண்டிச்சு நீ அறிக்கை விட்டது பெரிய தப்பு!" என்றார் ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் சர்மா.

வயது மற்றும் அனுபவம் காரணமாக, சர்மாவுக்கு அந்தக் கட்சியில் ஒரு தனி மரியாதை உண்டு. கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியில் எல்லா அதிகாரமும் படைத்தவருமான ராகவ் உட்பட, அனைவரையும் சர்மா ஒருமையில்தான் பேசுவார், உரிமையுடன் கண்டிப்பார்.

"நான் கட்சியை சரியா வழிநடத்தலேன்னு அவர் தொலைக்காட்சியில வெளிப்படையா பேட்டி கொடுக்கறாரு. நான் அவரைக் கண்டிக்கக் கூடாதா?" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் ராகவ். அவர் தந்தை இறந்த பிறகு, அவர் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்குக் கட்சியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் 

"அவர் அப்படிச் சொல்லல. சமீபத்தில நடந்த இடைத்தேர்தல்கள்ள கட்சி தோத்ததுக்கு தலைமைதான் காரணமான்னு பேட்டி எடுத்தவர் கேட்டதுக்கு, 'தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கு' ன்னு பொதுவா சொல்லி மழுப்பிட்டாரு. உனக்குச் சாதகமான பதில்தான் அது!"

"ஆளும் கட்சியோட அதிகார துஷ்பிரயோகத்தாலதான் அவங்க இடைத்தேர்தல்கள்ள வெற்றி அடைஞ்சாங்கன்னு நான் சொல்லிக்கிட்டிருக்கச்சே, அவரும் அதையேதானே சொல்லி இருக்கணும்? தோல்விக்குக் கட்சித் தலைமை காரணம் இல்லைன்னு எனக்கு ஆதரவாப் பேசி இருக்கணும் இல்ல? பல காரணங்கள் இருக்குன்னு சொன்னா, என்ன அர்த்தம்?" என்றார் ராகவ், கோபமாக.

"ராகவ்! அடுத்த தேர்தல்ல நாம ஜெயிக்கணும். அதுக்கு நீ கட்சியை வலுப்படுத்தணும். சந்திரபிரகாஷ் தேர்தல் உத்திகளை வகுக்கறதில பெரிய சாணக்கியர். உன் அப்பா பொதுச் செயலாளரா இருந்தப்ப, சந்திரபிரகாஷ்தான் அவருக்கு அடுத்த இடத்தில இருந்தாரு. ஆனாலும், உன் அப்பாவுக்குப் பிறகு நீதான் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தணும்னு, உன்னை உறுதியா ஆதரிச்சவர் அவர். அவரோட உதவி உனக்குக் கண்டிப்பா வேணும். நீ அவரை அவமதிக்கிற மாதிரி அறிக்கை விட்டா, அவர் ஒதுங்கிப் போயிடுவாரு. அது கட்சிக்குத்தான் நஷ்டம்."

"அவர்கிட்ட நான் மன்னிப்புக் கேக்கணும்னு சொல்றீங்களா?"

"மன்னிப்புக் கேட்க வேண்டாம். அவர் ரொம்ப பெருந்தன்மை உள்ளவர். அவர் அதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டாரு. இனிமே நீ அவரை மதிச்சு நடந்துகிட்டா போதும். நீ வருத்தப்பட்டதா, நான் அவர்கிட்ட சொல்றேன்" என்றார் சர்மா.

"அதெல்லாம் வேண்டாம். இனிமே இது மாதிரி நடக்காது!" என்றார் ராகவ்.

அதற்குப் பிறகும், பல மூத்த தலைவர்கள் ராகவ் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களால் அவமானப்படுத்தப்படுவதும், கடுமையாக விமரிசிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தது.

டுத்த தேர்தலில் ராகவின் ஜனநாயக மக்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஒரு தேர்தல் வியூக நிபுணர் ராகவின் கட்சிக்கு உத்திகளை வகுத்துக் கொடுத்தார். கடந்த காலத்தில் அந்த நிபுணரின் ஆலோசனை பெற்ற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்ததால், அவருடைய ஆலோசனை ஜனநாயக மக்கள் கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத விதத்தில் அமைந்தன. ஜனநாயக மக்கள் கட்சி தோல்வியைத் தழுவியது. தோல்வியின் விளிம்பில் இருந்த ஆளும் கட்சி, எப்படியோ கரையேறி, மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டது.

"தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் சொல்றாரு உன் ஆலோசகர்?" என்றார் சர்மா.

"அவர் என்னோட ஆலோசகர் இல்ல, கட்சியோட ஆலோசகர். கட்சியோட செயற்குழு அனுமதி கொடுத்துத்தான் அவரை நியமிச்சோம். ரெண்டு சதவீதத்தில நாம வெற்றியை இழந்துட்டோம்! இது ஒரு பெரிய இழப்பு இல்லை" என்றார் ராகவ்.

"குதிரைப் பந்தயத்தில ஜெயிக்க, குதிரை மூக்கை மட்டும் நீட்டி இருந்தாக் கூடப் போதும்! தேர்தலும் அப்படித்தான். தேர்தல்ல நாம தோத்ததுக்கு ரெண்டு காரணம் இருக்கு."

"என்ன ரெண்டு காரணம்?"

"முதல் காரணம், கட்சிக்கு உண்மையா உழைச்சவங்களை அற்பக் காரணங்களுக்காகக் குத்தம் சுமத்திக் கட்சியை விட்டு வெளியேத்தினது, ரெண்டாவது காரணம், சந்திரபிரகாஷ் மாதிரி மூத்த தலைவர்களைக் கடுமையாப் பேசி, அவங்களை ஒதுங்கிப் போக வச்சது. இதெல்லாம் நம் ஆயுதங்களைக் கூர் மழுங்க வச்சுடுச்சு. கூர் மழுங்கின ஆயுதங்களோட ஒரு அரசன் போர்ல இறங்கினா, பலம் இல்லாத எதிரி கூட அவனைத் தோக்கடிச்சுடுவானே!" என்றார் சர்மா.  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(மக்களுக்கு அஞ்ஞமூட்டும் செயல்களைச் செய்யாமை)

குறள் 567:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

பொருள்: 
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும், அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...