"ஆமாம். புதுசா ஆரம்பிச்ச கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். முதல் மாசம் முடிஞ்சதும், இன்னும் பிசினஸ்ல வருமானம் வரலை, அதனால அடுத்த மாச சம்பளத்தோட சேர்த்துக் கொடுக்கறோம்னு சொன்னாங்க. அப்புறம், ரெண்டு மாசம் முடிஞ்சப்புறமும் கொடுக்கல. மூணு மாசம் முடிஞ்சதும், நானே வேலையை விட்டு வந்துட்டேன்! அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ள, கம்பெனியையே மூடிட்டாங்க. அது ஒரு மோசடி நிறுவனமாம். பேப்பர்ல கூட வந்தது" என்றான் ராம்குமார்.
"அந்த முதலாளியோட பேரு?"
"மாசிலாமணி."
அழகேசன் ராம்குமாரிடமிருந்து அந்த நிறுவனம் பற்றிய பிற விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.
"சரி. நான் விசாரிக்கறேன். உனக்கு வர வேண்டிய சம்பளத்தை வாங்கிக் கொடுத்துடறேன்" என்றார் அழகேசன்.
"அது எப்படி அங்க்கிள் முடியும்? மாசிலாமணி பல பேரை ஏமாத்தி இருக்கறதா சொல்றாங்க. அவகிட்ட ஏமாந்தவங்கள்ள தொழிலதிபர்கள் கூட இருக்காங்க. என்னோட வேலை செஞ்சவங்களே அஞ்சாறு பேர் இருப்பாங்க. போலீஸ்ல அவரைக் கைது செஞ்சாங்க. ஆனா, இப்ப அவர் ஜாமீன்ல இருக்காரு. அவர் மேல நிறைய கேஸ் இருக்கு. ஆனா, அவரை ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொல்றாங்க."
"மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை. உங்கப்பா எனக்கு அந்தக் காலத்தில நிறைய உதவி செஞ்சிருக்காரு. அவரோட பையனுக்கு உதவ வேண்டியது என் கடமை" என்றார் அழகேசன்.
சில நாட்கள் கழித்து, ராம்குமாருக்கு வர வேண்டிய மூன்று மாதச் சம்பளத் தொகைக்கான காசோலை தபாலில் வந்தது.
அழகேசனுக்கு ஃபோன் செய்து நன்றி தெரிவித்தான் ராம்குமார்.
"எப்படி சார் இதை வாங்கிக் கொடுத்தீங்க?" என்றான் ராம்குமார், வியப்புடன்.
"உன் அப்பாகிட்ட கேளு!" என்று கூறி ஃபோனை வைத்து விட்டார் அழகேசன்.
ராம்குமார் தன் தந்தையிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர், "பாஷா படம் பாத்திருக்க இல்ல?" என்றார்.
"பாத்திருக்கேன்."
"அதில ரஜினிகாந்த் தன் ஆள்காட்டி விரலைக் காட்டினதும், மத்தவங்க பயந்து போய் அவர் கேட்டதை செஞ்சு கொடுத்துடுவாங்க இல்ல, அது எதனால?"
"ஏன்னா, பாஷா ஒரு தாதாவா இருந்தவர். அப்படின்னா, அழகேசன் அங்க்கிள்?"
"அவனும் அந்த மாதிரிதான். சின்ன வயசில அவன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். அப்ப, நான் அவனுக்கு உதவி செஞ்சிருக்கேன். பின்னால, அவன் பாதை மாறிப் போயிட்டான். ஆனா, எங்கிட்ட நன்றியோடயும், நட்போடயும்தான் இருந்துக்கிட்டிருக்கான். 'உனக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லு'ன்னு அவன் அடிக்கடி எங்கிட்ட சொல்லுவான். ஆனா, இத்தனை நாளா நான் எதுவும் கேட்டதில்ல. மூணு மாச சம்பளம்கறது நமக்கு ஒரு பெரிய தொகை. அதனாலதான், அவன் உதவியைக் கேட்டேன்" என்றார் ராம்குமாரின் தந்தை.
"அப்படின்னா, அழகேசன் அங்க்கிள் மாசிலாமணியை மிரட்டித்தான் இந்தப் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்காரா? இது தப்பு இல்லையா?"
"தப்புதான். என்ன செய்யறது? மாசிலாமணி மாதிரி ஆட்களைக் கழுத்தில கத்தி வச்சு மிரட்டினாத்தான், அவங்ககிட்டேந்து நமக்கு நியாயமாக் கிடைக்கறதை வாங்க முடியும்னா, அப்படித்தானே செஞ்சாகணும்?"
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)
குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
No comments:
Post a Comment