டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்ததும், "என்னங்க இப்படிச் சொல்றாரு?" என்றாள் சுகுணா.
"ஏற்கெனவே நமக்குத் தெரிஞ்சதுதானே? ஸ்கேன் எடுத்துப் பார்த்து ஏற்கெனவே ஒரு டாக்டர் சொன்னதை சரிபார்க்கத்தானே இவர்கிட்ட வந்தோம்?" என்றான் மோகன்ராஜ்.
"அது சரி. பணத்துக்கு எங்கே போறது?"
"வீட்டில போய்ப் பேசலாம்" என்றான் மோகன்ராஜ்.
வீட்டுக்குச் சென்றதும், தன்னிடம் ரொக்கமாக இருக்கும் பணம், வங்கியில் இருந்த வைப்புத் தொகைகளை எடுத்தால் கிடைக்கக் கூடிய பணம், அலுவலகத்தில் கிடைக்கும் குறைந்த காலக் கடன் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தபோது, சமாளித்து விடலாம் என்று தோன்றியது.
"அப்படியும் போதலேன்னா, உன்னோட சங்கிலியை அடகு வச்சுக் கடன் வாங்கிக்கலாம்!" என்றான் மோகன்ராஜ்.
"ஏங்க, இப்படி எல்லாத்தையும் துடைச்சு எடுக்கணுமா? உங்க பாம்பே சித்தப்பாகிட்டக் கேக்கலாம் இல்ல?" என்றாள் சுகுணா.
"வேண்டாம்!" என்றான் மோகன்ராஜ், சுருக்கமாக.
சுகுணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. நெருங்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்து, நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். ஒருவர் கூட, 'எவ்வளவு செலவாயிற்று?' 'பணத்துக்கு என்ன செய்தீர்கள்?' 'பணம் ஏதாவது வேண்டுமா?' போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை.
ஐந்தாறு நாட்களில், சுகுணா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டாள்.
"பணம் சரியா இருந்ததா? தேவைப்பட்டா, நகையை வச்சுக் கடன் வாங்கலாம்னு சொன்னீங்களே!" என்றாள் சுகுணா.
"ஆஸ்பத்திரியிலேந்து கிளம்பறப்ப, என் பர்ஸ் காலியா இருந்தது. உன்னை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர, டாக்சிக்குப் பணம் வேணுமே! ஏடிஎம்ல எடுத்தேன். அக்கவுன்ட்ல 500 ரூபாதான் இருந்தது. அது டாக்சிக்கு சரியாப் போச்சு. எனக்கே ஆச்சரியமா இருக்கு. நாம புரட்டின பணம் ரொம்ப கரெக்டா இருந்தது!" என்றான் மோகன்ராஜ், சிரித்துக் கொண்டே.
அன்று இரவு, மும்பையிலிருந்து மோகன்ராஜின் சித்தப்பா வைத்திலிங்கம் ஃபோன் செய்தார். "ஏண்டா, சுகுணாவுக்கு ஆபரேஷன் ஆச்சாமே, எங்கிட்ட சொல்லவே இல்லையே! முரளியோட ஃபோன்ல பேசினப்ப, அவன்தான் சொன்னான்" என்றார்.
"இன்னிக்குத்தான் ஆஸ்பத்திரியிலேந்து வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்தேன், சித்தப்பா. நாளைக்கு சொல்லலாம்னு நினைச்சேன். இது மாதிரி ஆபரேஷன்லாம் இப்ப ரொம்ப சாதாரணமா ஆயிடுச்சு. முன்னாலேயே சொன்னா, நீங்க கவலைப்படுவீங்களேன்னுதான் சொல்லலை" என்றான் மோகன்ராஜ்.
"அது சரி. ஆபரேஷனுக்கு நிறைய செலவாகி இருக்குமே! எங்கிட்ட கேட்டிருந்தா, நான் உதவி செஞ்சிருப்பேன் இல்ல? அப்பா மாதிரின்னு சொல்லுவ. ஆனா, எங்கிட்ட உதவி கேக்க மாட்ட, இல்ல?" என்றார் வைத்திலிங்கம், சற்றுக் கோபத்துடன்.
"எப்ப உதவி தேவைப்பட்டாலும் செய்யறதுக்குத் தயாரா இருக்கற உங்களை மாதிரி ஒத்தர் இருக்கறது எனக்குப் பெரிய பலம், சித்தப்பா. தேவைப்பட்டா, கண்டிப்பா கேக்கறேன்" என்ற மோகன்ராஜ், 'ஆனா, உங்களை மாதிரி ஒத்தர்கிட்ட கூட உதவி கேக்காம வாழணுங்கறதுதான் என்னோட லட்சியம்!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம் (யாசித்தலுக்கு அஞ்சுதல்)
குறள் 1061:
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
No comments:
Post a Comment