Sunday, June 16, 2024

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்கள் உரிமைக் கட்சி' என்று ஒரு தனிக் கட்சியை ஆரம்பித்தார் சாந்தகுமார். 

தனிக்கட்சி துவங்கியது பற்றிப் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாலும், சாந்தகுமார் அது பற்றிக் கவலைப்படாமல், மன உறுதியுடன்  தன் கட்சியை நடத்தியதால், மக்கள் உரிமைக் கட்சிக்கு மக்களிடையே ஓரளவு செல்வாக்குக் கிடைத்தது. 

சாந்தகுமார் தன்மானம் உள்ளவர் என்று மதிக்கப்பட்டு,  'தன்மானத் தலைவர்' என்று அழைக்கப்பட்டார்.

கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் உரிமைக் கட்சி பத்து சதவீத வாக்குகளைப் பெற்று, அனைவரையும் வியக்க வைத்தது. அடுத்த தேர்தலில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் பெரிய கட்சிகள் விரும்பும் என்று ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் கணித்தனர்.

சாந்தகுமாரின் அரசியல் வளர்ச்சிக்கு இணையாக, அவர் மீது சில புகார்களும், குற்றச்சாட்டுகளும் நிலவி வந்தன. கட்டைப் பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற புகார்கள் பரவலாக எழ ஆரம்பித்தன.

அத்தகைய புகார்கள் பற்றி சாந்தகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அவை தன் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிற அரசியல் கட்சிகளால் பரப்பப்படும் பொய்ப் புகார்கள் என்று அவர் பதிலளித்தார்.

சாந்தகுமார் குறி வைக்கப்படுவதாகவும், தேர்தலுக்கு முன், அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும்படி வற்புறுத்தப்படுவார் என்றும் 'குருவி' என்ற அரசில் விமர்சகர் கருத்துத் தெரிவித்தார். ஆனால், தன்மானத்தை முக்கியமாகக் கருதும் சாந்தகுமார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று மற்ற விமர்சகர்கள் கூறினர்.

தேர்தலுக்கு ஆறு மாதங்கள் இருந்தபோது, திடீரென்று சாந்தகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமானவரிச் சோதனைகள் நடத்தப்பட்டன. கோடிக்கணக்கான ருபாய்களும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. 

அவற்றை மறுத்த சாந்தகுமார், ஒரு ரூபாய் கூடக் கைப்பற்றப்படவில்லை என்று சாதித்தார். ஆயினும், வருமானவரித் துறை தாங்கள் கைப்பற்றிய தகவல்களையும் ஆவணங்களையும் பிற புலனாய்வு அமைப்புகளிடம் பகிர்ந்து கொண்டதாகத் தவல்கள் வெளியாகின.

விரைவிலேயே, வருமனவரித் துறை மற்றும் பிற புலனாய்வுத் துறைகளிலால் சாந்தகுமார் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பல்வேறு துறைகளால் திரும்பத் திரும்ப விசாரணைக்கு அழைக்கப்பட்டதால், விசாரணைக்குச் செல்வது என்பது சாந்தகுமாருக்கு ஒரு தினசரி நிகழ்வாகவே ஆகியது.

ஆரம்பத்தில், விசாரணைக்குச் சென்று விட்டுச் சிரித்த முகத்துடன் வெளியே வந்து ஊடகவியலாளர்களுக்குப் பேட்டி அளித்த சாந்தகுமார், சில நாட்களுக்குப் பிறகு, ஊடகவியலாளர்களைப் பார்ப்பதையே தவிர்த்தார். ஆரம்பத்தில், அவர் முகத்தில் இருந்த மலர்ச்சி அடியோடு மறைந்து விட்டது.

ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்படி சாந்தகுமாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

திடீரென்று ஒருநாள், சாந்தகுமார் தன் கட்சியை ஆளும் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார். கட்சியின் நிர்வாகக் குழுவைக் கூட்டாமலும், எந்தவொரு கட்சி நிர்வாகியுடனும் கலந்து பேசாமலும், அவர் இவ்வாறு அறிவித்தது, அவர் கட்சித் தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆயினும், சாந்தகுமார் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். நாட்டு நலன் கருதியே, தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, ஆளும் கட்சியுடன் தன் கட்சியை இணைப்பதாகவும் அவர் கூறினார்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த 'குருவி,' "இப்படி நடக்கும் என்று நான் பல மாதங்கள் முன்பே எழுதினேன். இதை நான் எப்படிக் கணித்தேன் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது மிகவும் எளிமையான விஷயம். தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள், எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்கள். தாங்கள் செய்த தவறுகளின் விளைவாகத் தங்களுக்கு ஏதும் துன்பம் வரும் என்ற நிலை வந்தால், அதிலிருந்து தப்பிக்க, அவர்கள் தங்களையே விற்கவும் தயங்க மாட்டார்கள். இதை நான் கூறவில்லை. திருவள்ளுவரே கூறி இருக்கிறார்!" என்று எழுதினார்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

பொருள்: 
கயவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில், அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்று விடுவதற்கு உரியவர் ஆவர். அவர்கள் வேறு எதற்கும் உரியவர் (தகுந்தவர்கள்) அல்லர்.

(பொருட்பால் நிறைவடைந்தது) 
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1079. யார் கொடுத்த புகார்?

"கார்னர் பிளாட்டுன்னு அதிக விலை கொடுத்து வாங்கினேன். இப்ப அதுவே ஒரு பிரச்னை ஆயிடுச்சு" என்றார் ரத்தினசாமி.

"ஏன் அப்படி?" என்றார் அவருடைய நண்பர் சண்முகம்.

"என் பிளாட்டுக்குப் பக்கத்தில இருக்கற ரோடில ஒரு அடியை ஆக்கிரமிச்சு நான் காம்பவுண்ட் சுவர் கட்டியிருக்கேன்னு என் மேல யாரோ புகார் கொடுத்திருக்காங்க."

"அப்புறம்?"

"முனிசிபாலிடியிலேந்து எனக்கு நோட்டீஸ் வந்திருக்கு."

"என்னன்னு?"

"முனிசிபாலிடிக்குச் சொந்தமான சாலையில ஒரு அடி அகல நிலத்தை நான் ஆக்கிரமிச்சிருக்கேனாம். அதனால, என் காம்பவுண்ட் சுவரை இடிச்சு ஒரு அடி உள்ளே தள்ளிக் கட்டிக்கிட்டு, அந்த நிலத்தை முனிசிபாலிடிகிட்ட ஒப்படைக்கணுமாம்!"

"அப்படி ஒரு நோட்டீஸை எப்படி அனுப்ப முடியும்? யாராவது வந்து நிலத்தை அளந்து பாத்தாங்களா என்ன?"

"அதெல்லாம் எதுவும் இல்லை. யாரோ புகார் கொடுத்திருக்காங்கன்னு சொல்லி, நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க."

"சரி. அப்புறம் என்ன ஆச்சு?"

"முனிசிபாலிடியில போய் விசாரிச்சேன். இது மாதிரி நிறைய பேர் ஆக்கிரமிப்பு பண்ணி இருக்கறதால, என் மேல வந்த புகாரின் அடிப்படையில, எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்களாம். சர்வேயரை அனுப்பி அளந்து பார்த்து, அப்புறம் முடிவு செய்வாங்களாம்!" 

"சர்வேயர் வந்து அளந்து பாக்கறதுக்கு முன்னாடியே, உன்னோட காம்பவுண்ட் சுவரை இடிச்சு ஒரு அடி உள்ளே தள்ளிக் கட்டிக்கச் சொல்லி எப்படி நோட்டீஸ் அனுப்பலாம்?"

"அதைத்தான் நானும் கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம மழுப்பறாங்க. யாரோ ஒத்தர் ஒரு அதிகாரியை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி, இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்ப வச்சிருக்காங்கன்னு தெரியுது."

"சரி. அப்ப சர்வேயரை அனுப்பி அளந்து பாக்கச் சொல்ல வேண்டியதுதானே?"

"நான் இந்த நிலத்தை வாங்கினப்ப, இந்த ஊர் ஒரு பஞ்சாயத்தா இருந்தது. இப்ப பல பஞ்சாயத்துகளைச் சேர்த்து ஒரு முனிசிபாலிட்டி ஆக்கிட்டாங்க. அதனால, பழைய பஞ்சாயத்து ரிகார்டுகளையெல்லாம் எடுத்துப் பாக்கணுமாம். அதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்கறாங்க. நோட்டீஸ் மேல இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்னு சொல்றாங்க. ஆனா, இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தாதான் எனக்கு நிம்மதியா இருக்கும். நீ ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிங்கறதாலதான் உங்கிட்ட சொல்றேன். உன்னால ஏதாவது செய்ய முடியுமா?" என்றார் ரத்தினசாமி, கெஞ்சும் குரலில்.

"கவலைப்படாதே! நான் விசாரிச்சுப் பாக்கறேன்" என்றார் சண்முகம்.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு, ரத்தினசாமிக்கு ஃபோன் செய்த சண்முகம், "ரத்தினசாமி, கவலைப்படாதே! உன் பிரச்னை தீர்ந்து போச்சு. முனிசிபாலிடிகிட்டேந்து அவங்க அனுப்பின நோட்டீஸைத் திரும்பப் பெற்றுட்டதா உனக்கு ஒரு கடிதம் வரும். இன்னிக்கே அதை அனுப்பி இருப்பாங்க. உனக்கு ரெண்ணு மூணு நாள்ள வந்து சேரும்!" என்றார் சண்முகம்.

"ரொம்ப தாங்க்ஸ்ப்பா! என்ன ஆச்சு? விவரம் தெரிஞ்சுதா?"

"உனக்கு வேண்டாதவங்க யாரோ, உன்னைப் பத்தி ஒரு பொய்யான புகாரைக் கொடுத்து, முனிசிபாலிடியில அவருக்குத் தெரிஞ்ச ஒரு அதிகாரி மூலமா, உனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வச்சிருக்காங்க. ஒரு நண்பர் மூலமா, அந்த முனிசிபாலிடி கமிஷனரைப் பார்த்துப் பேசினேன். அவர் ரிகார்ட்களை எல்லாம் எடுத்துப் பாத்துட்டாரு. அந்த ரோடை ஏற்கெனவே சர்வேயர் அளந்து பாத்திருக்காரு. அதில ஆக்கிரமிப்பு எதுவும் இல்ல. நோட்டீஸ் அனுப்பின அதிகாரியை கமிஷனர் கூப்பிட்டு வார்ன் பண்ணிட்டாரு. இனிமே உனக்குப் பிரச்னை இல்லை!"

"அது சரி. என் மேல புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?"

"அதையும் விசாரிச்சுட்டேன். யாரோ சிகாமணியாம்!"

"அடப்பாவி! அவனா?"

"உனக்கு அவனைத் தெரியுமா?"

"தெரியும். என் ஆஃபீஸ்ல வேலை செய்யறவன்தான். என் வீட்டுக்குக் கூட ரெண்டு மூணு தடவை வந்திருக்கான்."

"அவனுக்கும், உனக்கும் விரோதமா என்ன?"

"விரோதம் எதுவும் இல்ல. அலுவலகத்தில, நானும் அவனும் ஒரே லெவல்லதான் இருக்கோம். ஆனா, அவன் கொஞ்சம் கஷ்டப்படறான். வாடகை வீட்டிலதான் இருக்கான். கடன் தொல்லை எல்லாம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எனக்கும் அவனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே!"

