Monday, December 14, 2020

432. முதல்வர் நாற்காலி

எழில்மலை முதலமைச்சராகப் பதவியேற்று ஒரு ஆண்டு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழா முடிந்ததும், கட்சித் தலைவர் ருத்ரமூர்த்தி கட்சி அலுவலகத்துக்குச் சென்றார்.

எழில்மலை தன் அலுவலகத்துக்குச் சென்று விட, மற்ற தலைவர்களும் கலைந்து சென்று விட்டனர்.

கட்சி அலுவலகத்துக்குச் சென்று தன் அறையில் அமர்ந்து சற்று நேரம் சிந்தனையில் ஈடுபட்ட ருத்ரமூர்த்தி முன்னாள் முதல்வர் பாண்டியனைத் தொலைபேசியில் அழைத்தார்.

"இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு?" என்றார் ருத்ரமூர்த்தி.

"பரவாயில்லை. பைபாஸ் பண்ணினப்பறம் இப்ப உடம்பு ஓரளவுக்கு நல்லாவே இருக்கு. பழையபடி செயல்பட முடியுது" என்றார் பாண்டியன்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு. வர ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு என் குடும்பத்தோட ஈ சி ஆர்ல இருக்கிற, நான் வழக்கமாப் போற ரிசார்ட்டுக்குப் போறேன். நீங்க என்னை அங்கே வந்து சந்திக்க முடியுமா? நாம சந்திக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம். உங்க மனைவியையும் அழைச்சுக்கிட்டு லஞ்ச்சுக்கு வந்துடுங்க. நம்ம சந்திப்பு யாருக்காவது தெரிஞ்சாலும் குடும்ப ரீதியான சந்திப்புன்னுதான் தோணும்!" என்றார் ருத்ரமூர்த்தி.

திய உணவுக்குப் பிறகு ருத்ரமூர்த்தி ஒரு அறையில் அமர்ந்து பாண்டியனுடன் தனிமையில் உரையாடினார்.

"போன தடவை நீங்க முதல்வரா இருந்தப்ப நல்லாதான் ஆட்சி நடத்தினீங்க. ஆனா நம்ம மக்களுக்கு அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை ஆட்சியை மாத்தற பழக்கம் இருக்கறதால நாம தோத்துட்டோம். நமக்கு அப்புறம் பதவிக்கு வந்தவங்க ரொம்ப மோசமா ஆட்சி நடத்தினாங்க. போன வருஷம் நடந்த தேர்தல்ல நாம பெரிய வெற்றி பெற்றோம். ஆனா உங்களுக்கு உடல்நிலை சரியில்லாததால எழில்மலையை முதல்வர் ஆக்கும்படி ஆயிடுச்சு!" என்ற பீடிகையுடன் தொடங்கினார் ருத்ரமூர்த்தி.

"அதனால என்ன? எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?" 

"அப்படியா சொல்றீங்க? எழில்மலையோட நிர்வாகத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" 

"எனக்குத் தெரிஞ்ச வரையில மக்களுக்கு நம்ம ஆட்சி மேல வெறுப்பு எதுவும் இல்ல" என்றார் பாண்டியன் எச்சரிக்கை உணர்வுடன்.

ருத்ரமூர்த்தி சிரித்துக் கொண்டே, "உங்க தயக்கம் எனக்குப் புரியுது. சரி. என்னோட கருத்தைச் சொல்றேன். எழில்மலையோட நிர்வாகத்தில எனக்குத் திருப்தி இல்ல" என்றார்.

பாண்டியன் மௌனமாக இருந்தார்.

"குறிப்பா ரெண்டு மூணு விஷயங்கள்ள எனக்கு ரொம்ப அதிருப்தி இருக்கு. முதல்ல அவரு மக்களைப் பத்திக் கவலைப்படல. சில மாதங்கள் முன்னே பெரிய வெள்ளம் வந்து ரெண்டு மூணு மாவட்டங்கள்ள மொத்தப் பயிரும் அழிஞ்சு போயிடுச்சு. விவசாயிங்கள்ளாம் நடுத்தெருவில நின்னாங்க. விவசாயிகளுக்குக் கொஞ்சமாவது நிவாரணத் தொகை கொடுக்கச் சொல்லி நான் வற்புறுத்தினேன். ஆனா அவரு பிடிவாதமா மறுத்துட்டாரு. அரசாங்கத்துக்கிட்ட பணம் இல்லேன்னு சொன்னாரு. ஆனா புதிய தலைமைச் செயலகம் கட்டறதுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்காரு!"

