Tuesday, September 8, 2020

422. கண் போன போக்கிலே!

"நாளைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. அதுக்குத் தயார் செய்யணும்!" என்றான் ஆதித்தன்.

"நீங்க என்ன புதுசாவா வேலைக்குப் போறீங்க? ஏற்கெனவே ஒரு நல்ல வேலையில இருக்கீங்க. இப்ப இன்னும் சிறப்பான வேலைக்கு முயற்சி பண்றீங்க. இதுக்குக் கூடவா தயார் செய்யணும்?" என்றாள் அவன் மனைவி ரேணுகா.

"பதுசா வேலைக்கு முயற்சி பண்றப்ப படிச்ச படிப்பையும், பொது அறிவையும் தவிர வேற எதுவும் தெரிஞ்சுருக்கணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. என்னை மாதிரி நிறைய அனுபவத்தோட ஒரு உயர்ந்த பதவிக்கு முயற்சி பண்றவங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்பாங்க. என்னோட நிறுவனம் ஈடுபட்டிருக்கிற தொழில் துறை சம்பந்தமா நிறையத் தெரியணும். நல்லவேளை இன்டர்நெட்னு ஒண்ணு இருக்கு. அதில நிறைய விஷயங்களுக்கும் இருக்கு!"

"மணி பத்து ஆயிடுச்சே! நாளைக்குக் காலையில பத்து மணிக்கு இன்டர்வியூ.. எவ்வளவு நேரம் இன்டர்நெட் பாக்கப்போறீங்க?"

"தெரியல. இன்டர்நெட் ஒரு வரம்தான். ஆனா அதில தேட ஆரம்பிச்சா முடிவில்லாம போய்க்கிட்டே இருக்கும். இது இன்டர்நெட்டோட சாபக்கேடு!. என்ன செய்யறது? ஒரு மணி ரெண்டு மணி கூட ஆகும். நீ போய்த் தூங்கு" என்று மனைவியை அனுப்பி விட்டு கூகிள் கதவைத் தட்டினான் ஆதித்தன்.

டுத்த நாள் இன்டர்வியூ முடிந்து வீட்டுக்கு வந்த ஆதித்தனிடம் "எப்படி இருந்தது இன்டர்வியூ?" என்றாள் ரேணுகா.

"நல்லாப் போகல!" என்றான் ஆதித்தன் ஏமாற்றத்துடன்.

"ராத்திரி அவ்வளவு நேரம் கண் முழிச்சு இன்டர்நெட்ல படிச்சு தயார் பண்ணிக்கிட்டுப் போனீங்களே, அது கை கொடுக்கலியா?" என்றாள் ரேணுகா.

சில விநாடிகள் மௌனமாக இருந்த ஆதித்தன், "இன்டர்நெட்ல என் நேரத்தை சரியாப் பயன்படுத்தி இருந்தா, இன்டர்வியூவில கேட்ட பல கேள்விகளுக்கு என்னால நல்லா பதில் சொல்லி இருக்க முடியும். வேலையும் எனக்குக் கிடைச்சிருக்கலாம்!" என்றான் ஆதித்தன்.

"நேரத்தை சரியா பயன்படுத்தலையா? அப்படின்னா அவ்வளவு நேரம் என்ன பாத்துக்கிட்டிருந்தீங்க?"

"இன்டர்நெட் பாத்துக்கிட்டிருந்தப்ப வீட்டிலிருந்தே தொழில் செஞ்சு பணம் சம்பாதிக்கலாம்னு ஒரு விளம்பரத்தைப் பாத்துட்டு அது என்னன்னு பாக்கலாம்னு கிளிக் பண்ணி அதைப் பத்திப் படிச்சுப் பாத்தேன். படிச்சப்பறம்தான் அது எனக்கு ஒத்து வரதுன்னு புரிஞ்சது. அப்புறம் அது மாதிரி இன்னும் சில விளம்பரங்கள் வந்தது. அதில சிலதெல்லாம் ரொம்ப கவர்ச்சியாத் தெரிஞ்சதால, அதையெல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். இதிலேயே ரெண்டு மணி நேரம் ஓடிடுச்சு. ஆனா எதுவுமே எனக்குப் பயன்படாததா இருந்தது. நேரத்தை வீணாக்கிட்டமேன்னு என் பேரிலேயே எரிச்சல் வந்தது. அப்புறம் படிக்க மூட் இல்ல. படுத்துத் தூங்கிட்டேன்."

"ஏங்க, நீங்க இவ்வளவு படிச்சவரு, அனுபவம் உள்ளவரு, விஷயம் தெரிஞ்சவரு. ஏன் இப்படிப் பண்ணினீங்க?"

"என்ன செய்யறது? மனசை அது போற போக்கில விட்டா அப்படித்தான். இது ஒரு பாடம்! விடு, வேற நல்ல சந்தர்ப்பம் வரும். பாக்கலாம்" என்றான் ஆதித்தன், வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.

"பாருங்க உங்களுக்கு ஏத்த மாதிரி டிவியில ஒரு பாட்டு போடறாங்க!" என்றாள் மனைவி சிரித்தபடி.

'கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போனபோக்கிலே மனிதன் போகலாமா'

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஒலித்தது.

"உங்களுக்காகவே கண்ணதாசன் எழுதின மாதிரி இல்ல?" என்றாள் ரேணுகா கேலி ததும்பிய குரலில்.

"இல்லை"

"இல்லையா?"

"இல்லை! இதை எழுதினவர் கண்ணதாசன் இல்லை, வாலி!" என்றான் ஆதித்தன் சிரித்தபடி. 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 422:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

பொருள்:
மனம் போகும் வழியில் எல்லாம் அதைப் போக விடாமல், தீயவற்றிலிருந்து  விலக்கி, அதை நல்ல வழியில் நடத்துவதே அறிவு.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

2 comments:

  1. Fantastic story (in fact this is a true fact )

    ReplyDelete
  2. Fantastic (very apt )story . Google gobbles time is a true fact.!

    ReplyDelete

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...