"சில பேர் அப்படித்தான். அடுத்தவன் சாப்பாட்டுக்கும், துணிக்கும் கஷ்டப்படாம வாழ்ந்தா, அதுக்கே அவன் மேல பொறாமைப்பட்டு, அவனுக்கு ஏதாவது கெடுதல் பண்ணலாமான்னு நினைப்பாங்க. விட்டுத் தள்ளு. உன் பிரச்னை தீர்ந்துடுச்சு இல்ல? இனிமே, அவன்கிட்டேயிருந்து கொஞ்சம் விலகியே இரு!" என்று கூறி ஃபோனை வைத்தார் சண்முகம்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

பொருள்: 
ஒருவர் உடுப்பதையும், உண்பதையும் கண்டு கூட பெறாமைப்படுகிற கயவன், அவர் மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, June 15, 2024

1078. கிராமத்துக்கு ஒரு சாலை

கட்டுப்பட்டி கிராமத்தை, அருகிலுள்ள முக்கிய சாலையுடன் இணைக்கும் ஐந்து கிலோமீட்டர் மண் சாலையைத் தார் சாலையாக மாற்றக் கோரி, அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தேர்தலின்போது, அந்தச் சாலையை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

அந்த ஊரின் பிரதிநிதிகள் சிலர் ஐந்தாறு முறை சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்துப் பேசினர். ஆனால், அவர் அவர்களுக்கு உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை.

முதல்முறை சந்தித்தபோது, "தேர்தல்போது சொல்றதையெல்லாம் செய்யணும்னு எதிர்பாக்க முடியாது. நீங்க மனுக் கொடுங்க. நான் பரிசீலிக்கறேன்" என்று அலட்சியமாக பதிலளித்தார்.

மனு அளித்து விட்டு, இரண்டு மூன்று முறை அவரைச் சந்தித்தபோதும், அவர் சரியாக பதிலளிக்கவில்லை. 

"சட்டமன்ற உறுப்பினர் நிதி இன்னும் அரசாங்கத்திலேந்து வரலை" என்று ஒருமுறை கூறினார். ஆயினும், அவருடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வேறு சில பணிகள் நடப்பது தெரிந்தது.

அந்த ஊரிலிருந்து இருநூறு பேர் முக்கிய சாலைக்குச் சென்று சாலை மறியல் செய்வதென்று தீர்மானித்தனர். 

சாலை மறியல் கவனம் பெற்று, ஊடகங்களில் செய்தியாக வெளியாகியது. ஒரு தொலைக்காட்சி சேனலிலிருந்து சிலர் வந்து, ஊர்மக்களிடம் பேட்டி எடுத்துத் தங்கள் சேனலில் ஒலிபரப்பினார்கள். 

அதற்குப் பிறகும் எதுவும் நடக்கவில்லை.

பிறகு ஒருநாள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அந்த ஊரிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஐநூறு பேர் கிளம்பிச் சென்று, சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டமன்றக் கட்டிடம் அருகே சென்று முழக்கம் எழுப்பினர். 

முழக்கம் எழுப்பியவர்கள் உடனே கைது செய்யப்பட்டாலும், போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெரிதாக ஒளிபரப்பப்பட்டது. 

முதலமைச்சர் அந்தச் சட்டமன்ற உறுப்பினரை அழைத்து விசாரித்து, அந்தச் சாலையை உடனே அமைத்துத் தரும்படி உத்தரவிட்டார்.

சாலைப் பணிகள் துவங்கிய பிறகு ஒருநாள், கட்டுப்பட்டி கிராமத் தலைவர் கூத்தன், தன் நண்பரும் பள்ளி ஆசிரியருமான கார்மேகத்திடம் பேசிக் கொண்டிருந்தார்.

"இந்தச் சாலையைப் போட வைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது! இதுக்கு முன்னால இருந்த எம்.எல்.ஏ-கிட்ட ஏதாவது கோரிக்கை வச்சா, அவர் அதை உடனே பரிசீலிப்பாரு. இந்த எம்.எல் ஏ-ஐச் செயல்பட வைக்க இத்தனை போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்தது!" என்றார் கூத்தன்.

"திராட்சைப் பழத்தைக் கையால அழுத்தினாலே ஜூஸ் வரும். கரும்பை மெஷின்ல போட்டு அழுத்திப் பிழிஞ்சாதானே சாறு வரும்? அது மாதிரிதான், ஒத்தர் நல்லவரா இருந்தா, மத்தவங்க கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேப்பாரு, தீர்க்க முயற்சி செய்வாரு. ஆனா, ஒத்தர் மோசமானவரா இருந்தா, அவரோட போராடித்தான் நம்ம கோரிக்கையை நிறைவேத்திக்க முடியும்!" என்றார் கார்மேகம்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

பொருள்: 
சான்றோர்களை அணுகி, நம் குறைகளைச் சொல்லிய அளவிலேயே, நமக்கு உரிய பயன் கிடைக்கும். ஆனால், கரும்பைப் பிழிவது போல் அழுத்திப் பிழிந்தால்தான், கீழ்மக்களிடம் நமக்கு உரியதைப் பெற முடியும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1077. மூன்று மாதச் சம்பளம்!

"என்னது, மூணு மாசம் வேலை பார்த்துட்டு, சம்பளம் கிடைக்கலையா?" என்றார் அழகேசன்.

"ஆமாம். புதுசா ஆரம்பிச்ச கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். முதல் மாசம் முடிஞ்சதும், இன்னும் பிசினஸ்ல வருமானம் வரலை, அதனால அடுத்த மாசச் சம்பளத்தோட சேர்த்துக் கொடுக்கறோம்னு சொன்னாங்க. அப்புறம், ரெண்டு மாசம் முடிஞ்சப்புறமும் கொடுக்கல. மூணு மாசம் முடிஞ்சதும், நானே வேலையை விட்டு வந்துட்டேன்! அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ள, கம்பெனியையே மூடிட்டாங்க. அது ஒரு மோசடி நிறுவனமாம். பேப்பர்ல கூட வந்தது" என்றான் ராம்குமார்.

"அந்த முதலாளியோட பேரு?"

"மாசிலாமணி."

அழகேசன் ராம்குமாரிடமிருந்து அந்த நிறுவனம் பற்றிய பிற விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.

"சரி. நான் விசாரிக்கறேன். உனக்கு வர வேண்டிய சம்பளத்தை வாங்கிக் கொடுத்துடறேன்" என்றார் அழகேசன்.

"அது எப்படி அங்க்கிள் முடியும்? மாசிலாமணி பல பேரை ஏமாத்தி இருக்கறதா சொல்றாங்க. அவர்கிட்ட ஏமாந்தவங்கள்ள தொழிலதிபர்கள் கூட இருக்காங்க. என்னோட வேலை செஞ்சவங்களே அஞ்சாறு பேர் இருப்பாங்க. போலீஸ்ல அவரைக் கைது செஞ்சாங்க. ஆனா, இப்ப அவர் ஜாமீன்ல இருக்காரு. அவர் மேல நிறைய கேஸ் இருக்கு. ஆனா, அவரை ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொல்றாங்க."

"மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை. உங்கப்பா எனக்கு அந்தக் காலத்தில நிறைய உதவி செஞ்சிருக்காரு. அவரோட பையனுக்கு உதவ வேண்டியது என் கடமை" என்றார் அழகேசன்.

சில நாட்கள் கழித்து, ராம்குமாருக்கு வர வேண்டிய மூன்று மாதச் சம்பளத் தொகைக்கான காசோலை தபாலில் வந்தது.

அழகேசனுக்கு ஃபோன் செய்து நன்றி தெரிவித்தான் ராம்குமார்.

"எப்படி சார் இதை வாங்கிக் கொடுத்தீங்க?" என்றான் ராம்குமார், வியப்புடன்.

"உன் அப்பாகிட்ட கேளு!" என்று கூறி ஃபோனை வைத்து விட்டார் அழகேசன்.

 ராம்குமார் தன் தந்தையிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர், "பாஷா படம் பாத்திருக்க இல்ல?" என்றார்.

"பாத்திருக்கேன்."

"அதில ரஜினிகாந்த் தன் ஆள்காட்டி விரலைக் காட்டினதும், மத்தவங்க பயந்து போய் அவர் கேட்டதை செஞ்சு கொடுத்துடுவாங்க இல்ல, அது எதனால?"

"ஏன்னா, பாஷா ஒரு தாதாவா இருந்தவர். அப்படின்னா, அழகேசன் அங்க்கிள்?"

"அவனும் அந்த மாதிரிதான். சின்ன வயசில அவன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். அப்ப, நான் அவனுக்கு உதவி செஞ்சிருக்கேன். பின்னால, அவன் பாதை மாறிப் போயிட்டான். ஆனா, எங்கிட்ட நன்றியோடயும், நட்போடயும்தான் இருந்துக்கிட்டிருக்கான். 'உனக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லு'ன்னு அவன் அடிக்கடி எங்கிட்ட சொல்லுவான். ஆனா, இத்தனை நாளா நான் எதுவும் கேட்டதில்ல. மூணு மாசச் சம்பளம்கறது நமக்கு ஒரு பெரிய தொகை. அதனாலதான், அவன் உதவியைக் கேட்டேன்" என்றார் ராம்குமாரின் தந்தை.

"அப்படின்னா, அழகேசன் அங்க்கிள் மாசிலாமணியை மிரட்டித்தான் இந்தப் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்காரா? இது தப்பு இல்லையா?"

"தப்புதான். என்ன செய்யறது? மாசிலாமணி மாதிரி ஆட்களைக் கழுத்தில கத்தியை வச்சு மிரட்டினாத்தான், அவங்ககிட்டேந்து நமக்கு நியாயமாக் கிடைக்கறதை வாங்க முடியும்னா, அப்படித்தானே செஞ்சாகணும்?" 

பொருட்பால்
கு
டியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

பொருள்: 
தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு, தாம் உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார் கயவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1076. ரகசியம் பரம ரகசியம்!

"நம்ம ஊரை ஓ.டி.எஃப்-னு அறிவிச்சு ஆறு மாசம் ஆச்சு!" என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம்.

"அப்படின்னா?" என்றார் மன்ற உறுப்பினர் கண்ணப்பன்.

"ஓ.டி.எஃப்-னா ஓபன் டெஃபகேஷன் ஃப்ரீ. அதாவது. நம்ம ஊரில யாரும் திறந்த வெளியைக் கழிவறையாப் பயன்படுத்தக் கூடாதுன்னு அர்த்தம்!" என்று விளக்கினார் கலியமூர்த்தி என்ற மற்றொரு உறுப்பினர்.

"ஆனாலும், அதிகாலை வேளையில, சில பேர், சில இடங்களை அசுத்தப்படுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க!" என்றார் சோமசுந்தரம்.

"அதான் நம்ம ஊர்ல அஞ்சு பொதுக் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கமே!" என்றார் சரஸ்வதி என்ற பெண் உறுப்பினர்.

"கழிப்பறை வரையிலும் நடந்து போக சோம்பல்பட்டோ, அல்லது அரசாங்கமோ, பஞ்சாயத்தோ சொன்னா, நாம ஏன் அதுக்குக் கட்டுப்படணுங்கற எண்ணத்தினாலேயோ, சில பேர் தொடர்ந்து இப்படி செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க" என்றார் கண்ணப்பன் என்ற உறுப்பினர்.

"இதை எப்படித் தடுக்கறது?" என்றார் சுப்பு என்ற உறுப்பினர்.

"அதுக்கு நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். அதிகாலை வேளையிலதான் இது நடக்குது. அதுவும், குறிப்பிட்ட சில இடங்கள்ளதான் நடக்குது. நாம பன்னண்டு பேர் உறுப்பினர்களா இருக்கோம். நம்மள்ள நாலு பேர், நாளைக்கு அதிகாலை நேரத்தில, ரகசியமா ரோந்து போற மாதிரி சில இடங்களுக்குப் போய்ப் பார்ப்போம். தப்புப் பண்றவங்க கண்டிப்பா மாட்டிப்பாங்க!" என்றார் சோமசுந்தரம்.

அதை நல்ல யோசனை என்று எல்லா உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ள, அடுத்த நாள் ரோந்துக்குச் செல்ல வேண்டிய நான்கு பேர் யார் என்று முடிவு செய்யப்பட்டது.

"ஒரு முக்கியமான விஷயம். நாம ரோந்து போகப்போற விஷயம் நம்ம பன்னண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. நம்ம வீட்டில இருக்கறவங்களுக்குக் கூடத் தெரியக் கூடாது. இந்தத் திட்டத்தை ரகசியமா வச்சுக்கிட்டாதான், நம்மால தப்புப் பண்றவங்களைப் பிடிக்க முடியும். அவங்களைப் பிடிக்காம தவற விட்டோம்னா, இந்தப் பழக்கத்தை நிறுத்தறது ரொம்ப கஷ்டமா ஆயிடும். நாளைக்கு சாயந்திரம் நாம மறுபடி கூடுவோம்" என்று கூறிக் கூட்டத்தை முடித்தார் சோமசுந்தரம்.

