"அதான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கேனே, அப்புறம் எதுக்கு என்னைப் பாக்க வந்தீங்க?" என்று கடுமையான குரலில் கேட்ட சபாபதி, கண்ணனைப் பார்த்து, "இவர் யாரு?" என்றார், எச்சரிக்கை உணர்வுடன்.
"இவர் கண்ணன். என்னோட பார்ட்னர்" என்றார் குருசாமி.
கண்ணன் தனக்கு வணக்கம் தெரிவித்ததைக் கண்டுகொள்ளாத சபாபதி, "புதுசா இவரை பார்ட்னரா எடுத்துக்கிட்டிருக்கீங்களா? அப்ப, இவர் போடற முதலை வச்சு, என் கடனை அடைக்கிறேன்னு சொல்லத்தான் வந்திருக்கீங்களா? சந்தோஷம். எப்ப பணம் கிடைக்கும்?" என்றார், குருசாமியிடம்.
"இல்ல. இவர் முதல் போடல. ஒர்க்கிங் பார்ட்னராத்தான் சேந்திருக்காரு. நிறைய அனுபவம் உள்ளவர். நிறைய யோசனைகள் வச்சிருக்காரு. அவர் யோசனைகளைப் பயன்படுத்தி, சீக்கிரமே தொழிலை இன்னும் நல்ல நிலைக்குக் கொண்டு வரப் போறோம்."
"சந்தோஷம். என் கடனை அடைக்க ஏதாவது யோசனை இருக்கா இவர்கிட்ட?" என்றார் சபாபதி, கேலியாக.
அவர் கேலியை அலட்சியம் செய்த குருசாமி, "சார்! உங்ககிட்ட நான் எவ்வளவோ வருஷமா வியாபாரத் தொடர்பு வச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் .
"வியாபாரத் தொடர்பு இல்ல, குருசாமி! நீங்க வியாபாரம் செய்யறீங்க. நான் கடன் கொடுக்கறேன். அவ்வளவுதான்!" என்றார் சபாபதி, கடுமையான குரலில்.
"நான் சொல்ல வந்தது உங்ககிட்ட நான் எத்தனையோ தடவை கடன் வாங்கி, தவறாம வட்டி கொடுத்துக்கிட்டு வந்திருக்கேன். அதை நேரத்தில திருப்பிக் கொடுத்திருக்கேன்..."
"இல்லை. ஒரு தடவை கூட நேரத்தில திருப்பிக் கொடுத்ததில்ல!" என்று இடைமறித்தார் சபாபதி.
"தாமதமானப்ப, அதுக்கு அதிக வட்டி கொடுத்திருக்கேன்."
"கடன் பத்திரத்தில அப்படித்தானே சொல்லி இருக்கு! அதன்படி நீங்க அதிக வட்டி கொடுத்துத்தானே ஆகணும்? என்னவோ, நீங்களா விருப்பப்பட்டுக் கொடுத்த மாதிரி பேசறீங்க!"
"சார்! நான் சொல்ல வந்தது, இத்தனை வருஷமா நமக்குள்ள இந்த வியாபாரம், அதாவது இந்தக் கொடுக்கல் வாங்கல் சரியாத்தான் நடந்திருக்கு. உங்க பணம் பாதுகாப்பாத்தான் இருந்திருக்கு. ஆனா இந்த தடவை கொஞ்சம் தாமதமானதுக்காக, நான் செக்யூரிட்டியாக் கொடுத்த என்னோட வீட்டை அட்டாச் பண்றதுக்கு கோர்ட்ல கேஸ் போடப் போறதா, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்க. தயவு செஞ்சு, அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க. இன்னும் ரெண்டு மாசத்தில உங்க பணத்தை நான் முழுசா செட்டில் பண்ணிடறேன்" என்றார் குருசாமி, கெஞ்சும் குரலில்.
"ரெண்டு மாசத்துக்குள்ள கோர்ட்ல அட்டாச்மென்ட் ஆர்டர் வாங்கிடலாம்னு என் வக்கீல் சொல்லி இருக்கார். உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கறேன். அதுக்குள்ள பணத்தை, அன்னிவரைக்குமான வட்டியோட, செட்டில் பண்ணிடுங்க. இல்லேன்னா, கோர்ட்ல கேஸ் போட்டுடுவேன். உங்ககிட்ட மேற்கொண்டு பேசறதுக்கு எதுவும் இல்ல. நீங்க கிளம்பலாம்!" என்றார் சபாபதி, உறுதியான குரலில்.
சபாபதியின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், "நீங்க இவ்வளவு நேரம் இவர்கிட்ட பேசினதுக்கு, ஒரு மரத்துக்கு முன்னால நின்னு பேசி இருந்தா, அது கூட கொஞ்சம் அஞைஞ்சு கொடுத்திருக்கும்!" என்றார் கண்ணன், குருசாமியிடம்.
"அது சரி. நீங்க என் கூட வந்தீங்க, அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தீங்க, ஆனா எதுவுமே பேசலையே?" என்றார் குருசாமி.
"அவர் என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல. அவர்கிட்ட நான் என்னத்தைப் பேசறது? இவ்வளவு நாள் பழகி இருக்கீங்க, வாங்கின கடனையெல்லாம் வட்டியோட திருப்பிக் கொடுத்திருக்கீங்க. உங்க வீட்டை வேற செப்யூரிட்டியா கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு ரெண்டு மாசம் அவகாசம் கூடக் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. ஏன், ரெண்டு மாசம் பொறுத்துக்கறேன், அதுக்குள்ள நீங்க கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா, கோர்ட்டுக்குப் போவேன்னு சொல்லி இருக்கலாமே!" என்றார் கண்ணன்.
"என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். கொஞ்சமாவது இரக்கம் காட்டுவாருன்னு நினைச்சேன்."
"அவரால அது முடியாது!" என்றார் கண்ணன்.
"முடியாதா? ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் குருசாமி, சற்று வியப்புடன்.
"ஏன்னா, அவர்கிட்ட இரக்கம் என்கிற குணமே அடியோட இல்ல. அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தேன்னு சொன்னீங்களே, அவர் கண்ணைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன். அவர் கண்ல இரக்கத்தோட சாயை கொஞ்சம் கூட இல்லை. அதனால, அவர்கிட்ட பேசிப் பயன் இருக்காதுன்னுதான் நான் பேசாம இருந்தேன். கவலைப்படாதீங்க. ஏதாவது ஏற்பாடு செய்யலாம்" என்றார் கண்ணன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
No comments:
Post a Comment