Wednesday, January 20, 2021

441. தூரத்து உறவு

ஒரு திருமணத்தில்தான் ராஜீவ் முதலில் சுப்புவைச் சந்தித்தான்.

அவன் அப்பாவுடன் அவர் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தான். அவர் அகன்றதும் தந்தையிடம் "அவர் யாருப்பா?" என்றான்.

"அவன் சுப்பு. என்னோட தூரத்து உறவு. அவன் அப்பாவும் என் அப்பாவும் கஸின்கள்" என்றார் அவர்.

அதற்குப் பிறகு திருமண மண்டபத்தில் ராஜீவ் அமர்ந்திருந்தபோது பக்கத்தில் அவர் அமர்ந்திருந்ததை கவனித்து அவன் அவருக்கு வணக்கம் சொன்னான். அவர் அவனைத் தெரியும் என்ற பாவனையில் புன்னகை செய்தார்.

சாப்பாட்டுக்குப் பிறகு சற்று நடந்து விட்டு வரலாம் என்று ராஜீவ் மண்டபத்துக்கு வெளியே வந்தபோது அவர் வாசலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவர் அருகில் போய் நின்றான்.

"சாப்பிட்டாச்சா?" என்றார் சுப்பு.

"ஆச்சு" என்ற ராஜீவ், "நீங்க?" என்றான்.

"பொதுவா, கல்யாணங்கள்ள, நான் கடைசியாத்தான் சாப்பிடுவேன்!" என்றார் சுப்பு.

"ஏன் அப்படி?"

"எனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை. அவசரமாக் கிளம்பணும்னு நினைக்கக்கறவங்க, பசி பொறுக்காதவங்க, லேட்டா சாப்பிட்டா விருந்தில சில அயிட்டங்கள் தீர்ந்து போயிடுமோன்னு பயந்து முதலிலேயே சாப்பிடணும்னு அவசரப்படறவங்க இவங்கள்ளாம் சாப்பிட்டப்பறம் மெதுவா சாப்பிட்டுக்கலாம்னுதான்!" என்றார் அவர் சிரித்தபடி.

அவர் சொன்னதைக் கேட்டபோது, அவர் உண்மையாகவே அத்தகைய மனப்பான்மை கொண்டவர் என்றும், ஒப்புக்காகப் பேசுபவர் இல்லை என்றும் ராஜீவுக்குத் தோன்றியது.

சற்று நேரம் அவரிடம் ராஜீவ் பொதுவாகப் பேசி விட்டு, "போய் சாப்பிடுங்க சார்! லேட் ஆயிடுச்சு" என்றான் உண்மையான அக்கறையுடன்.

"பொதுவா நான் சாப்பிடப் போறப்ப பந்தி முடிஞ்சு சமையல் வேலை செய்யறவங்களும், பரிமாறவறங்களும்தான் சாப்பிட்டுக்கிட்டிருப்பாங்க. போய் சாப்பிடறேன்" என்று கிளம்பியவர், திரும்பி, "நான் சார் இல்ல. உனக்கு சித்தப்பா முறை!" என்றார் சிரித்தபடி. 

அவர் சென்றதும், அங்கு வந்த அவன் தந்தை, "அவன்கிட்ட என்ன பேசிக்கிட்டிருந்த?" என்றார்.

"சும்மாத்தான்."

"அவன் ஒரு உதவாக்கரை. சரியான வேலை கூடக் கிடையாது. எங்க குடும்பத்திலேயே அவன் ஒரு மிஸ்ஃபிட்!" என்றார் அவன் தந்தை.

ஆயினும் சுப்புவிடம் சற்று நேரம் பேசியதிலேயே, அவர் ஒரு நல்ல மனிதர், அறிவுள்ளவர் என்ற எண்ணம் ராஜீவுக்கு ஏற்பட்டது. அதனால் திருமண வீட்டிலிருந்து கிளம்புமுன் சுப்புவின் விலாசத்தை வாங்கிக் கொண்டான் ராஜீவ், அவரும் அவனிடம், "நேரம் கிடைக்கறப்ப வீட்டுக்கு வா!" என்று அழைப்பு விடுத்தார்.

அதற்குப் பிறகு மாதம் ஒருமுறையாவது சுப்புவின் வீட்டுக்குச் சென்று அவருடன் சற்று நேரம் பேசி விட்டு வருவது என்ற பழக்கத்தை ராஜீவ் ஏற்படுத்திக் கொண்டான். அவன் அப்பா கூட, "அவங்கிட்ட என்ன இருக்குன்னு அவனைப் போய்ப் பாத்துட்டு வர?" என்று ஓரிரு முறை அவனிடம் கேட்டார்.

"அவர் கிட்ட பேசிக்கிட்டிருந்தா எனக்கு சந்தோஷமா இருக்கு. அவர் பேச்சைக் கேட்டா அவருக்குத் தெரியாத விஷயமே இல்லையோன்னு தோணும். அவரோட கருத்துக்களும் ரொம்ப ஆழமாகவும், நியாயமாகவும் இருக்கு" என்றான் ராஜீவ்.

திருமணம் ஆன பிறகு அவன் மனைவியும் அடிக்கடி அவனிடம் கேட்பாள்: "என்னங்க, அவரை நீங்க அடிக்கடி பாத்துட்டு வரது நம்ம வசதிக்கும் அந்தஸ்துக்கும்  பொருத்தமாவா இருக்கு?" 

"நம்மகிட்ட இருக்கற வசதியும் அந்தஸ்தும் அவர் கிட்ட இல்லாம இருக்கலாம். ஆனா அவரை மாதிரி ஒரு பெரியவர் கிட்ட எனக்குக் கிடைக்கிற அறிவுக்கும், அருளுக்கும் நம்மால மதிப்புப் போடக் கூட முடியாது!" என்றான் ராஜீவ் ஒருமுறை.

"என்னவோ! அவர் கிட்ட என்ன இருக்குன்னு நீங்க அவரைத் தேடிப் போறீங்கன்னு எனக்குப் புரியலை."

'என் அப்பா சொன்ன அதே வார்த்தைகள்! அந்த உயர்ந்த மனிதருடைய கருத்துக்களையும் ஆலோசனையையும் பின்பற்றி என் வாழ்க்கையில் நான் பல முக்கியமான முடிவுகளை எடுத்ததையும் அவை என் வாழ்க்கையைச் செம்மைப் படுத்தியதையும் அப்பாவிடமும், இவளிடமும் சொன்னால் இவர்கள் புரிந்து கொள்ளவா போகிறார்கள்?' என்று நினைத்துக் கொண்டான் ராஜீவ்.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்:
அறன் அறிந்தவர்களாக உள்ள அறிவிற் சிறந்தவர்களின் நட்பின் பெருமையை உணர்ந்து அதைத் தேர்வு செய்ய வேண்டும்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...