"என்னங்க, இப்படி ஆயிடுச்சு?" என்றார் கலியமூர்த்தி, மறுநாள் நடந்த கூட்டத்தில்.

"என்ன ஆயிடுச்சு? யாரும் மாட்டல. அவ்வளவுதானே! தற்செயலா இன்னிக்கு யாரும் வெளியே வராம இருந்திருப்பாங்க. இன்னிக்கு மாட்டலேன்னா, இன்னொரு நாளைக்கு மாட்டறாங்க!" என்றார் நடராஜன் என்ற உறுப்பினர்.

"அப்படி இல்லை, நடராஜன். தப்புப் பண்றவங்களை இன்னிக்கு நாம பிடிச்சிருந்தா, அவங்களை அம்பலப்படுத்தி, இந்தத் தப்பு மறுபடியும் நடக்க விடாம செஞ்சிருக்கலாம்!" என்றார் சோமசுந்தரம், ஏமாற்றத்துடன்.

"அதனால என்ன? நாளைக்குக் காலையில வேற நாலு பேர் போய்ப் பாப்போம்!" என்றார் சரஸ்வதி.

"இல்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு. தினமும் நடக்கற விஷயம் இன்னிக்கு எப்படி நடக்காம போகும்?" என்றார் சோமசுந்தரம்.

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"தலைவர் சொல்லத் தயங்கறதை நான் சொல்றேன். இதை ரகசியமா வச்சுக்கணும்னு நேத்து தலைவர் சொன்னாரு. ஆனா நம்மள்ள யாரோ ஒத்தர் இந்த ரகசியத்தை வெளியில சொல்லி இருக்காங்க. அது தப்புப் பண்றவங்க காதுகளுக்கும் போயிருக்கு. அதனாலதான், தப்புப் பண்றவங்க உஷாராயிட்டாங்க!" என்றார் கலியமூர்த்தி.

"இதை யார் வெளியில சொல்லி இருக்கப் போறாங்க? அதனால, அவங்களுக்கு என்ன லாபம்?" என்றார் சரஸ்வதி.

"ஒரு விஷயத்தை ரகசியமா வச்சுக்கச் சொன்னா, அதைக் கண்டிப்பா யார்கிட்டேயாவது சொல்ற கெட்ட குணம் சில பேருக்கு உண்டு. அதனால வர கெடுதலைப் பத்தி அவங்களுக்குக் கவலை இல்ல. இந்த குணம் உள்ளவங்களைத் தீயவர்கள்னுதான் சொல்லணும்!" என்றார் கலியமூர்த்தி, கோபத்துடன்.

அவர் சொன்னதை ஆமோதிப்பது போல், சோமசுந்தரம் மௌனமாகத் தலையாட்டினார்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

பொருள்: 
மறைக்கப்பட வேண்டிய ரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்கிற கயவர்களைத் தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, June 14, 2024

1075. இனி அது வேண்டாம்!

மதன் ஃபார்மாவில் தனஞ்சயன் ஒரு உயர் அதிகாரி. அவனை விட உயர் பதவியில் வேறு சில அதிகாரிகள் இருந்தாலும், தனஞ்சயன் நிர்வாக இயக்குனர் மதனகோபாலுக்கு நெருக்கமானவன் என்பது அனைவருக்கும் தெரியும். 

மதனகோபால் தனஞ்சயனை அடிக்கடித் தன் அறைக்கு அழைத்துப் பேசுவார். அப்போது, மற்ற அதிகாரிகள் யாரும் உடன் இருக்க மாட்டார்கள். 

அதனால், சில விஷயங்களில் தனஞ்சயன் தன்னிச்சையாக முடிவெடுக்கும்போது, அவனுடைய மேலதிகாரிகள் அவனைக் கேள்வி கேட்க மாட்டார்கள். 

தனகோபால் தனஞ்சயனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"தனஞ்சயன்! இனிமே, சபரி கெம்கிட்டேருந்து நாம மருந்துகளை வாங்க வேண்டாம்" என்றார் மதனகோபால்.

"ஏன் சார்?" என்றார் தனஞ்சயன்.

"நமக்கு இருக்கற மத்த பிசினஸ் போதும். அதோட, இப்ப நாம கொஞ்சம் கவனமா இருக்க வேண்டிய நேரம்!"

"புரியுது, சார்!" என்றார் தனஞ்சயன்.

னஞ்சயன் தன் இருக்கைக்குத் திரும்பியதும், "எம்.டி. என்ன சார் சொன்னார்?" என்றாள் அவனுடைய உதவியாளர் வாணி.

"இனிமே சபரி கெம்கிட்டேந்து மருந்துகள் வாங்க வேண்டாம்னுட்டார்" என்ற தனஞ்சயன், "என்னோட மேலதிகாரிகளுக்குக் கூடத் தெரியாத விஷயத்தை உங்கிட்ட சொல்றேன் பார்!" என்றான், சிரித்துக் கொண்டே. 

தன்னுடன் தனஞ்சயனுக்கு இருக்கும் நெருக்கத்தை அவன் மறைமுகமாக வெளிப்படுத்தியதைக் கேட்டு சற்றே நெளிந்த வாணி, "ஏன் சார் அப்படி? அவங்ககிட்ட நாம ரொம்ப நாளா வாங்கிக்கிட்டிருக்கமே!" என்றாள். 

"நாம அவங்ககிட்ட வாங்கற மருந்துகள் எப்படிப்பட்டவைன்னு உனக்குத் தெரியுமே! மருந்துகள்ங்கற பேரில அவங்க போதை மருந்துகளை சப்ளை பண்றாங்க. நாம அவற்றை வாங்கி, சில டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மூலமா வித்துக் கொள்ளை லாபம் சம்பாதிச்சுக்கிட்டிருக்கோம். "

"அதான் சார் கேக்கறேன். இப்படிப்பட்ட ஒரு லாபகரமான பிசினஸை ஏன் திடீர்னு நிறுத்தச் சொல்றாரு?"

"பக்கத்தில வா, சொல்றேன்!" 

அருகில் வந்த வாணியிடமிருந்து வந்த பர்ஃப்யூயூமின் மணம் தனஞ்சயனை மயக்கியது. 

"போதை மருந்து ஒழிப்புக்குப் பொறுப்பாப் புதுசா வந்திருக்கிற டி.ஐ.ஜி, போதை மருந்து விக்கிறவங்களைப் பிடிக்கறதில ரொம்பத் தீவிரமா ஈடுபட்டிருக்காராம். அதனாலதான், எம்.டி கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு பாக்கறாரு. இல்லேன்னா, இப்படி ஒரு லாபகரமான பிசினசை விட்டுடுவாரா?" என்றான் தனஞ்சயன், சிரித்துக் கொண்டே.

"சார், இப்பதான் அந்த டி.ஐ.ஜியை மாத்திட்டாங்களே! போலீஸ் நடவடிக்கையெல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. நாம மறுபடி சபரி கெம்கிட்டேந்து மருந்துகளை வாங்கலாமா?" என்றான் தனஞ்சயன்.

"வேண்டாம், தனஞ்சயன்!" என்றார் மதனகோபால்.

"ஏன் சார்? இப்ப ரிஸ்க் எதுவும் இல்லையே! நம்மகிட்ட மாமூல் வாங்கிக்கிட்டிருந்த அதிகாரிங்க 'நீங்க மறுபடி ஆரம்பிங்க, சார். பிரச்னை எதுவும் வராது' ன்னு சொல்றாங்க!"

"இந்தியாவிலேயே பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்கிட்டேயிருந்து நமக்குப் புதுசா கிடைச்சிருக்கற டீலர்ஷிப்னால, நம்ம லாபம் ரெண்டு மடங்காப் பெருகும். அதனால, இனிமே இந்த சபரி கெம் பிசினஸ் வேண்டாம். நிறுத்தினது நிறுத்தினதாகவே இருக்கட்டும்!" என்றார் மதனகோபால், உறுதியாக.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1075:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

பொருள்: 
கயவர்களிடம் நல்லொழுக்கம் இருந்தால், தண்டிக்கப்படுவோமோ என்ற பயமே அதற்குக் காரணம் ஆகும். அதையும் மீறி, அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால், அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, June 9, 2024

1074. ஜாமீன் கிடைக்குமா?

தன்னைப் பார்க்கச் சிறைக்கு வந்த வக்கீல் தண்டபாணியிடம், "என்ன வக்கீல் சார், எப்ப பெயில் கிடைக்கும்?" என்றான் சச்சிதானந்தம், அதிகாரமாக.

"முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன், சார். போஸ்கோ கேஸ்ங்கறதால, உடனே பெயில் கிடைக்கறது கஷ்டம்தான்" என்றார் தண்டபாணி.

"போஸ்கோ கேஸ்னா?"

"பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கறது, பாலியல் குற்றங்கள் இதெல்லாம் போஸ்கோவில வரும். அது கொஞ்சம் கடுமையான சட்டம்."

"என் மேல ஒரு பொண்ணு குற்றம் சாட்டினா, நான் குற்றவாளி ஆயிடுவேனா? ஆதாரம் வேண்டாமா?"

"ஆதாரம் இருக்காங்கற கேள்வியெல்லாம் வழக்கு விசாரணையின்போதுதான் வரும். ஆரம்பக் கட்டத்தில, ஆதாரங்களையெல்லாம் விரிவாப் பாக்க மாட்டாங்க" என்ற வக்கீல் சற்றுத் தயங்கி விட்டு, "அதோட, உங்க மேல ஒரு பொண்ணு குற்றம் சாட்டினதைத் தொடர்ந்து, இன்னும் சில பெண்கள், தாங்களும் பாதிக்கப்பட்டதா குற்றம் சாட்டி இருக்காங்க. அதனால, இப்ப நிலைமை இன்னும் கடுமையா ஆயிடுச்சு" என்றார்.

"ஊர்ல யாரும் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்? நான் அப்படிச் செய்யவே இல்லைன்னு அடிச்சு வாதாடுங்க. செஞ்சதுக்கு ஆதாரம் ஏதாவது இருந்தா, அந்தப் பொண்களோட சம்மதத்தோடதான் நான் அவங்ககிட்ட உறவு வச்சுக்கிட்டேன்னு வலுவா வாதாடுங்க!" என்றான் சச்சிதானந்தம்.

'எப்படி வாதாடணும்னு எனக்கே வகுப்பு எடுக்கறியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட வக்கீல் தண்டபாணி, "வழக்கு விசாரணைக்கு வரட்டும். நாம வலுவான வாதங்களை எடுத்து வைப்போம்" என்றார்.

"இங்கே ஒரு கைதியைப் பார்த்தேன். அவன் பல பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு, அதை வீடியோ வேற எடுத்து வச்சிருந்தானாம். அந்த வீடியோ வெளியாகி, அவனைக் கைது பண்ணி இருக்காங்க. இப்ப அவன் வக்கீல் எப்படி வாதாடறாரு தெரியுமா?"

"எப்படி?"

"அந்தப் பெண்களோட சம்மதத்தோடதான் அவன் அவங்களோட உறவு வச்சுக்கிட்டதா வாதாடறாராம்!"

"இது ஒரு வழக்கமான வாதம்தானே?"

"அதோட இல்ல. அந்தப் பெண்கள்தான் வீடியோ எடுக்கச் சொன்னாங்க, வீடியோவைத் தங்களுக்கு அனுப்பச் சொன்னாங்கன்னு வாதாடப் போறாராம்!"

"அடப் பாவிங்களா!" என்றார் தண்டபாணி.

"பாருங்க, உலகத்தில எவ்வளவு மோசமான மனுஷங்கல்லாம் இருக்காங்கன்னு! நான் அப்படியெல்லாம் இல்லையே! எனக்கு ஏன் ஜாமீன் கொடுக்கக் கூடாது?" என்றான் சச்சிதானந்தம், நியாயத்தை வலியுறுத்துவது போன்ற தொனியில்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

பொருள்: 
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1073. நினைத்ததை முடிப்பவன்!

