Sunday, June 16, 2024

1079. யார் கொடுத்த புகார்?

"கார்னர் பிளாட்டுன்னு அதிக விலை கொடுத்து வாங்கினேன். இப்ப, அதுவே ஒரு பிரச்னை ஆயிடுச்சு" என்றார் ரத்தினசாமி.

"ஏன் அப்படி?" என்றார் அவருடைய நண்பர் சண்முகம்.

"என் பிளாட்டுக்குப் பக்கத்தில இருக்கற ரோடில ஒரு அடியை ஆக்கிரமிச்சு நான் காம்பவுண்ட் சுவர் கட்டியிருக்கேன்னு என் மேல யாரோ புகார் கொடுத்திருக்காங்க."

"அப்புறம்?"

"முனிசிபாலிடியிலேந்து எனக்கு நோட்டீஸ் வந்திருக்கு."

"என்னன்னு?"

"முனிசிபாலிடிக்குச் சொந்தமான சாலையில ஒரு அடி அகல நிலத்தை நான் ஆக்கிரமிச்சிருக்கேனாம். அதனால, என் காம்பவுண்ட் சுவரை இடிச்சு உள்ளே கட்டிக்கிட்டு, அந்த நிலத்தை முனிசிபாலிடிக்கு ஒப்படைக்கணுமாம்!"

"அப்படி ஒரு நோட்டீஸை எப்படி அனுப்ப முடியும்? யாராவது வந்து அளந்து பாத்தாங்களா என்ன?"

"அதெல்லாம் எதுவும் இல்லை. யாரோ புகார் கொடுத்திருக்காங்கன்னு சொல்லி, நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க."

"சரி. அப்புறம் என்ன ஆச்சு?"

"முனிசிபாலிடியில போய் விசாரிச்சேன். இது மாதிரி நிறைய பேர் ஆக்கிரமிப்பு பண்ணி இருக்கறதால, என் மேல வந்த புகாரின் அடிப்படையில, எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்களாம். சர்வேயரை அனுப்பி அளந்து பார்த்து, அப்புறம் முடிவு செய்வாங்களாம்!" 

"சர்வேயர் வந்து அளந்து பாக்கறதுக்கு முன்னாடியே, உன்னோட காம்பவுண்ட் சுவரை இடிச்சு, ஒரு அடி உள்ளே தள்ளிக் கட்டிக்கச் சொல்லி, எப்படி நோட்டீஸ் அனுப்பலாம்?"

"அதைத்தான் நானும் கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம மழுப்பறாங்க. யாரோ ஒத்தர் ஒரு அதிகாரியை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி, இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்ப வச்சிருக்காங்கன்னு தெரியுது."

"சரி. அப்ப சர்வேயரை அனுப்பி அளந்து பாக்கச் சொல்ல வேண்டியதுதானே?"

"நான் இந்த நிலத்தை வாங்கினப்ப, இந்த ஊர் ஒரு பஞ்சாயத்து போர்டா இருந்தது. இப்ப பல ஊர்களைச் சேர்த்து ஒரு முனிசிபாலிட்டி ஆக்கிட்டாங்க. அதனால, பழைய பஞ்சாயத்து போர்டு ரிகார்டையெல்லாம் எடுத்துப் பாக்கணுமாம். அதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்கறாங்க. நோட்டீஸ் மேல இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்னு சொல்றாங்க. ஆனா, இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தாதான் எனக்கு நிம்மதியா இருக்கும். நீ ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிங்கறதாலதான் உங்கிட்ட சொல்றேன். உன்னால ஏதாவது செய்ய முடியுமா?" என்றார் ரத்தினசாமி, கெஞ்சும் குரலில்.

"கவலைப்படாதே! நான் விசாரிச்சுப் பாக்கறேன்" என்றார் சண்முகம்.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு, ரத்தினசாமிக்கு ஃபோன் செய்த சண்முகம், "ரத்தினசாமி! கவலைப்படாதே! உன் பிரச்னை தீர்ந்து போச்சு. முனிசிபாலிடிகிட்டேந்து அவங்க அனுப்பின நோட்டீஸைத் திரும்பப் பெற்றுட்டதா, உனக்கு ஒரு கடிதம் வரும். இன்னிக்கே அதை அனுப்பி இருப்பாங்க. உனக்கு ரெண்ணு மூணு நாள்ள வந்து சேரும்!" என்றார் சண்முகம்.

"ரொம்ப தாங்க்ஸ்ப்பா! என்ன ஆச்சு? விவரம் தெரிஞ்சுதா?"

"உனக்கு வேண்டாதவங்க யாரோ, உன்னைப் பத்தி ஒரு பொய்யான புகாரைக் கொடுத்து, முனிசிபாலிடியில அவருக்குத் தெரிஞ்ச ஒரு அதிகாரி மூலமா, உனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வச்சிருக்காங்க. ஒரு நண்பர் மூலமா, அந்த முனிசிபாலிடி கமிஷனரைப் பார்த்துப் பேசினேன். அவர் ரிகார்ட் எல்லாம் எடுத்துப் பாத்துட்டாரு. அந்த ரோடை ஏற்கெனவே சர்வேயர் அளந்து பாத்திருக்காரு. அதில ஆக்கிரமிப்பு எதுவும் இல்ல. நோட்டீஸ் அனுப்பின அதிகாரியை, கமிஷனர் கூப்பிட்டு வார்ன் பண்ணிட்டாரு. இனிமே உனக்குப் பிரச்னை இல்லை!"

"அது சரி. என் மேல புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?"

"அதையும் விசாரிச்சுட்டேன். யாரோ சிகாமணியாம்!"

"அடப்பாவி! அவனா?"

"உனக்கு அவனைத் தெரியுமா?"

"தெரியும். என் ஆஃபீஸ்ல வேலை செய்யறவன்தான். என் வீட்டுக்குக் கூட ரெண்டு மூணு தடவை வந்திருக்கான்."

"அவனுக்கும், உனக்கும் விரோதமா என்ன?"

"விரோதம் எதுவும் இல்ல. அலுவலகத்தில, நானும் அவனும் ஒரே லெவல்லதான் இருக்கோம். ஆனா, அவன் கொஞ்சம் கஷ்டப்படறான். வாடகை வீட்டிலதான் இருக்கான். கடன் தொல்லை எல்லாம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எனக்கும் அவனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே!"

"சில பேர் அப்படித்தான். அடுத்தவன் சாப்பாட்டுக்கும், துணிக்கும் கஷ்டப்படாம வாழ்ந்தா, அதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு, அவங்களுக்கு ஏதாவது கெடுதல் பண்ணலாமான்னு நினைப்பாங்க. விட்டுத் தள்ளு. உன் பிரச்னை தீர்ந்துடுச்சு இல்ல? இனிமே, அவன்கிட்டேயிருந்து கொஞ்சம் விலகியே இரு!" என்று கூறி ஃபோனை வைத்தார் சண்முகம்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

பொருள்: 
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டு கூட பெறாமைப்படுகிற கயவன், அவர் மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...