"இன்று சபையில் ஏதாவது வழக்கு இருக்கிறதா?" என்றார் மன்னர் தாசரதி.
"ஒரு வழக்கு இருக்கிறது அரசே!" என்றார் அமைச்சர்.
"என்ன வழக்கு?"
"ஒரு வியாபாரி பலரிடமும் கடன் வாங்கி அவற்றைத் திருப்பிக் கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்."
"ஏன் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்?"
"அவர் முதல் எதுவும் போடாமல், பொருட்களைப் பெரிய வியாபாரிகளிடமிருந்து கடனுக்குக் கொள்முதல் செய்து வியாபாரம் செய்திருக்கிறார். அன்றாடச் செலவுகளுக்குக் கூடக் கடன் வாங்கிச் செலவு செய்திருக்கிறார்.
"வட்டிச் செலவே அதிகம் ஆனதால், வியாபாரத்தில் லாபம் கிடைக்காமல் நஷ்டம் அடைந்து கொண்டே வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வியாபாரத்தை நடத்த முடியாமல் மூடி விட்டார். கடன்காரர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லை.
"அவரிடம் வேலை செய்த ஊழியர்களுக்குக் கூட மூன்று மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லையாம். அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்து கடன்காரர்களுக்குக் கொடுக்கலாமென்றால், அவரிடம் சொத்து எதுவும் இல்லை."
"முதல் இல்லாமல் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கலாமென்று நினைத்த அவன் ஒரு வடிகட்டின முட்டாளாகாத்தான் இருக்க வேண்டும். நீங்களே அவனை விசாரித்துக் கடுமையான தண்டனை கொடுங்கள். அவனிடம் சொத்துக்கள் இல்லாததால், கடன் கொடுத்தவர்களுக்கோ, ஊழியர்களுக்கோ நம்மால் உதவ முடியாது என்று சொல்லி விடுங்கள்."
அமைச்சருக்கு உத்தரவிட்டு விட்டு அந்தப்புரத்துக்குச் சென்று விட்டார் அரசர் தாசரதி.
"நீங்கள் வழக்கு பற்றி அமைச்சரிடம் பேசிக் கொண்டிருந்ததை உப்பரிகையிலிருந்து கேட்டேன்" என்றாள் மகாராணி வனவாணி.
"என்ன செய்வது? முதல் இல்லாமலே வியாபாரம் நடத்தும் முட்டாள்கள் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்!" என்றார் மன்னர், சலித்துக் கொண்டே.
"பல நாட்களாகவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன். உங்கள் தந்தை உங்களுக்கு ஏன் தாசரதி என்று பெயர் வைத்தார்?"
"ராமனின் தந்தையான தசரதரின் வழி வந்தவன் என்ற பொருள்படும்படி எனக்குப் பெயரிட்டிருக்கிறார் என் தந்தை. தசரத சக்கரவர்த்தியைப் போல் ஒரு பேரரசனாக நான் விளங்க வேண்டும் என்பது அவர் அவா!"
"சொல்கிறேனே என்று தவறாக நினைக்காதீர்கள். உங்கள் தந்தை காலத்தில் இருந்த நாட்டின் பரப்பு உங்கள் காலத்தில் குறுகி விட்டதே!"
"என்ன செய்வது? சில சிற்றரசர்கள் கலகம் செய்து நம் நாட்டிலிருந்து பிரிந்து தங்கள் பகுதிகளைத் தனி நாடுகளாக அறிவித்து விட்டார்கள்."
"இன்னும் சில சிற்றரசர்கள் கூடக் குழப்பம் விளைவித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே!"
"ஆமாம். இன்னும் சில பகுதிகள் கூட நம்மிடமிருந்து பிரிந்து தனி நாடுகளாகி விடுமோ என்று எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது" என்றார் மன்னர், கவலையுடன்.
"இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தீர்களா?" என்றாள் மகாராணி.
"நான் வலுவற்றவன் என்று சொல்லிக் காட்டுகிறாயா?" என்றார் மன்னர், கோபத்துடன்.
"இல்லை அரசே! இது உங்கள் வலிமையைப் பற்றிய விஷயம் இல்லை. உங்களுக்கு வலிமை இருக்கிறது. ஆனால் அந்த வலிமையைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய அடித்தளம் இல்லை."
"என்ன சொல்கிறாய் வனவாணி?"
"உங்கள் தந்தை நீங்கள் தசரதரைப் போல் விளங்க வேண்டுமென்று விரும்பினார். தசரதரின் பெருமைக்குக் காரணம் அவருடைய வலிமை மட்டுமல்ல, அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை கூறி வழிநடத்த வசிஷ்டர் என்ற பெரிய அறிஞர் அவர் அவையில் இருந்ததும்தான்."
தாசரதி மௌனமாக இருந்தார்.
"உங்களுக்கும் சந்திரசூடர் என்ற ஒரு அறிஞர் அமைச்சராக இருந்தார். ஏதோ ஒரு கோபத்தில் நீங்கள் அவரைக் கடிந்து கொண்டதால் அவர் நம் நாட்டை விட்டே போய் விட்டார். சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுடன் இருந்த காலத்திலும் ஒரு சில சிற்றரசர்கள் பிரச்னை செய்யவில்லையா? அவர் அவர்களைத் திறமையாகச் சமாளித்து, அவர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாகச் செயல்படச் செய்யவில்லையா? இப்போதும் - வேறு சில சிற்றரசர்கள் பிரிந்து போன பிறகும் - அவர்கள் உங்களுக்கு ஆதரவாகத்தானே இருக்கிறார்கள்?
"சந்திரசூடர் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஒரு நல்ல தூதரை அனுப்பியோ அல்லது நீங்களே நேரில் சென்றோ அழைத்தால் அவர் நிச்சயம் திரும்பி வருவார். நீங்கள் இழந்தவற்றைக் கூட உங்களால் திரும்பப் பெற முடியும்."
தாசரதி யோசனையில் ஆழ்ந்தார்.
No comments:
Post a Comment