வெளியூரிலிருந்து வந்திருந்த ராஜு, தன் நண்பன் கண்ணனைப் பார்க்க அவன் வீட்டுக்குப் போயிருந்தான். கண்ணன் ஒரு வீட்டின் கீழ்ப் பகுதியில் குடி இருந்தான். மாடியில் வீட்டுச் சொந்தக்காரர் வசிப்பதாகச் சொன்னான்.

நண்பர்கள் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

கண்ணன் கதவைத் திறந்ததும், உள்ளே வந்த மனிதர், ராஜுவைப் பார்த்து விட்டு, கண்ணனிடம், "சாரி! யாரோ கெஸ்ட் வந்திருக்காங்க போலருக்கு. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்!" என்றார்.

"பரவாயில்ல, சார்! இவன் என் நண்பன் ராஜு. வைசாக்லேந்து வந்திருக்கான். ராஜு! இவர் என்னோட ஹவுஸ் ஓனர் மிஸ்டர் சங்கர். மாடியில இருக்காரு" என்று இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் கண்ணன்.

ராஜுவின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கம் சொன்ன சங்கர், கண்ணனிடம், "ஒண்ணுமில்ல. என் ஃபேமிலி ஊருக்குப் போயிருக்காங்க இல்ல? அவங்களை அழைச்சுக்கிட்டு வர, நானும் ஊருக்குப் போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும். கொஞ்சம் பாத்துக்கங்க" என்று சொல்லி விடைபெற்றார்.

"உன் ஹவுஸ் ஓனர் ரொம்ப நல்லவரா இருப்பார் போலருக்கே!"  என்றான் ராஜு, உபசாரத்துக்காக.

மௌனமாகத் தலையாட்டிய கண்ணன், வாசலில் போய் எட்டிப் பார்த்து விட்டு, "போயிட்டார்" என்றான். பிறகு ராஜுவைப் பார்த்துச் சிரித்து விட்டு, "என்ன சொன்ன, ரொம்ப நல்லவரா?" என்றான். 

"ஏன், அப்படி இல்லையா?" என்றான் ராஜு.

"என்னத்தைச் சொல்றது? நல்லவன்கறதுக்கு எதிரான வார்த்தைதான் அவருக்குப் பொருந்தும்!"

"ஏன் அப்படிச் சொல்ற? உங்கிட்ட ரொம்ப நட்பாப் பழகினாரே!"

"எங்கிட்ட நட்பாத்தான் பழகுவாரு. எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லதான். ஆனா..." என்று தயங்கிய கண்ணன், "அவர் தனக்கு எது வேணுமோ, அதை செஞ்சுப்பாரு. அதுக்காக மத்தவங்களுக்குக் கெடுதல் நடந்தா, அதைப் பத்திக் கவலைப்பட மாட்டாரு!" என்றான்.

"அப்படி இருக்கறவர் வீட்டில நீ ஏன் குடி இருக்கே?" என்றான் ராஜு, வியப்புடன்.

"அது ஒரு கதை. இந்த வீடு இன்னொருத்தருக்கு சொந்தமா இருந்தது. நான் இங்கே பல வருஷமா குடி இருக்கேன். நான் இங்கே வந்து அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான், சங்கர் மேல் வீட்டுக்குக் குடி வந்தாரு."

"குடி வந்தாரா? வீட்டுச் சொந்தக்காரர்னு சொன்ன?"

"இரு, சொல்றேன். வீட்டுக்கு வாடகைக்குக் குடி வந்த சங்கர், 'இந்த வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இதை எனக்கு விக்கறீங்களா?'ன்னு வீட்டுச் சொந்தக்காரர்கிட்ட கேட்டாரு. ஆனா, வீட்டுச் சொந்தக்காரர் வீட்டை விக்க இஷ்டப்படல. அதுக்கப்புறம், சங்கர் வீட்டுக்காரருக்குப் பிரச்னைகளை உருவாக்க ஆரம்பிச்சாரு. இவர் கொடுத்த டார்ச்சர் தாங்காம, வீட்டுக்காரர் இவர்கிட்ட வீட்டை வித்துட்டுப் போயிட்டாரு. வீட்டை வாங்கினப்புறம், இவர் எங்கிட்ட, 'நீங்க தொடர்ந்து இருங்க. எந்தப் பிரச்னையும் இல்லை' ன்னு சொன்னாரு. அதனாலதான், நான் இங்கே தொடர்ந்து இருந்துக்கிட்டிருக்கேன். அவர் எங்கிட்ட நட்பாத்தான் இருக்காரு" என்றான் கண்ணன்.

"என்னப்பா நீ சொல்றது? குடி இருக்கறவர் பிரச்னை பண்ணினா, வீட்டுக்காரர் அவர்கிட்ட வீட்டை வித்துட்டுப் போகணுமா என்ன? அவருக்கு சட்டரீதியா எத்தனையோ வழி இருக்கே!" என்றான் ராஜு.

"அதெல்லாம் சாதாரண மனுஷங்ககிட்ட பலனளிக்கும். சங்கர் மாதிரி  ரௌடிகள்கிட்ட பலிக்காது!"

"என்னப்பா, உன் வீட்டுக்காரரை ஒரேயடியா ரௌடின்னுட்டே!"

"அவரோட உண்மையான அடையாளத்தைச் சொன்னேன். அவரைப் பத்தின பல விஷயங்கள் இருக்கு. சுருக்கமா சொல்லணும்னா, அவர் தன் மனம் போனபடி நடந்துப்பாரு. தான் விரும்பினதை அடைய, என்ன வேணும்னாலும் செய்வாரு!"

"அப்படியெல்லாம் செய்ய முடியும்னா, அவர் மனுஷனா, இல்லை கடவுளா?" என்றான் ராஜு.

"வேணும்னா, தேவர்கள் மாதிரின்னு வச்சுக்கயேன். தேவர்கள் எதை விரும்பினாலும், அதை அடையற சக்தி உள்ளவங்கன்னு சொல்லுவாங்களே, அது மாதிரிதான் இவரு!" என்றான் கண்ணன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய கணம்)

குறள் 1073:
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

பொருள்: 
கயவரும் தேவரைப் போல், தான் விரும்புகின்றவைகளைச் செய்து, மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, June 8, 2024

1072. கொடுத்து வைத்தவன்!

"எப்படி இருக்கீங்க?" என்றார், அறைக்குள் வந்த டாக்டர்.

"பரவாயில்லை, டாக்டர்!" என்றார் சுந்தரம், பலவீனமான புன்முறுவலுடன்.

"நீங்கதான் டாக்டர் அவரைக் காப்பாத்தினீங்க. ரொம்ப நன்றி!" என்றாள் சுந்தரத்தின் மனைவி சுமதி, கைகளைக் கூப்பியபடி.

"சார் ரொம்பக் கவலைப்படுவார் போல இருக்கு. அதனாலதான், அவர் பி.பி. எப்பவுமே அதிக இருக்கு. இப்ப ஹார்ட் அட்டாக்கும் வந்திருக்கு. அவரைக் கொஞ்சம் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்க!" என்று கூறி விட்டுச் சென்றார் டாக்டர்.

"டாக்டர் என்ன சொன்னார்னு கேட்டீங்க இல்ல? இனிமேயாவது, தேவையில்லாம கவலைப்படாதீங்க!" என்றாள் சுமதி, தன் கணவரிடம்.

"ஒரு பிசினஸை நேர்மையா நடத்தறப்ப, நிறைய கவலைகள் வரத்தான் செய்யும். மாசம் பொறந்தா, கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கணுங்கறணுமேங்கற கவலை, பொருட்களை சப்ளை பண்ணினவங்களுக்கு சரியான நேரத்தில பணம் கொடுக்கணுமேங்கற கவலை, தொழிற்சாலையை நடத்தறதிலேயோ, அரசாங்கத்துக்கு வரி கட்டறதிலேயோ, கணக்கு வழக்குகளிலேயோ எந்தத் தவறும் நடந்துடக் கூடாதேங்கற கவலை..."

"போதும், போதும். தெனாலி படத்தில, கமலஹாசன் தன்னோட பயங்களை அடுக்கற மாதிரி கவலைகளை அடுக்கிக்கிட்டே போறீங்களே! இதையெல்லாம் நினைச்சுக்கிட்டே இருந்தா, கவலை அதிகமா இருக்கத்தான் செய்யும். அப்பப்ப மனசை வேற எதிலேயாவது செலுத்துங்க!" என்றபடியே டிவியை ஆன் செய்தாள் சுமதி.

போலீசால் கைது செய்யப்பட்ட ஒருவர் சிரித்துக் கொண்டே அங்கே கூடியிருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கையசைத்தபடியே, ஜீப்பில் ஏறிய காட்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.

"யாருங்க இவரு? போலீஸ்காரங்க கைது செஞ்சுக்கிட்டுப் போறப்ப கூடக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, சிரிச்சுக்கிட்டே கையை ஆட்டிக்கிட்டுப் போறாரு!" என்றாள் சுமதி, வியப்புடன்.

"வாசன் ஃபைனான்ஸ்னு நிதி நிறுவனம் நடத்தி ஐயாயிரம் ரூபா மோசடி பண்ணினானே, அந்த சீனிவாசன்தான் இவன். பல லட்சம் பேர்கிட்ட டெபாசிட் வாங்கி மோசம் பண்ணிட்டு, இப்ப போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டப்ப கூட, எப்படிக் கவலையில்லாம சிரிச்சுக்கிட்டே போறான் பாரு! அவனுக்குக் கவலைகள் கிடையாது. அதனால வரக் கூடிய பி.பி, ஹார்ட் அட்டாக் மாதிரி பிரச்னைகளும் வராது. கொடுத்து வச்சவன்! நம்மை மாதிரி நல்லவங்களா இருந்தாதான் கவலைப்பட்டுக்கிட்டும், பயந்துக்கிட்டும் வியாதியை வரவழைச்சுக்கணும்!" என்றார் சுந்தரம், பெருமூச்சு விட்டபடி. 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

பொருள்: 
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏனென்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1071. போலீஸ் விசாரணை

முத்து அண்ட் கோவின் உரிமையாளர் முத்துசாமியின் அறையில், முத்துசாமி தன் இருக்கையில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே இருந்த இருக்கையில், காவல் ஆய்வாளர் சிதம்பரம் அமர்ந்திருந்தார். 

அவருக்குப் பக்கத்தில், மூத்த ஊழியர்கள் நான்கு பேர் இருக்கைகளில் அமர்ந்திருக்க, மற்ற ஊழியர்கள் பின்னால் நின்று கொண்டிருந்தனர்.

"அந்த ஆள் பேர் என்ன, மாணிக்கம், அவன் எத்தனை நாளா உங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தான்?" என்றார் காவல் ஆய்வாளர் சிதம்பரம்.

"ஆறு மாசமா!"

"வேலையில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகி இருக்கு. அதுக்குள்ள, பாங்க்லேந்து 10 லட்சம் ரூபா பணம் எடுத்துக்கிட்டு வர பொறுப்பை அவன்கிட்ட கொடுப்பீங்களா?"

"அவனை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன், சார். இதுக்கு முன்னால கூட, அஞ்சாறு தடவை அவனை பாங்க்குக்கு அனுப்பி இருக்கேன்."

"ஆனா, அப்பல்லாம் அம்பதாயிரம், ஒரு லட்சம் மாதிரி சின்னத் தொகையை எடுக்கத்தான் அனுப்பி இருக்கீங்க, இல்ல?" என்றார் சிதம்பரம், இடைமறித்து.

"ஆமாம். எப்படி சரியா சொல்றீங்க?" என்றார் முத்துசாமி, வியப்புடன்.

"எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆளைப் பெரிய தொகை எடுத்து வரதுக்கு நம்பி அனுப்ப மாட்டீங்க இல்ல? இந்த மாதிரி ஆளுங்கல்லாம், சின்னத் தொகைகள் விஷயத்தில நாணயமா நடந்து உங்க நம்பிக்கையைச் சம்பாதிச்சுட்டுப் பெரிய தொகை வரப்ப மொத்தமா அடிச்சுடுவாங்க. நாங்க எவ்வளவு பேரைப் பாத்திருக்கோம்!"

"நீங்க சொல்றது சரிதான். இன்னிக்கு பாங்க்குக்குப் போய் பத்து லட்சம் எடுக்கணுங்கறதை அவன்கிட்ட நேத்திக்கே சொல்லி இருந்தேன். அதனால, திட்டம் போட்டு, நேத்திக்கு சாயந்திரம் சில பெரிய கஸ்டமர்கள்கிட்ட போய், மூணு லட்சம் ரூபா கேஷ் கலெக்ட் பண்ணி இருக்கான். அதையும் எடுத்துக்கிட்டு ஓடிட்டான். பாவி, எவ்வளவு நம்பினேன் அவனை!" என்றார் முத்துசாமி, பதற்றத்துடனும், சோர்வுடனும். தொடர்ந்து, "அவனைப் புடிச்சுடுவீங்க இல்ல?" என்றார், கெஞ்சும் குரலில்.

"பாக்கலாம். திட்டம் போட்டுப் பண்ணி இருக்கான். அவனைப் பத்தி எந்த விவரமும் இல்ல. அவன் தனியா ஒரு லாட்ஜில தங்கி இருக்கான். இன்னிக்குக் காலையில லாட்ஜுலேந்து கிளம்பிப் போனவன், திரும்ப ரூமுக்கு வரலை. வரவும் மாட்டான். எங்கேயாவது வெளியூர் போயிருக்கானா, இல்ல உள்ளூர்லயே தங்கி இருக்கானான்னு தெரியல. அவன் உங்ககிட்ட கொடுத்த சொந்த ஊர் அட்ரஸ் போலி. அவன் ஃபோட்டோ கூட உங்ககிட்ட இல்ல. எப்படித் தேடறது? அவனை எப்படி நம்பினீங்கன்னுதான் தெரியல. அவனைப் பத்தி எதுவுமே தெரியாம, எப்படி வேலைக்கு எடுத்தீங்கன்னும் தெரியல!" என்றார் ஆய்வாளர் சிதம்பரம்.

"சார்! எங்களை மாதிரி சின்ன கம்பெனியில எல்லாம் எப்படி வேலைக்கு ஆட்களை எடுப்பமோ, அப்படித்தான் அவனையும் எடுத்தேன். பேப்பர்ல விளம்பரம் கொடுத்து, வந்த விண்ணப்பங்களைப் பரிசீலிச்சு, பத்துப் பதினைஞ்சு பேரை இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டு, அதில செலக்ட் ஆனவன்தான் சார் அவன். ஆரம்பத்தில ஆஃபீஸ் வேலைதான் பாத்துக்கிட்டிருந்தான். அப்புறம் அவன் நல்லவன்னு தோணினதாலதான், கலெக்‌ஷன், பாங்க்குக்கெல்லாம் அனுப்ப ஆரம்பிச்சேன். இங்கே வேலை செய்யற யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. ஒத்தர் கூட அவனைப் பத்தித் தப்பா சொல்ல மாட்டாங்க!" 

"ஆமாம், சார். அவன் எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லாப் பழகினான். அதோட, எல்லாருக்கும் உதவி செய்யற குணம் அவன்கிட்ட உண்டு" என்றார் ஒரு மூத்த ஊழியர்.

"இவ்வளவு நல்லவனா இருந்த ஒத்தன் ஏமாத்துவான்னு எப்படி சார் எதிரபார்க்க முடியும்?" என்றார் முத்துசாமி, விரக்தியுடன்.

"சார்! அயோக்கியர்களுக்குன்னு தனி அடையாளம் எதுவும் கிடையாது. அவங்களும் மத்தவங்க மாதிரிதான் இருப்பாங்க. ஒத்தன் அயோக்கியன்னு அவன் மூஞ்சியில எழுதி ஒட்டி இருக்காது! ஒத்தனோட அயோக்கியத்தனம் வெளிப்பட்டப்புறம்தான், இவனா இப்படிப் பண்ணினான்னு தோணும். எங்க தொழில்ல நாங்க தினமும் பாக்கற விஷயம்தான் இது. பாக்கலாம், அவன் கிடைக்கறானான்னு. கிடைச்சா, உங்க அதிர்ஷ்டம்!" என்றார் சிதம்பரம். 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

பொருள்: 
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருட்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, June 1, 2024

1070. அறைக்கு வெளியே கேட்ட உரையாடல்

எம் எஸ் ஏஜன்சீஸின் பங்குதாரர்களான மூர்த்தியும், சிவாவும் தங்கள் வாடிக்கையாளரான செல்வி இண்டஸ்ட்ரீஸீன் உரிமையாளர் சண்முகசுந்தரத்தைப் பார்க்க, அவருடைய அறைக்கு வெளியே காத்திருந்தனர். 

அந்த அறைக்கு வெளியே, பாதி உயரத்துக்கு மட்டுமே தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததால், உள்ளே இருப்பவர்கள் பேசிக் கொண்டது, வெளியில் அமர்ந்திருந்த இருவருக்கும் கேட்டது.

"இந்த ஒரு தடவை மட்டும் உதவி செய்யுங்க, சார்!"

"அடுத்த மாசச் சம்பளத்தை இப்பவே கேக்கற. இன்னிக்கு தேதி 10-தான் ஆகுது. அடுத்த மாசச் சம்பளத்துக்கு இன்னும் 20 நாளைக்கு மேல இருக்கு."

"போன மாசம் சில எதிர்பாராத செலவுகள் வந்துடுச்சு, சார். அதுக்காகக் கொஞ்சம் கடன் வாங்கினேன். இந்த மாசச் சம்பளத்தில பாதிக்கு மேல அந்தக் கடனை அடைக்கவே போயிடுச்சு. இந்த மாசம் இன்னும் 20 நாளை ஓட்டியாகணும். வீட்டில சாப்பாட்டுக்கு அரிசி கூட இல்ல. பொண்டாட்டி குழந்தைகளைக் காப்பாத்தியாகணும் சார். இதுவரையில, கம்பெனியில நான் எந்தக் கடனும் கேட்டதில்லை. இந்த ஒரு தடவைதான் கேக்கறேன். நான் கேட்டதில பாதி கொடுத்தீங்கன்னா கூடப் போதும், சம்பளம் வர வரையில சமாளிச்சுடுவேன்! இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன். சார்!"

"அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்ல? என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே! வெளியில என்னைப் பாக்க சில பேர் காத்துக்கிட்டிருக்காங்க. அவங்க டயத்தையும் சேர்த்து வீணாக்கற நீ! முதல்ல இடத்தைக் காலி பண்ணு!"

கோபமாக ஒலித்த இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, உதவி கேட்ட அந்த ஊழியர் உரிமையாளரின் அறையிலிருந்து  வெளியே வந்தார். அவர் நடக்க முடியாமல் நடந்து வந்ததைப் பார்த்தபோது, எந்த நிமிடமும் மயங்கிக் கீழே விழுந்து விடுவாரோ என்ற அச்சம் மூர்த்திக்கும், சிவாவுக்கும் ஏற்பட்டது.

ண்முகசுந்தரத்தைப் பார்த்துப் பேசி விட்டு, மூர்த்தியும் சிவாவும் காரில் தங்கள் அலுவலகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

"சண்முகசுந்தரத்துக்கிட்ட உதவி கேட்டு, அவர் இல்லேன்னு சொன்னப்பறம் வெளியில வந்த அந்த ஊழியரைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் பயந்துட்டேன். அவரைப் பார்த்தா, கீழே விழுந்து உயிரை விட்டுடுவார் போல இருந்தது. பாவம், அந்த அளவுக்கு சோர்ந்து போயிருந்தார். பாவம், முதலாளி உதவி செய்வார்னு ரொம்ப நம்பிக்கிட்டிருந்தார் போலருக்கு!" என்றான் சிவா.

"ஆமாம். எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனா, சண்முகசுந்தரத்துக்கிட்ட எந்த ஒரு சோர்வும் இல்லேயே! அவர் நம்மோட நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாரு?" என்றான் மூர்த்தி.

"சண்முகசுந்தரம் ஏன் சோர்வா இருக்கணும்? எனக்குப் புரியல!" என்றான் சிவா.

"எனக்கும்தான்- தான் கேட்ட உதவி கிடைக்கலேன்னதும், உதவி கேட்டவருக்கு உயிரே போயிடறது போல இருக்கற மாதிரி, உதவி செய்ய மாட்டேன்னு சொல்றவருக்கும் ஏன் இருக்க மாட்டேங்குதுன்னு!"

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1070:
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

பொருள்: 
இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனேயே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, May 31, 2024

1069. அதனினும் கொடிது

"எனக்கு மனசை ரொம்ப கஷ்டப்படுத்தற விஷயம் எது தெரியுமா?" என்றான் பரந்தாமன்.

"எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் அவன் நண்பன் கணேசன்.

"என்னோட இத்தனை வருஷம் பழகி இருக்கியே, அதை வச்சு சொல்ல முடியாதா?"

"ம்.. இரு, யோசிச்சுப் பாக்கறேன். பொதுவா, மத்தவங்க கஷ்டப்படறதைப் பார்த்தா, உனக்கு வருத்தமா இருக்கும்."

"சரிதான். ஆனா, அதிலேயும், குறிப்பா ஒரு விஷயம், எனக்கு ரொம்ப மனக் கஷ்டத்தைக் கொடுக்கும்."

"என்ன அது?"

"ஒத்தர் ரொம்ப கஷ்டமான நிலையில, இன்னொருத்தர்கிட்ட போய் உதவி கேக்கறதைப் பார்த்தா, எனக்கு மனசே உடைஞ்சுடும்."

"பிச்சை எடுக்கறவங்களை சொல்றியா?"

"பிச்சை எடுக்கறது மட்டும் இல்ல, ஒத்தர் இன்னொருத்தரை அணுகி எந்த ஒரு உதவி கேக்கறதையும்தான் சொல்றேன். அப்படி உதவி கேக்கறப்ப, அவங்க எந்த அளவுக்குக் கூனிக் குறுகிப் போயிருப்பாங்கன்னு பாக்கறப்ப, இவங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படணும்னு தோணும்!"

கணேசன் மௌனமாக இருந்தான்.

"ஏண்டா, நான் சொல்றது தப்பா? நீ என்ன நினைக்கற?" என்றான் பரந்தாமன்.

"தப்பு இல்லை. அதை விட மோசமான நிலையில இருக்கறவங்க சில பேரைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன்!"

"ஒத்தர் கூனிக் குறுகி இன்னொத்தர்கிட்ட உதவி கேக்கறதை விடக் கொடுமை வேற என்ன இருக்க முடியும்?" என்றான் பரந்தாமன்.

"அப்படி ஒத்தர் உதவி கேக்கறப்ப, அவரோட நிலைமையைக் கொஞ்சம் கூட உணராம, அவங்களுக்கு உதவி செய்யற நிலைமையில இருந்துக்கிட்டு, 'முடியாது' ன்னு சொல்றாங்களே, அந்தக் கொடுமைதான் எனக்கு இன்னும் அதிக சங்கடத்தைக் கொடுக்கும்!" என்றான் பரந்தாமன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1069:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்: 
பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால், என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும், இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால், உருகும் உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Monday, May 27, 2024

1068. கல்யாண மண்டபம்

"இல்லையென்போர் இருக்கையிலே,
இருப்பவர்கள் இல்லையென்பார்!"

தொலைக்காட்சியில் ஒலித்த இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும், "எவ்வளவு எளிமையா, அழகா எழுதிட்டார் வாலி!" என்றான் குபேந்திரன், பெருமூச்சுடன்.

"ஆமாண்டா! நான் உங்கிட்ட எப்ப கடன் கேட்டாலும், நீ இல்லேன்னுதானே சொல்ற!" என்றான் அவன் நண்பன் தன்ராஜ்.

