"அந்த ஆள் பேர் என்ன, மாணிக்கம், அவன் எத்தனை நாளா உங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தான்?" என்றார் காவல் ஆய்வாளர் சிதம்பரம்.
"ஆறு மாசமா!"
"வேலையில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகி இருக்கு. அதுக்குள்ள, பாங்க்லேந்து 10 லட்சம் ரூபா பணம் எடுத்துக்கிட்டு வர பொறுப்பை அவன்கிட்ட கொடுப்பீங்களா?"
"அவனை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன், சார். இதுக்கு முன்னால கூட, அஞ்சாறு தடவை அவனை பாங்க்குக்கு அனுப்பி இருக்கேன்."
"ஆனா, அப்பல்லாம் அம்பதாயிரம், ஒரு லட்சம் மாதிரி சின்னத் தொகையை எடுக்கத்தான் அனுப்பி இருக்கீங்க, இல்ல?" என்றார் சிதம்பரம், இடைமறித்து.
"ஆமாம். எப்படி சரியா சொல்றீங்க?" என்றார் முத்துசாமி, வியப்புடன்.
"எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆளைப் பெரிய தொகை எடுத்து வரதுக்கு நம்பி அனுப்ப மாட்டீங்க இல்ல? இந்த மாதிரி ஆளுங்கல்லாம், சின்னத் தொகைகள் விஷயத்தில நாணயமா நடந்து உங்க நம்பிக்கையைச் சம்பாதிச்சுட்டுப் பெரிய தொகை வரப்ப மொத்தமா அடிச்சுடுவாங்க. நாங்க எவ்வளவு பேரைப் பாத்திருக்கோம்!"
"நீங்க சொல்றது சரிதான். இன்னிக்கு பாங்க்குக்குப் போய் பத்து லட்சம் எடுக்கணுங்கறதை அவன்கிட்ட நேத்திக்கே சொல்லி இருந்தேன். அதனால, திட்டம் போட்டு, நேத்திக்கு சாயந்திரம் சில பெரிய கஸ்டமர்கள்கிட்ட போய், மூணு லட்சம் ரூபா கேஷ் கலெக்ட் பண்ணி இருக்கான். அதையும் எடுத்துக்கிட்டு ஓடிட்டான். பாவி, எவ்வளவு நம்பினேன் அவனை!" என்றார் முத்துசாமி, பதற்றத்துடனும், சோர்வுடனும். தொடர்ந்து, "அவனைப் புடிச்சுடுவீங்க இல்ல?" என்றார், கெஞ்சும் குரலில்.
"பாக்கலாம். திட்டம் போட்டுப் பண்ணி இருக்கான். அவனைப் பத்தி எந்த விவரமும் இல்ல. அவன் தனியா ஒரு லாட்ஜில தங்கி இருக்கான். இன்னிக்குக் காலையில லாட்ஜுலேந்து கிளம்பிப் போனவன், திரும்ப ரூமுக்கு வரலை. வரவும் மாட்டான். எங்கேயாவது வெளியூர் போயிருக்கானா, இல்ல உள்ளூர்லயே தங்கி இருக்கானான்னு தெரியல. அவன் உங்ககிட்ட கொடுத்த சொந்த ஊர் அட்ரஸ் போலி. அவன் ஃபோட்டோ கூட உங்ககிட்ட இல்ல. எப்படித் தேடறது? அவனை எப்படி நம்பினீங்கன்னுதான் தெரியல. அவனைப் பத்தி எதுவுமே தெரியாம, எப்படி வேலைக்கு எடுத்தீங்கன்னும் தெரியல!" என்றார் ஆய்வாளர் சிதம்பரம்.
"சார்! எங்களை மாதிரி சின்ன கம்பெனியில எல்லாம் எப்படி வேலைக்கு ஆட்களை எடுப்பமோ, அப்படித்தான் அவனையும் எடுத்தேன். பேப்பர்ல விளம்பரம் கொடுத்து, வந்த விண்ணப்பங்களைப் பரிசீலிச்சு, பத்துப் பதினைஞ்சு பேரை இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டு, அதில செலக்ட் ஆனவன்தான் சார் அவன். ஆரம்பத்தில ஆஃபீஸ் வேலைதான் பாத்துக்கிட்டிருந்தான். அப்புறம் அவன் நல்லவன்னு தோணினதாலதான், கலெக்ஷன், பாங்க்குக்கெல்லாம் அனுப்ப ஆரம்பிச்சேன். இங்கே வேலை செய்யற யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. ஒத்தர் கூட அவனைப் பத்தித் தப்பா சொல்ல மாட்டாங்க!"
"ஆமாம், சார். அவன் எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லாப் பழகினான். அதோட, எல்லாருக்கும் உதவி செய்யற குணம் அவன்கிட்ட உண்டு" என்றார் ஒரு மூத்த ஊழியர்.
"இவ்வளவு நல்லவனா இருந்த ஒத்தன் ஏமாத்துவான்னு எப்படி சார் எதிரபார்க்க முடியும்?" என்றார் முத்துசாமி, விரக்தியுடன்.
"சார்! அயோக்கியர்களுக்குன்னு தனி அடையாளம் எதுவும் கிடையாது. அவங்களும் மத்தவங்க மாதிரிதான் இருப்பாங்க. ஒத்தன் அயோக்கியன்னு அவன் மூஞ்சியில எழுதி ஒட்டி இருக்காது! ஒத்தனோட அயோக்கியத்தனம் வெளிப்பட்டப்புறம்தான், இவனா இப்படிப் பண்ணினான்னு தோணும். எங்க தொழில்ல நாங்க தினமும் பாக்கற விஷயம்தான் இது. பாக்கலாம், அவன் கிடைக்கறானான்னு. கிடைச்சா, உங்க அதிர்ஷ்டம்!" என்றார் சிதம்பரம்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
No comments:
Post a Comment