Saturday, June 8, 2024

1072. கொடுத்து வைத்தவன்!

"எப்படி இருக்கீங்க?" என்றார், அறைக்குள் வந்த டாக்டர்.

"பரவாயில்லை, டாக்டர்!" என்றார் சுந்தரம், பலவீனமான புன்முறுவலுடன்.

"நீங்கதான் டாக்டர் அவரைக் காப்பாத்தினீங்க. ரொம்ப நன்றி!" என்றாள் சுந்தரத்தின் மனைவி சுமதி, கைகளைக் கூப்பியபடி.

"சார் ரொம்பக் கவலைப்படுவார் போல இருக்கு. அதனாலதான், அவர் பி.பி. எப்பவுமே அதிக இருக்கு. இப்ப ஹார்ட் அட்டாக்கும் வந்திருக்கு. அவரைக் கொஞ்சம் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்க!" என்று கூறி வெளியேறினார் டாக்டர்.

"டாக்டர் என்ன சொன்னார்னு கேட்டீங்க இல்ல? இனிமேயாவது, தேவையில்லாம கவலைப்படாதீங்க!" என்றாள் சுமதி, தன் கணவரிடம்.

"ஒரு பிசினஸை நேர்மையா நடத்தறப்ப, நிறைய கவலைகள் வரத்தான் செய்யும். வேலை செய்யறவங்களுக்கு மாசா மாசம் சரியான நேரத்தில சம்பளம் கொடுக்கணுங்கறணுமேங்கற கவலை, பொருட்களை சப்ளை பண்ணினவங்களுக்கு சரியான நேரத்தில பணம் கொடுக்கணுமேங்கற கவலை, தொழிற்சாலையை நடத்தறதிலேயோ, அரசாங்கத்துக்கு வரி கட்டறதிலேயோ, கணக்கு வழக்குகளிலேயோ எந்தத் தவறும் நடந்துடக் கூடாதேங்கற கவலை..."

"போதும், போதும். தெனாலி படத்தில, கமலஹாசன் தன்னோட பயங்களை அடுக்கற மாதிரி அடுக்கிக்கிட்டே போறீங்களே! இதையெல்லாம் நினைச்சுக்கிட்டே இருந்தா, கவலை அதிகமா இருக்கத்தான் செய்யும். அப்பப்ப மனசை வேற எதிலேயாவது செலுத்துங்க!" என்றபடியே டிவியை ஆன் செய்தாள் சுமதி.

போலீசால் கைது செய்யப்பட்ட ஒருவர் சிரித்துக் கொண்டே அங்கே கூடியிருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கையசைத்தபடியே, ஜீப்பில் ஏறிய காட்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.

"யாருங்க இவரு? போலீஸ்காரங்க கைது செஞ்சுக்கிட்டுப் போறப்ப கூடக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, சிரிச்சுக்கிட்டே கையை ஆட்டிக்கிட்டுப் போறாரு!" என்றாள் சுமதி, வியப்புடன்.

"வாசன் ஃபைனான்ஸ்னு நிதி நிறுவனம் நடத்தி ஐயாயிரம் ரூபா மோசடி பண்ணினானே, அந்த சீனிவாசன்தான் இவன். பல லட்சம் பேர்கிட்ட டெபாசிட் வாங்கி மோசம் பண்ணிட்டு, இப்ப போலீசில மாட்டிக்கிட்டப்ப கூட, எப்படி கவலையில்லாம சிரிச்சுக்கிட்டே போறான் பாரு! அவனுக்குக் கவலைகள் கிடையாது. அதனால வரக் கூடிய பி.பி. ஹார்ட் அட்டாக் மாதிரி பிரச்னைகளும் வராது. கொடுத்து வச்சவன்! நம்மை மாதிரி நல்லவங்களா இருந்தாதான், கவலைப்பட்டுக்கிட்டும், பயந்துக்கிட்டும் வியாதியை வரவழைச்சுக்கணும்!" என்றார் சுந்தரம், பெருமூச்சு விட்டபடி. 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

பொருள்: 
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏனென்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...