"கட்சித் தலைவர்ங்கற முறையில நீங்க கட்சியில தீர்மானங்கள் போட்டு அவரை ஒழுங்கா செயல்பட வச்சிருக்கலாமே!"

"அவரு தன் முடிவுகளை அறிவிச்சப்பறம் நாம கட்சியில தீர்மானம் போட்டா கட்சி அவருக்கு எதிரா இருக்கற மாதிரி தெரியாதா? அதனால அவர்கிட்ட தனிப்பட்ட முறையில பேசிப் பாத்தேன். என் பேச்சை அவரு மதிக்கல"

"உங்களையே மதிக்காம நடந்துக்கிட்டாரா?" என்றார் பாண்டியன்.

"என்னை மதிக்காதது பத்தி நான் கவலைப்படல. அவரோட செயல்களை நினைச்சுத்தான் நான் வருத்தப்படறேன். அவரை விட வயசிலயும் அனுபவத்திலயும் மூத்த அமைச்சர்களைக் கூட அவரு மதிக்காம நடந்துக்கறாரு. பேச்சில கூட மரியாதை இல்லாம ''வா' 'போ' ன்னு பேசறாருன்னு எங்கிட்ட அவங்க வந்து புலம்பறாங்க!"

"எங்கிட்ட கூட சில பேர் சொல்லி வருத்தப்பட்டாங்க" என்றார் பாண்டியன்.

"இதை விடக் கொடுமையானதா நான் நினைக்கறது அவருடைய கொடூர குணத்தை. ரசாயன் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில தொழிலாளர்கள் போராடினப்ப அவரு தேவையில்லாம துப்பாக்கிச் சூடு நடத்தி பத்து பேரைக் கொன்னுட்டு, தொழிலாளர்கள் தொழிற்சாலையை வெடிகுண்டு வச்சுத் தகர்க்கப் பாத்தாங்கன்னு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சில தொழிலாளர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில கைது செஞ்சு, அதன் மூலமா மத்த தொழிலாளர்கள் கிட்ட அச்சத்தை ஏற்படுத்தி அவங்க நிர்வாகத்துக்கிட்ட சரணடையும்படி செஞ்சுட்டாரு. முதலாளிங்க கிட்ட பணம் வாங்கிக்கிட்டுத் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கிட்டாருன்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்லலாம். நாமே எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் ருத்ரமூர்த்தி கொந்தளிப்புடன்.

"அதெல்லாம்தான் இப்ப அடங்கிப் போச்சே! மக்களும் இதை மறந்திருப்பாங்களே!"

"உண்மைதான். ஆனா ஒரு மோசமான அரசாங்கத்தைத் தொடர அனுமதிக்கிறது தப்பு இல்லையா? எழில்மலையை மாத்தணும்னு நான் முடிவு செஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. ஆனா முதலமைச்சரா இருக்கத் தகுதி வாய்ந்த ஒரு பலமான ஆளு எனக்குக் கிடைக்கல."

"நீங்களே பொறுப்பேத்துக்கங்க. அதுதான் நாட்டுக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது" என்றார் பாண்டியன்.

"இந்தக் கட்சியை ஆரம்பிக்கறப்பவே நான் முதலமைச்சராவோ, வேற எந்த அமைச்சராவோ ஆக மாட்டேன்னு வெளிப்படையா அறிவிச்சு அதன்படி நடந்துக்கிட்டிருக்கேன். ஆனா நான் சொல்ற ஆளைத்தான் நம்ம கட்சியோட சட்ட மன்ற உறுப்பினர்கள் முதல்வராத் தேர்ந்தெடுப்பாங்க. ரெண்டு நாள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கப் போகுது. அதில புதுசா ஒத்தரை முதல்வராத் தேர்ந்தெடுக்கச் சொல்லி நான் உறுப்பினர்களைக் கேட்டுக்கப் போறேன். அதுக்கு முன்னால எழில்மலை கிட்ட பேசி அவரைப் பதவி விலகச் சொல்லப் போறேன். அவருக்கு அதைச் செய்யறதைத் தவிர வேற வழி இல்ல!"

"நீங்க முதல்வர் பதவிக்கு வர மாட்டேன்னு சொல்றீங்க. அப்ப வேற யாரை முதல்வராத் தேர்ந்தெடுக்கணும்னு சொல்லப் போறீங்க?"

"உங்களைத்தான். உங்களுக்குத்தான் இப்ப உடம்பு குணமாயிடுச்சே!" என்றார் ருத்ரமூர்த்தி. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்  
குறள் 432:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள்:
தேவைப்படுவோர்க்குப் பொருள் கொடுக்காமல் இருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாகும்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...