"விளையாடேதாடா! நான் ரொம்ப மன வருத்தத்தில இருக்கேன்!"

"சாரி! ஏதாவது பிரச்னையா? என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணும் இல்ல. இன்னிக்கு, எங்க ஆஃபீஸ்ல ஒரு சம்பவம் நடந்தது. அதை நினைச்சாத்தான் மனசு ரொம்ப வருத்தமா இருக்கு!"

"என்ன நடந்தது?"

"என்னோட முதலாளி ஒரு கஞ்சப் பிரபு, ஈவு இரக்கமே இல்லாதவர்னு சொல்லி இருக்கேன் இல்ல?"

"ஆமாம்."

"எங்க ஆஃபீஸ்ல சண்முகம்னு ஒத்தர் இருக்காரு. அவரோட பெண்ணுக்குக் கல்யாணம். கல்யாணச் செலவுக்காக, அவர் பி எஃப் லோன் அப்ளை பண்ணி இருக்காரு. அது கொஞ்ச நாள்ள வந்துடும். அதுக்குள்ள, அவர் புக் பண்ணி இருக்கிற கல்யாண மண்டபத்தில இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அம்பதாயிரம் ரூபா கட்டச் சொல்றாங்களாம். கட்டலேன்னா, புக்கிங்கை கேன்சல் பண்ணி வேற யாருக்காவது கொடுத்துடுவேன்னு மிரட்டறாங்களாம். அதனால, அம்பதாயிரம் ரூபாய் கடன் கேட்டு அவர் எங்க முதலாளிகிட்ட கெஞ்சினாரு. பி எஃப் லோன் வந்ததும் திருப்பிக் கொடுத்துடறேன், வட்டி கூடக் கொடுத்துடறேன்னு கெஞ்சினாரு. ஆனா, எங்க முதலாளி பிடிவாதமா முடியாதுன்னுட்டாரு."

"உன் முதலாளிகிட்ட பணம் இல்லையோ என்னவோ?"

"நீ வேற. எங்க கம்பெனியில தினம் லட்சக்கணக்கா ரொக்கம் புழங்கும். என்னோட முதலாளிக்கு அம்பதாயிரம் ரூபாயெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. அதுவும் சண்முகம் பத்து நாளைக்குள்ள கடனைத் திருப்பிக் கொடுத்துடப் போறாரு! ஆனா, தன்கிட்ட பணமே இல்லைன்னு சாதிச்சுட்டாரு எங்க முதலாளி. பணம் கட்டலேன்னா, மண்டபம் புக் பண்ணினதை அவங்க கேன்சல் பண்ணி வேற யாருக்காவது கொடுத்துட்டா என்ன செய்யறதுன்னு சண்முகம் பதறறதைப் பாத்து எங்க எல்லாருக்கும் பாவமா இருந்தது. ஆனா, எங்க முதலாளிக்கு அப்படி இல்லையே!" என்றான் குபேந்திரன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

பொருள்: 
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம், உள்ளதை ஒளித்து வைக்கும் தன்மையாகிய வன்னிலம் (பாறை) தாக்கினால் உடைந்து விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, May 26, 2024

1067. சோமநாதனின் செயல்

"இத்தனை வருஷமா, யார்கிட்டேயும் உதவி கேட்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். இப்ப அந்த வைராக்கியத்தைக் கைவிட வேண்டி இருக்கும் போல இருக்கு!" என்றான் குமார், சோர்வுடன். 

"ஆமாம். சஞ்சய்க்கு ஒரு நல்ல காலேஜில இடம் கிடைச்சிருக்கறப்ப, எப்படியாவது கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டி, அவனை அந்த காலேஜில சேர்க்க வேண்டாமா?" என்றார் குமாரின் தந்தை சோமநாதன். தொடர்ந்து, "யார்கிட்ட உதவி கேக்கறதா இருக்க?" என்றார்.

"சாமிநாதன்கிட்டதான். நமக்கு அவரை விட்டா யாரு இருக்காங்க?"

"சாமிநாதன் வசதியானவன்தான். ஆனா, எப்பவுமே இல்லைப் பாட்டுப் பாடறவன். நூறு ரூபா கேட்டாக் கூட, 'அடாடா! அரை மணி நேரம் முன்னால வந்திருக்கக் கூடாது? இப்பதான் ஒத்தர் டொனேஷன் கேட்டாருன்னு கையில இருந்த நூறு ரூபாயைக் கொடுத்துட்டேன். இப்ப எங்கிட்ட எதுவுமே இல்லையே'ம்பான். அவன்கிட்ட போயா கேக்கப் போற?"

"உங்களுக்கு எப்படிப்பா தெரியும்?"

"நான் அனுபவப்பட்டிருக்கேனே! தயவு செஞ்சு அவன்கிட்ட மட்டும் போய் உதவி கேக்காதே!"

"எனக்கு அவரை விட்டா வேற யாரையும் தெரியாதே!"

"நான் சொன்னா கேக்க மாட்ட. சரி, நீ எப்ப அவனைப் போய்ப் பாக்கப் போற?" என்றார் சோமநாதன்.

"நாளைக்கு சனிக்கிழமை. எனக்கு லீவு. அவரும் வீட்டில இருப்பாரு. அதனால, நாளைக் காலையில போகலாம்னு இருக்கேன். எதுக்குக் கேக்கறீங்க?" என்றான் குமார்.

"சும்மாதான்!"

ன்று இரவு அலுவலகத்திலிருந்து குமார் வீட்டுக்கு வந்தபோது, சோமநாதன் வீட்டில் இல்லை.

"அப்பா எங்கே போயிருக்காரு?" என்றான் குமார், தன் மனைவி கோகிலாவிடம்.

"எங்கேன்னு தெரியல. வெளியில போயிட்டு வரேன்னு சாயந்திரம் கிளம்பிப் போனாரு" என்றாள் கோகிலா.

சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சோமநாதன், குமாரிடம் "இந்தா!" என்று ஒரு செக்கை நீட்டினார்.

"என்னப்பா இது?"

"பாரு!" 

"என் பேருக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு செக்! யார் கொடுத்தாங்க?" என்றான் குமார், வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.

"உன் சித்தப்பாதான்!"

"எப்படிப்பா? நீங்கதான் அவரோட பேசறதே இல்லையே!"

"ஒரு மனஸ்தாபத்தினால பேசாம இருந்தேன். நீ சாமிநாதன்கிட்ட போய் உதவி கேக்கப் போறன்னு சொன்னதும், நீ அவன்கிட்ட உதவி கேட்டு ஏமாந்து வரதை விட, நான் கௌரவம் பாக்காம, என் தம்பிகிட்ட போய்க் கேக்கலாம்னு முடிவு பண்ணினேன். அண்ணன் இறங்கி வந்து, நம்மகிட்ட பேசி, உதவி கேட்டுட்டாரேங்கற சந்தோஷத்தில, என் தம்பி உடனே செக் எழுதிக் கொடுத்துட்டான். எப்ப முடியுமோ அப்ப திருப்பிக் கொடுத்தா போதும்னு சொல்லிட்டான்!" என்றார் சோமநாதன்.

"ஏம்ப்பா, நான் சாமிநாதன்கிட்ட கேக்கற வரையிலும் பொறுத்திருக்கலாமே! அதுக்குள்ள, ஏன் நீங்க உங்க கௌரவத்தை விட்டுக் கொடுத்து, சித்தப்பாகிட்ட உதவி கேட்டீங்க?"

"வச்சுக்கிட்டே இல்லேன்னு சொல்றவன்கிட்ட போய் உதவி கேட்டுட்டு, வெறும் கையோட திரும்பி வரதை விட, என் சொந்தத் தம்பிகிட்ட என் கௌரவத்தை விட்டுக் கொடுத்து உதவி கேட்டது ஒண்ணும் தப்பு இல்ல!" என்றார் சோமநாதன், உறுதியாக.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1067:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

பொருள்: 
இரந்து கேட்பதானால், உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1066. மாட்டுக்காக...

"நாம பட்டினி கிடந்துடலாம். பசுமாடு பட்டினி கிடக்கறதைப் பார்த்தாத்தான் பரிதாபமா இருக்கு!" என்றாள் செண்பகம்.

"அப்பப்ப ஏதாவது தீனி கொடுத்துக்கிட்டுத்தானே இருக்கோம்! ஏன், மாடு கத்திச்சா என்ன?" என்று கேட்டான் பழனி.

"அது ஏன் கத்துது? அதுக்கு நம்ம நிலைமை நல்லாத் தெரியும் போலருக்கு. அது பொறுமையா, அமைதியாத்தான் இருக்கு. எனக்குத்தான் அது மூஞ்சியைப் பார்த்தா, அது பசியால வாடற மாதிரி இருக்கு."

"வீட்டில பருத்திக் கொட்டை இருக்கு இல்ல?"

"இருக்கு. சாயந்திரம் கொடுக்கறதுக்காக வச்சிருக்கேன். ஆமாம், ஊர்ல நம்மை மாதிரி கஷ்டப்படறவங்க நிறைய பேர் இருக்காங்க இல்ல?" என்றாள் செண்பகம்.

"ஆமாம். மழை பெய்யல, விளைச்சல் இல்லேன்னா, எல்லாருக்கும்தானே கஷ்டம்?"

"ஆனா, அவங்க யாரும் நம்மை மாதிரி பட்டினி கிடக்கல. கடனை உடனை வாங்கி, ஓரளவுக்காவது நல்லா சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. நீங்க மட்டும்தான் யார்கிட்டேயும் எந்த உதவியும் கேக்ககக் கூடாதுன்னு பிடிவாதமா இருக்கீங்க!"

"என்ன செய்யறது? நான் அப்படியே இருந்து பழகிட்டேன்!"

"மத்தவங்ககிட்ட இனாமா எதையும் கேக்கறதுதான் தப்பு. கடன் கேக்கலாம் இல்ல? உங்களை நம்பிக் கடன் கொடுக்க, இந்த ஊர்ல எத்தனையோ பேர் இருக்காங்களே!"

"இருக்காங்க. கடன் வாங்கலாம். நாளைக்கு நமக்கு ஒரு இடத்திலேந்து பணம் வரப் போகுதுன்னு நிச்சயமாத் தெரிஞ்சா, அதை நம்பிக் கடன் வாங்கலாம். அப்படி ஒரு நிச்சயமில்லாத நிலைமையில, கடன் கேட்டாலும் அது பிச்சை கேக்கற மாதிரிதான்!" என்றான் பழனி.

"என்னவோ, நீங்களும், உங்க கொள்கையும்! நம்ம மாட்டுக்கு அரை வயத்துக்குத் தீனி போடறமேங்கற ஆத்தாமை எனக்கு ரொம்ப இருக்கு!" என்றாள் செண்பகம்.

"இதோ வரேன்!" என்று வெளியே கிளம்பினான் பழனி.

ரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பிய பழனியின் தலையில் ஒரு புல்கட்டு இருந்தது.

"எங்கே போயிட்டு வரீங்க, இந்த வெய்யில்ல?" என்றாள் செண்பகம்.

"எல்லா இடத்திலேயும் அலைஞ்சு திரிஞ்சு, அங்கங்கே இருக்கற புல்லை வெட்டி சேகரிச்சுக் கொண்டு வந்திருக்கேன். இதை மாட்டுக்குக் கொஞ்சம் கொஞ்சமா கொடு!" என்றான் பழனி.

'யார்கிட்டேயாவது கடன் வாங்கி, மாட்டுக்குப் பருத்திக் கொட்டை வாங்கிட்டு வரப் போறீங்களோன்னு நினைச்சேன். நீங்களாவது மாறறதாவது!' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் செண்பகம்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1066:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

பொருள்: 
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும், அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1065. புழுங்கலரிசிக் கஞ்சி!

"இன்னிக்கு ஒரு இன்ஸ்டிட்யூட்டில வரச் சொல்லி இருக்காங்க, போய்ப் பாத்துட்டு வரேன்!" என்று கிளம்பினான் சபரி.

