Saturday, June 15, 2024

1076. ரகசியம் பரம ரகசியம்!

"நம்ம ஊரை ஓ.டி.எஃப்.னு அறிவிச்சு ஆறு மாசம் ஆச்சு!" என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம்.

"அப்படின்னா?" என்றார் மன்ற உறுப்பினர் கண்ணப்பன்.

"ஓ.டி.எஃப்.னா ஓபன் டெஃபகேஷன் ஃப்ரீ. அதாவது. நம்ம ஊரில யாரும் திறந்த வெளியைக் கழிவறையாப் பயன்படுத்தக் கூடாதுன்னு அர்த்தம்!" என்று விளக்கினார் கலியமூர்த்தி என்ற மற்றொரு உறுப்பினர்.

"ஆனாலும், அதிகாலை வேளையில, சில பேர், சில இடங்களை அசுத்தப்படுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க!" என்றார் சோமசுந்தரம்.

"அதான் நம்ம ஊர்ல அஞ்சு பொதுக் கழிப்பறை கட்டி கொடுத்திருக்கமே!" என்றார் சரஸ்வதி என்ற பெண் உறுப்பினர்.

"கழிப்பறை வரையிலும் நடந்து போக சோம்பல்பட்டோ, அல்லது அரசாங்கமோ, பஞ்சாயத்தோ சொன்னா, நாம ஏன் அதுக்குக் கட்டுப்படணுங்கற எண்ணத்தினாலேயோ, சில பேர் தொடர்ந்து இப்படி செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க" என்றார் கண்ணப்பன் என்ற உறுப்பினர்.

"இதை எப்படித் தடுக்கறது?" என்றார் சுப்பு என்ற உறுப்பினர்.

"அதுக்கு நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். அதிகாலை வேளையிலதான் இது நடக்குது. அதுவும், குறிப்பிட்ட சில இடங்கள்ளதான் நடக்குது. நாம பன்னண்டு பேர் உறுப்பினர்களா இருக்கோம். நம்மள்ள நாலு பேர், நாளைக்கு அதிகாலை நேரத்தில, ரகசியமா ரோந்து போற மாதிரி, சில இடங்களுக்குப் போய்ப் பார்ப்போம். தப்பு பண்றவங்க கண்டிப்பா மாட்டிப்பாங்க!" என்றார் சோமசுந்தரம்.

அதை நல்ல யோசனை என்று எல்லா உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ள, அடுத்த நாள் ரோந்துக்குச் செல்ல வேண்டிய நான்கு பேர் யார் என்று முடிவு செய்யப்பட்டது.

"ஒரு முக்கியமான விஷயம். நாம ரோந்து போகப்போற விஷயம் நம்ம பன்னண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. நம்ம வீட்டில இருக்கறவங்களுக்குக் கூடத் தெரியக் கூடாது. இந்தத் திட்டத்தை ரகசியமா வச்சுக்கிட்டாதான், நம்மால தப்பு பண்றவங்களைப் பிடிக்க முடியும். அவங்களைப் பிடிக்காம தவற விட்டோம்னா, இந்தப் பழக்கத்தை நிறுத்தறது ரொம்ப கஷ்டமா ஆயிடும். நாளைக்கு சாயந்திரம் நாம மறுபடி கூடுவோம்" என்று கூறிக் கூட்டத்தை முடித்தார் சோமசுந்தரம்.

"என்னங்க, இப்படி ஆயிடுச்சு?" என்றார் கலியமூர்த்தி, மறுநாள் நடந்த கூட்டத்தில்.

"என்ன ஆயிடுச்சு? யாரும் மாட்டல. அவ்வளவுதானே! தற்செயலா இன்னிக்கு யாரும் வெளியே வராம இருந்திருப்பாங்க. இன்னிக்கு மாட்டலேன்னா, இன்னொரு நாளைக்கு மாட்டறாங்க!" என்றார் நடராஜன் என்ற உறுப்பினர்.

"அப்படி இல்லை, நடராஜன். தப்பு பண்றவங்களை இன்னிக்கு நாம பிடிச்சிருந்தா, அவங்களை அம்பலப்படுத்தி, இந்தத் தப்பு மறுபடியும் நடக்க விடாம செஞ்சிருக்கலாம்!" என்றார் சோமசுந்தரம், ஏமாற்றத்துடன்.

"அதனால என்ன? நாளைக்குக் காலையில வேறு நாலு பேர் போய்ப் பாப்போம்!" என்றார் சரஸ்வதி.

"இல்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு. தினமும் நடக்கற விஷயம் இன்னிக்கு எப்படி நடக்காம்ப் போகும்?" என்றார் சோமசுந்தரம்.

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"தலைவர் சொல்லத் தயங்கறதை நான் சொல்றேன். இதை ரகசியமா வச்சுக்கணும்னு நேத்து தலைவர் சொன்னாரு. ஆனா நம்மள்ள யாரோ ஒத்தர் இந்த ரகசியத்தை வெளியில சொல்லி இருக்காங்க. அது தப்பு பண்றவங்க காதுக்கும் போயிருக்கு. அதனாலதான், தப்பு பண்றவங்க உஷாராயிட்டாங்க!" என்றார் கலியமூர்த்தி.

"இதை யாரு வெளியில சொல்லி இருக்கப் போறாங்க? அதனால, அவங்களுக்கு என்ன லாபம்?" என்றார் சரஸ்வதி.

"ஒரு விஷயத்தை ரகசியமா வச்சுக்கச் சொன்னா, அதைக் கண்டிப்பா யார்கிட்டேயாவது சொல்ற கெட்ட குணம் சில பேருக்கு உண்டு. அதனால வர கெடுதலைப் பத்தி அவங்களுக்குக் கவலை இல்ல. இந்த குணம் உள்ளவங்களைத் தீயவர்கள்னுதான் சொல்லணும்!" என்றார் கலியமூர்த்தி, கோபத்துடன்.

அவர் சொன்னதை ஆமோதிப்பது போல், சோமசுந்தரம் மௌனமாகத் தலையாட்டினார்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)

குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

பொருள்: 
மறைக்கப்பட வேண்டிய ரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்கிற கயவர்களைத் தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...