"என்னத்தைப் பெருக்கற? அந்த மூலையில அழுக்கு அப்படியே இருக்கு பாரு!" என்றாள் கயல்விழி.
வேலைக்காரி மீனாட்சி, எஜமானி காட்டிய இடத்தைப் பார்த்தாள். அங்கே அழுக்கு எதுவும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆயினும் எஜமானி சொன்னதற்காக, அந்த இடத்தை இன்னொரு முறை பெருக்கி விட்டு வந்தாள்.
பெருக்கி முடித்ததும், "அம்மா! எனக்கு முதுகுவலி ரொம்ப அதிகமா இருக்கு. நாளைக்குத் துடைச்சுடறேனே!" என்றாள்.
"பெருக்கிட்டுத் துடைக்காம இருந்தா எப்படி? தினமும் துடைச்சாதான் தரை பளபளப்பா இருக்கும்? உனக்கு முதுகுவலி எப்பவும்தான் இருக்கு. நாளைக்கு மட்டும் இருக்காதுன்னு என்ன நிச்சயம்?"
ஏன் கேட்டோம் என்று நினைத்துக் கொண்டே, துடைப்பதற்காகத் தண்ணீரையும், துடைக்கும் துணியையும் எடுக்க ஆயத்தமானாள் மீனாட்சி.
"நான் அஞ்சாறு வீட்டில வேலை செய்யறேன். இதுக்கு முன்னாலேயும் பல வீடுகள்ள வேலை செஞ்சிருக்கேன். ஆனா, இந்தக் கயல்விழி மாதிரி இரக்கம் இல்லாத ஒரு மனுஷியை நான் பார்த்தில்ல!" என்றாள் மீனாட்சி, தன் தோழி ராணியுடம்.
மீனாட்சியும், ராணியும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். சிறுமியாக இருந்தபோதே, தன் அம்மாவுக்குத் துணையாக வீட்டு வேலையில் இறங்கிய மீனாட்சி, அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போனதும், படிப்பை நிறுத்தி விட்டு, வீட்டு வேலை செய்வதையே தன் முழு நேர வேலையாக ஆக்கிக் கொண்டு விட்டாள்.
ராணி பட்டப்படிப்பு முடித்து விட்டு, ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள். இருவரும் அருகாமையில் வசித்ததால், அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள்.
"கயல்விழியா? பேரு வித்தியாசமா இருக்கே! அவங்க அப்பா ஒரு தமிழ்ப் பிரியரா இருந்திருப்பார் போலருக்கு!" என்றாள் ராணி.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவங்க பேரு சிவகாமி. அவங்க கண் அழகில மயங்கிதான், அவங்க கணவர் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்! அவங்க கண்ணு மீன் மாதிரி இருக்குன்னுட்டு, அவங்க கணவர் அவங்களை செல்லமா கயல்விழின்னு கூப்பிடுவாராம். அதை யாரோ கேட்டுட்டு, கலாட்டா பண்றதுக்காக, அவங்களை கயல்விழின்னு கூப்பிட, அந்தப் பேரு பரவி எல்லாரும் அவங்களைக் கயல்விழின்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்களாம். அதனால, அந்தப் பேரே அவங்களுக்கு நிலைச்சுட்டுதாம். இதை அவங்க அவங்களோட சிநேகிதிகிட்ட ஒருநாள் சொல்லிக்கிட்டிருந்தாங்க. என் காதில விழுந்தது" என்றாள் மீனாட்சி.
"ஒத்தரோட அன்பு, இரக்கம் எல்லாம் அவங்க கண்லேயே தெரியும்னு சொல்லுவாங்க. கண்ணதாசன் கூட 'கண்ணிலே அன்பிருந்தால், கல்லிலே தெய்வம் வரும்'னு ஒரு பாட்டு எழுதி இருக்காரு. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாத இவங்களுக்குக் கண் அழகா இருந்தா என்ன, வேற எப்படி இருந்தா என்ன?"
"அது என்னவோ சரிதான். அவங்க கண்ணு அழகாத்தான் இருக்கும். ஆனா அவங்க இரக்கம் இல்லாம நடந்துக்கும்போது, அவங்க கண்ணைப் பாத்தா, 'இவ்வளவு அழகா இருக்கற கண்ல, துளி கூட ஈவு இரக்கம் இல்லையேன்னு எனக்குத் தோணும்!" என்றாள் மீனாட்சி,
"ஒண்ணு தெரியுமா, மீனாட்சி? நீயும் ஒரு கயல்விழிதான்!" என்றாள் ராணி.
"என்னடி? நானும் ஈவு இரக்கம் இல்லாதவன்னு சொல்றியா?"
"அப்படிச் சொல்லலடி. மீனாட்சிங்கறது வடமொழிப் பேரு, அதைத் தமிழ்ல சொன்னா, அதுதான் கயல்விழி!" என்று சொல்லிச் சிரித்தாள் ராணி.
"என்னவோ, எனக்கென்ன தெரியும்? நான் உன்னை மாதிரி படிச்சிருக்கேனா என்ன? படிச்சிருந்தா, ஏன் இது மாதிரி ஈவு இரக்கம் இல்லாத ஜன்மங்ககிட்ட மாட்டிக்கிட்டுக் கஷ்டப்படப் போறேன்!" என்றாள் மீனாட்சி, பெருமூச்சுடன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)
குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
No comments:
Post a Comment