'நீங்களும்தான் இது மாதிரி அடிக்கடி போய்ப் பார்த்துட்டு வரீங்க. ஆனா, வேலை கிடைக்க மாட்டேங்குதே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட மைதிலி, "ம்" என்றாள், பலவீனமான குரலில்.

மாலையில் சபரி வீட்டுக்குள் நுழைந்தபோது, அவன் முகம் உற்சாகமாக இருந்தது.

"என்ன, வேலை கிடைச்சுடுச்சா?" என்றாள் மைதிலி, ஆவலுடன்.

"கிடைச்ச மாதிரிதான். இன்டர்வியூ முடிஞ்சப்புறம், ரெண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னாங்க. நான் தயார் பண்ணிக்காட்டாலும், எடுத்தேன். வகுப்பு முடிஞ்சதும் மாணவர்கள்கிட்ட கருத்துக் கேட்டிருக்காங்க. அவங்க நல்லபடியா சொன்னதால, 'அடுத்து வாரம் புது பேட்ச் ஆரம்பிக்கப் போறோம். அப்ப உங்களைக் கூப்பிடறோம்'னு சொன்னாங்க. இன்னிக்கு வகுப்பு எடுத்ததுக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தாங்க!"

"பரவாயில்லையே! இந்த வேலை நிரந்தரமா இருக்கும் இல்ல?"

"இருக்கும்னுதான் நினைக்கிறேன். நான் வேலை செஞ்சுக்கிட்டிருந்த கம்பெனியை திடீர்னு மூடினப்புறம், என்னென்னவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டு, வேற வேலை கிடைக்காததல, இது மாதிரி இன்ஸ்டிட்யூட்கள்ள, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சேன். ஆனா, நிரந்தர வருமானம் இல்ல. இப்பதான் ஒரு நல்ல இன்ஸ்டிட்யூட் அமைஞ்சிருக்கு."

"சரி. பணம் கொடுத்தாங்களே, அதை என்ன செய்யப் போறீங்க?" என்றாள் மைதிலி.

 "வீட்டுக்கு சாமான் வாங்கணும் இல்ல? வரும்போது கடையில சொல்லிட்டு வந்திருக்கேன். கொஞ்ச நேரத்தில வந்துடும்" என்றான் சபரி.

சற்று நேரத்தில் கடையிலிருந்து பொருட்கள் வந்தன.

பொருட்களை வாங்கி உள்ளே வைத்த மைதிலி, "காய்கறியே இல்லையே, என்ன சமைக்கிறது?" என்றாள்.

சற்று யோசித்த சபரி, "புழுங்கரிசியை வச்சுக் கஞ்சி வச்சுடு. நாளைக்குக் காலையில காய்கறி வாங்கி சமைச்சுக்கலாம்!" என்றான்.

"புழுங்கரிசிக் கஞ்சியில மோர் ஊத்தி சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும். வீட்டில மோர் இல்லையே!"

"மோர் இல்லாட்டா என்ன? தண்ணி ஊத்திக் குடிக்கலாம்!"

"அது நல்லாவா இருக்கும்?" என்றாள் மைதிலி.

"நீ செஞ்சா பிரமாதமாத்தான் இருக்கும்!" என்ற சபரி, 'கஞ்சியின் ருசி எப்படி இருந்தாலும், இத்தனை நாட்களாக எவ்வளவு கஷ்டப்பட்டபோதும், யாரிடமும் உதவி கேட்பதில்லை என்று உறுதியாக இருந்து, இன்று நான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய அரிசியில் செய்யப்பட்ட கஞ்சியைக் குடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்!' என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1065:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்: 
நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, May 25, 2024

1064. நண்பனைத் தேடிச் சென்றபோது...

டெல்லியிலிருந்து வந்திருந்த தன் கல்லூரி நண்பன் நீலகண்டனை நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தான் மகேஷ்.

ஒருவரை ஒருவர் நலம் விசாரித்த பிறகு, "சென்னையில இருக்கிற நம் நண்பர்களைப் பாக்கணும்!" என்றான் நீலகண்டன். 

"கண்டிப்பா!" என்ற மகேஷ், தன் தொலைபேசி எண் டயரியைப் பிரித்து, ஒவ்வொரு நண்பனின் தொலைபேசி எண்ணையும் அழைத்தான். நான்கு பேர்களுடன் தொடர்பு கிடைத்தது. நீலகண்டன் அவர்களுடன் உரையாடினான்.

"ரகுவுக்கும், கணேஷுக்கும் வீட்டில ஃபோன் இல்ல. அவங்களை ஆஃபீஸ் நம்பர்ல கூப்பிட முடியாது. சாயந்திரம், வீட்டில போய்ப் பார்க்கலாம். அவங்களுக்கும் சர்ப்ரைஸா இருக்கும்!" என்றான் மகேஷ்.

"ஜனாவைக் கூப்பிடலியே!" என்றான் நீலகண்டன்.

"கூப்பிட்டேன். அவன் வீட்டு நம்பர் கிடைக்கல. அது ஒர்க் பண்ணல போல இருக்கு. அவன் ஆஃபீஸ் நம்பர் எங்கிட்ட இல்ல. ஆனா, அட்ரஸ் தெரியும். நேரிலயே போய்ப் பாத்துடலாம்."

"அவன் சொந்தமா பிசினஸ் பண்றான் இல்ல?"

"ஆமாம். எப்பவுமே பிசியா இருப்பான். ஆளைப் பிடிக்கவே முடியாது. அதனால, நான் அவனைத் தொந்தரவு பண்றதில்ல. அவனே அப்பப்ப ஃபோன் பண்ணுவான். ஆனா, ரெண்டு மூணு மாசமா அவன்கிட்டேந்து ஃபோன் வரலை. நானே பண்ணணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, இப்ப பண்ணினா, அவன் நம்பர் கிடைக்கல."

"சரி. இப்பவே, அவனை ஆஃபீஸ்ல போய்ப் பாத்துடலாம்" என்றான் நீலகண்டன்.

இருவரும் ஜனா என்று அழைக்கப்பட்ட ஜனார்த்தனின் நிறுவனம் இருந்த இடத்துக்குப் போனபோது, அந்த இடத்தில் வேறொரு நிறுவனத்தின் போர்டு காணப்பட்டது. விசாரித்ததில், ஜனார்த்தனம் அந்த இடத்தைக் காலி செய்து விட்டதாகவும், அலுவலகத்தைத் தன் வீட்டுக்கு மாற்றி விட்டதாகவும் தெரிந்தது.

"ஆஃபீஸ் வச்சுக்கற அளவுக்கு அவன் வீட்டில இடம் கிடையாதே. போய்ப் பாக்கலாம்!" என்றான் மகேஷ்.

னா வீட்டில் இருந்தான். ஆனால், அங்கே அலுவலகம் என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

நீலகண்டனும், ஜனாவும் சற்று நேரம் உரையாடிய பிறகு, "என்னடா, ஆஃபீஸை வீட்டுக்கு மாத்திட்டதா சொன்னாங்க? இங்கே, ஆஃபீஸ் எதுவும் இல்லையே!" என்றான் மகேஷ்.

"ஆஃபீஸ் ஏது? பிசினஸையே மூடியாச்சு!"

"என்னடா சொல்ற? உன் ஆஃபீஸ் இருந்த இடத்தில கேட்டப்ப, ஆஃபீசை வீட்டுக்கு மாத்திட்டதாத்தானே சொன்னாங்க?" என்றான் மகேஷ், அதிர்ச்சியுடன்.

"காலி பண்ணும்போது, நான் அவங்ககிட்ட அப்படித்தான் சொல்லிட்டு வந்தேன். அதைத்தான் அவங்க உங்கிட்ட சொல்லி இருக்காங்க!"

"என்னடா ஆச்சு?"

"திடீர்னு வியாபாரத்தில ஒரு பெரிய பிரச்னை. எங்கிட்ட பொருட்களை வாங்கிக்கிட்டிருந்த ஒரு பெரிய கஸ்டமர் திடீர்னு திவாலாயிட்டாரு. எனக்கு அவர்கிட்டேந்து வர வேண்டிய பணம் மொத்தமா முடங்கிப் போச்சு. ஆனா, நான் என்னோட சப்ளையர்களுக்கும், மத்தவங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அதனால வாடகைக்கு எடுத்திருந்த ஆஃபீசைக் காலி பண்ணிட்டு, அதுக்குக் கொடுத்திருந்த அட்வான்சை வாங்கிக் கொஞ்சம் கடனை அடைச்சேன். வேலை செஞ்சவங்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிட்டு, பிசினசை மூடிட்டேன். என்னோட கார், என் மனைவியோட நகைகள் எல்லாத்தையும் வித்துட்டேன். இந்த வீட்டையும் வித்தாச்சு. இன்னும் ஒரு மாசத்தில ஹேண்ட் ஓவர் பண்ணணும். வாடகைக்கு வீடு பாத்துக்கிட்டிருக்கேன். அநேகமா எல்லாக் கடனையும் அடைச்சுட்டேன்!" என்று சொல்லிச் சிரித்தான் ஜனார்த்தனம்.

"எங்க யார்கிட்டேயும் சொல்லவே இல்லையே! சொல்லி இருந்தா, எங்களால முடிஞ்ச உதவியைப் பண்ணி இருப்போம் இல்ல?" என்றான் மகேஷ்.

"நிச்சயமாப் பண்ணி இருப்பீங்க. அதனாலதான் சொல்லல!"

"என்னடா சொல்ற?"

"உன்னை மாதிரி நண்பர்கள்கிட்ட உதவி கேட்டிருந்தா, நீங்கள்ளாம் கண்டிப்பா உதவி செஞ்சிருப்பீங்க. அதை வச்சு என்னோட பிரச்னைகளை சுலபமா சமாளிச்சிருப்பேன். ஆனா, யார்கிட்டயும் உதவி கேக்கக் கூடாதுன்னுதான், யார்கிட்டயும் என் நிலைமையை சொல்லல."

"இப்ப என்ன செய்யப் போற?"

"வேலை தேடிக்கிட்டிருக்கேன். எந்த வேலை கிடைச்சாலும் சேர்ந்துட வேண்டியதுதான்" என்று ஜனார்த்தனன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவன் மனைவி ஒரு தட்டில் காப்பிக் கோப்பைகளையும், முகத்தில் புன்னகையையும் ஏந்தியபடி உள்ளிருந்து வந்தாள்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

பொருள்: 
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும், பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Wednesday, May 22, 2024

1063. வித்யாவின் முடிவு!

இன்டர்வியூவுக்குப் போய் விட்டுத் திரும்பிய பாஸ்கரின் முகத்தைப் பார்த்தே முடிவைப் புரிந்து கொண்டாள் அவன் மனைவி வித்யா.

பாஸ்கர் உடை மாற்றிக் கொண்டு முன்னறையில் வந்து அமர்ந்ததும், "என்ன ஆச்சு? ரொம்ப நம்பிக்கையா இருந்தீங்களே!" என்றாள் வித்யா.

"வேலை கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா, சம்பளம் ரொம்பக் குறைச்சலாக் கொடுக்கறதா சொன்னாங்க. வேண்டாம்னுட்டேன்!"

"எவ்வளவு கொடுக்கறதா சொன்னாங்க?"

பாஸ்கர் தொகையைக் குறிப்பிட்டதும், "நீங்க முன்ன வாங்கின சம்பளத்தை விடக் கொஞ்சம்தானே குறைவு? ஒத்துக்கிட்டிருக்கலாமே!" என்றாள் வித்யா, ஆற்றாமையுடன்.

"என்ன பேசற நீ? முன்னே வாங்கின சம்பளத்தை விடக் குறைஞ்ச சம்பளத்துக்குப் போறது அவமானம் இல்லையா? அதை நான் ஒத்துக்கிட்டிருந்தா, அப்புறம் வேலையில சேர்ந்தப்புறம் என்னை யார் மதிப்பாங்க?" என்றான் பாஸ்கர், கோபத்துடன்.

"உங்களுக்கு வேலை போய் ஏழெட்டு மாசம் ஆயிடுச்சு. நீங்க இன்னும் வேற வேலையில சேராம இருக்கறது எனக்குக் கவலையா இருக்கு!"

