Sunday, June 9, 2024

1073. நினைத்ததை முடிப்பவன்!

வெளியூரிலிருந்து வந்திருந்த ராஜு, தன் நண்பன் கண்ணனைப் பார்க்க அவன் வீட்டுக்குப் போயிருந்தான். கண்ணன் ஒரு வீட்டின் கீழ்ப் பகுதியில் குடி இருந்தான். மாடியில் வீட்டுச் சொந்தக்காரர் வசிப்பதாகச் சொன்னான்.

நண்பர்கள் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

கண்ணன் கதவைத் திறந்ததும், உள்ளே வந்த மனிதர், ராஜுவைப் பார்த்து விட்டு, கண்ணனிடம், "சாரி! யாரோ கெஸ்ட் வந்திருக்காங்க போலருக்கு. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்!" என்றார்.

"பரவாயில்ல சார்! இவன் என் நண்பன் ராஜு. வைசாக்லேந்து வந்திருக்கான். ராஜு! இவர் என்னோட ஹவுஸ் ஓனர் மிஸ்டர் சங்கர். மாடியில இருக்காரு" என்று இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் கண்ணன்.

ராஜுவின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கம் சொன்ன சங்கர், கண்ணனிடம், "ஒண்ணுமில்ல. என் ஃபேமிலி ஊருக்குப் போயிருக்காங்க இல்ல? அவங்களை அழைச்சுக்கிட்டு வர, நானும் ஊருக்குப் போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும். கொஞ்சம் பாத்துக்கங்க" என்று சொல்லி விடைபெற்றார்.

"உன் ஹவுஸ் ஓனர் ரொம்ப நல்லவரா இருப்பார் போலருக்கே!"  என்றான் ராஜு, உபசாரத்துக்காக.

மௌனமாகத் தலையாட்டிய கண்ணன், வாசலில் போய் எட்டிப் பார்த்து விட்டு, "போயிட்டார்" என்றான். பிறகு ராஜுவைப் பார்த்துச் சிரித்து விட்டு, "என்ன சொன்ன, ரொம்ப நல்லவரா?" என்றான். 

"ஏன், அப்படி இல்லையா?" என்றான் ராஜு.

"என்னத்தைச் சொல்றது? நல்லவன்கறதுக்கு எதிரான வார்த்தைதான் அவருக்குப் பொருந்தும்!"

"ஏன் அப்படிச் சொல்ற? உங்கிட்ட ரொம்ப நட்பாப் பழகினாரே!"

"எங்கிட்ட நட்பாத்தான் பழகுவாரு. எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லதான். ஆனா..." என்று தயங்கிய கண்ணன், "அவர் தனக்கு எது வேணுமோ, அதை செஞ்சுப்பாரு. அதுக்காக மத்தவங்களுக்குக் கெடுதல் நடந்தா, அதைப் பத்திக் கவலைப்பட மாட்டாரு!" என்றான்.

"அப்படி இருக்கறவர் வீட்டில நீ ஏன் குடி இருக்கே?" என்றான் ராஜு, வியப்புடன்.

"அது ஒரு கதை. இந்த வீடு இன்னொருத்தருக்கு சொந்தமா இருந்தது. நான் இங்கே பல வருஷமா குடி இருக்கேன். நான் இங்கே வந்து அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான், சங்கர் மேல் வீட்டுக்குக் குடிவந்தாரு."

"குடிவந்தாரா? வீட்டுச் சொந்தக்காரர்னு சொன்ன?"

"இரு, சொல்றேன். வீட்டுக்கு வாடகைக்குக் குடிவந்தவர் 'இந்த வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இதை எனக்கு விக்கறீங்களா?' ன்னு வீட்டுச் சொந்தக்காரர்கிட்ட கேட்டாரு. ஆனா, அவர் வீட்டை விக்க இஷ்டப்படல. அதுக்கப்புறம், சங்கர் வீட்டுக்காரருக்குப் பிரச்னைகளை உருவாக்க ஆரம்பிச்சாரு. இவர் கொடுத்த டார்ச்சர் தாங்காம, வீட்டுக்காரர் இவர்கிட்ட வீட்டை வித்துட்டுப் போயிட்டாரு. வீட்டை வாங்கினப்புறம், இவர் எங்கிட்ட, 'நீங்க தொடர்ந்து இருங்க. எந்தப் பிரச்னையும் இல்லை' ன்னு சொன்னாரு. அதனாலதான், நான் இங்கே தொடர்ந்து இருந்துக்கிட்டிருக்கேன். அவர் எங்கிட்ட நட்பாத்தான் இருக்காரு" என்றான் கண்ணன்.

"என்னப்பா நீ சொல்றது? குடி இருக்கறவர் பிரச்னை பண்ணினா, வீட்டுக்காரர் அவர்கிட்ட வீட்டை வித்துட்டுப் போகணுமா என்ன? அவருக்கு சட்டரீதியா எத்தனையோ வழி இருக்கே!" என்றான் ராஜு.

"அதெல்லாம் சாதாரண மனுஷங்ககிட்ட பலனளிக்கும். சங்கர் மாதிரி  ரௌடிகள்கிட்ட பலிக்காது!"

"என்னப்பா, உன் வீட்டுக்காரரை ஒரேயடியா ரௌடின்னுட்டே!"

"அவரோட உண்மையான அடையாளத்தைச் சொன்னேன். அவரைப் பத்தின பல விஷயங்கள் இருக்கு. சுருக்கமா சொல்லணும்னா, அவர் தன் மனம் போனபடி நடந்துப்பாரு. தான் விரும்பினதை அடைய, என்ன வேணும்னாலும் செய்வாரு!"

"அப்படியெல்லாம் செய்ய முடியும்னா, அவர் மனுஷனா, இல்லை கடவுளா?" என்றான் ராஜு.

"வேணும்னா, தேவர்கள் மாதிரின்னு வச்சுக்கயேன். தேவர்கள் எதை விரும்பினாலும், அதை அடையற சக்தி உள்ளவங்கன்னு சொல்லுவாங்களே, அது மாதிரிதான் இவரு!" என்றான் கண்ணன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய கணம்)

குறள் 1073:
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

பொருள்: 
கயவரும் தேவரைப் போல், தான் விரும்புகின்றவைகளைச் செய்து, மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...