"நீ கவலைப்படறதுக்கு என்ன இருக்கு? அதுதான் குடும்பம் நடத்தறத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் நான் பண்ணிட்டேனே! வேலை எங்கே போகுது? இது இல்லேன்னா, வேற வேலை கிடைச்சுட்டுப் போகுது!" என்றான் பாஸ்கர், அலட்சியமாக.

"என்னது, நீ வேலைக்குப் போகப் போறியா?" என்றான் பாஸ்கர், அதிர்ச்சியுடன்.

"ஆமாம், நாளைக்கு வேலையில சேரணும்!" என்றாள் வித்யா.

"இவ்வளவு குறைஞ்ச சம்பளத்தில நீ வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன இருக்கு?"

"என்னோட படிப்புக்கு சம்பளம் இவ்வளவுதான் கிடைக்கும். குடும்பத்தில யாராவது ஒத்தர் சம்பாதிக்கணும் இல்ல?"

பாஸ்கர் மௌனமாக இருந்தான்.

"உங்களுக்கு வேலை போனதும், நம்மால வீட்டு வாடகை கொடுக்க முடியாதுங்கறதால, நாம குடியிருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுக் காலியா இருந்த உங்க நண்பர் வீட்டுக்கு வாடகை இல்லாம குடி வந்துட்டோம். என்னோட அண்ணன் மளிகைக் கடை வச்சிருக்கறதால, மாசாமாசம் மளிகைச் சாமான்களை அனுப்பிடறாரு. மத்த செலவுகளுக்கும் யார்கிட்டயாவது பணம் வாங்கிக்கிட்டிருக்கீங்க. அதில கடன் எவ்வளவு, இனாமா எவ்வளவுன்னு எனக்குத் தெரியல. உங்களுக்கு இது எப்படி இருக்கோ தெரியல, எனக்கு அவமானமா இருக்கு. நீங்க ஒரு வேலைக்குப் போற வரையிலும், நான் என்னால முடிஞ்சதை சம்பாதிக்கணும்னு நினைக்கறேன்!" என்றாள் வித்யா, உறுதியுடன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1063:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

பொருள்: 
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Monday, May 20, 2024

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழக்கம் போல், காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலிலே மூழ்க வேண்டும்...'

செல்வகுமார் இசை ஒலிப்பை நிறுத்தினார்.

"ஏன் நிறுத்திட்டீங்க? உங்களுக்குத்தான் பழைய பாட்டு கேக்கறதுன்னா ரொம்பப் பிடிக்குமே!" என்றாள் கோமதி.

"பிடிக்கும்தான். ஆனா இந்தப் பாட்டு, கடவுளுக்கே சாபம் கொடுக்கற மாதிரி இருக்கு. எனக்கு அந்த வரிகளைக் கேட்கக் கஷ்டமா இருக்கு. கண்ணதாசன் ஏன் இப்படி எழுதினார்னு தெரியல" என்றார் செல்வகுமார்.

து காலை நேரம் என்பதால், அவர்கள் கோவிலில் நுழையும்போது அதிகக் கூட்டம் இல்லை. அவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. நிதானமாக, ஒவ்வொரு சன்னிதியாக நின்று தரிசித்து விட்டு வந்தனர்.

கோவிலில் பிரசாதம் வேறு கிடைத்தது. சர்க்கரைப் பொங்கல். நிறையவே கொடுத்தார்கள். பிரசாதத்தை ருசித்து உண்டு விட்டுக் கைகழுவிக் கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது கோவிலுக்குள் அதிகம் பேர் நுழைய ஆரம்பித்திருந்தனர். கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்களை விடக் கோவில் வாசலில் குவிந்திருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

பலர் வரிசையில் அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்க, சிலர் அங்கும் இங்கும் நடந்தபடி, கோவிலுக்குள் நுழைபவர்களிடமும், தரிசனம் முடித்து விட்டு வருபவர்களிடமும் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

"நாம உள்ளே நுழையறப்ப ஒண்ணு ரெண்டு பிச்சைக்காரங்கதான் இருந்தாங்க. இப்ப, இவ்வளவு பேர் வந்துட்டாங்களே! அவங்களுக்கும் வேலை நேரம் இருக்கு போலருக்கு!" என்றாள் கோமதி, விளையாட்டாக.

செல்வகுமார் தன்னிடம் இருந்த சில்லறைக் காசுகளையும், பத்து ரூபாய்த் தாள்களையும் சிலருக்குப் போட்டு விட்டு, விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தார். 

அவர் சிலருக்குப் பிச்சை அளித்ததைக் கண்ட மற்ற பிச்சைக்காரர்கள் அவர் பின்னே ஓடி வந்தனர். அவர் காரில் அமர்ந்த பிறகும், காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டினர்.

செல்வகுமார் காரைக் கிளப்பினார்.

"கையில இருந்த காசை எல்லாம் பிச்சைக்காரங்களுக்குப் போட்டுட்டீங்க போலருக்கே!" என்றாள் கோமதி.

"ஆமாம். சில பேருக்குத்தான் போட முடிஞ்சுது. எல்லாருக்கும் போடற அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லையேன்னு வருத்தமா இருக்கு" என்றார் செல்வகுமார்.

"நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு. உலகத்தில இருக்கற எல்லாப் பிச்சைக்காரங்களுக்கும் உங்களால பிச்சை போட முடியுமா? அப்படியே போட்டாலும், தினமும் போட முடியுமா? இதெல்லாம் கடவுளோட படைப்பு. அதை நம்மால மாத்த முடியாது."

சட்டென்று காரை நிறுத்தினார் செல்வகுமார்.

"என்ன ஆச்சு?" என்றாள் கோமதி, பதற்றத்துடன்.

"ஒண்ணுமில்ல" என்றபடியே மீண்டும் காரைக் கிளப்பிய செல்வகுமார், "இதெல்லாம் கடவுளோட படைப்புன்னு நீ சொன்னதைக் கேட்டதும், கொஞ்சம் அதிர்ச்சி ஆயிடுச்சு. உண்மைதான். கடவுள் இருக்கிற கோவில் வாசலிலேயே இவ்வளவு பிச்சைக்காரங்க. கோவிலுக்குள்ள சக்கரைப் பொங்கல், புளியோதரைன்னு பிரசாத விநியோகம்! இத்தனை பேர் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமையைக் கடவுள் ஏன் ஏற்படுத்தினார்?"

கோமதி மௌனமாக இருந்தாள்.

"ஒரு அரசாங்கம் சரியா செயல்படலேன்னா, தேர்தல்ல அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிட்டு, வேற அரசாங்கத்தைக் கொண்டு வரோம். உலகத்தில சில பேர் பிச்சை எடுத்துத்தான் வாழணுங்கற நிலையை ஏற்படுத்தின கடவுளுக்கு என்ன தண்டனை கொடுக்கறது? தெருத்தெருவா அலையற பிச்சைக்காரங்க மாதிரி, அவரும் இந்த உலகத்தில திரியற நிலைமை வரணும். அதுதான் அவருக்கான தண்டனை!"

சற்று நேரம் முன்பு, 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்' என்ற திரைப்படப் பாடல் வரியைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை நிறுத்திய கணவரா இப்படிப் பேசுகிறார் என்று வியந்தாள் கோமதி.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

பொருள்: 
உலகில் சிலர் இரந்து (பிச்சை எடுத்து) உயிர் வாழ வேண்டிய நிலையை உலகத்தைப் படைத்தவன் ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Thursday, May 16, 2024

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!"

டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்ததும், "என்னங்க இப்படிச் சொல்றாரு?" என்றாள் சுகுணா.

"ஏற்கெனவே நமக்குத் தெரிஞ்சதுதானே? ஸ்கேன் எடுத்துப் பார்த்து ஏற்கெனவே ஒரு டாக்டர் சொன்னதை சரிபார்க்கத்தானே இவர்கிட்ட வந்தோம்?" என்றான் மோகன்ராஜ்.

"அது சரி. பணத்துக்கு எங்கே போறது?"

"வீட்டில போய்ப் பேசலாம்" என்றான் மோகன்ராஜ்.

வீட்டுக்குச் சென்றதும், தன்னிடம் ரொக்கமாக இருக்கும் பணம், வங்கியில் இருந்த வைப்புத் தொகைகளை எடுத்தால் கிடைக்கக் கூடிய பணம், அலுவலகத்தில் கிடைக்கும் குறைந்த காலக் கடன் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தபோது, சமாளித்து விடலாம் என்று தோன்றியது.

"அப்படியும் போதலேன்னா, உன்னோட சங்கிலியை அடகு வச்சுக் கடன் வாங்கிக்கலாம்!" என்றான் மோகன்ராஜ்.

"ஏங்க, இப்படி எல்லாத்தையும் துடைச்சு எடுக்கணுமா? உங்க பாம்பே சித்தப்பாகிட்டக் கேக்கலாம் இல்ல?" என்றாள் சுகுணா.

"வேண்டாம்!" என்றான் மோகன்ராஜ், சுருக்கமாக.

சுகுணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. நெருங்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்து, நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். ஒருவர் கூட, 'எவ்வளவு செலவாயிற்று?' 'பணத்துக்கு என்ன செய்தீர்கள்?' 'பணம் ஏதாவது வேண்டுமா?' போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை.

ஐந்தாறு நாட்களில், சுகுணா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டாள்.

"பணம் சரியா இருந்ததா? தேவைப்பட்டா, நகையை வச்சுக் கடன் வாங்கலாம்னு சொன்னீங்களே!" என்றாள் சுகுணா.

"ஆஸ்பத்திரியிலேந்து கிளம்பறப்ப, என் பர்ஸ் காலியா இருந்தது. உன்னை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர, டாக்சிக்குப் பணம் வேணுமே! ஏடிஎம்ல எடுத்தேன். அக்கவுன்ட்ல 500 ரூபாதான் இருந்தது. அது டாக்சிக்கு சரியாப் போச்சு. எனக்கே ஆச்சரியமா இருக்கு. நாம புரட்டின பணம் ரொம்ப கரெக்டா இருந்தது!" என்றான் மோகன்ராஜ், சிரித்துக் கொண்டே.

ன்று இரவு, மும்பையிலிருந்து மோகன்ராஜின் சித்தப்பா வைத்திலிங்கம் ஃபோன் செய்தார். "ஏண்டா, சுகுணாவுக்கு ஆபரேஷன் ஆச்சாமே, எங்கிட்ட சொல்லவே இல்லையே! முரளியோட ஃபோன்ல பேசினப்ப, அவன்தான் சொன்னான்" என்றார்.

"இன்னிக்குத்தான் ஆஸ்பத்திரியிலேந்து வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்தேன், சித்தப்பா. நாளைக்கு சொல்லலாம்னு நினைச்சேன். இது மாதிரி ஆபரேஷன்லாம் இப்ப ரொம்ப சாதாரணமா ஆயிடுச்சு. முன்னாலேயே சொன்னா, நீங்க கவலைப்படுவீங்களேன்னுதான் சொல்லலை" என்றான் மோகன்ராஜ்.

"அது சரி. ஆபரேஷனுக்கு நிறைய செலவாகி இருக்குமே! எங்கிட்ட கேட்டிருந்தா, நான் உதவி செஞ்சிருப்பேன் இல்ல? அப்பா மாதிரின்னு சொல்லுவ. ஆனா, எங்கிட்ட உதவி கேக்க மாட்ட, இல்ல?" என்றார் வைத்திலிங்கம், சற்றுக் கோபத்துடன்.

"எப்ப உதவி தேவைப்பட்டாலும் செய்யறதுக்குத் தயாரா இருக்கற உங்களை மாதிரி ஒத்தர் இருக்கறது எனக்குப் பெரிய பலம், சித்தப்பா. தேவைப்பட்டா, கண்டிப்பா கேக்கறேன்" என்ற மோகன்ராஜ், 'ஆனா, உங்களை மாதிரி ஒத்தர்கிட்ட கூட உதவி கேக்காம வாழணுங்கறதுதான் என்னோட லட்சியம்!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)

குறள் 1061:
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

பொருள்: 
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமல் இருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...