தேர்தல் முடிந்து முதலமைச்சராகப் பதவியேற்ற குணசீலன் அமைச்சரவை அமைப்பது பற்றிக் கட்சியின் தலைவர் குமரவேலுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்.
"இந்தத் தடவை நாம இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதுக்கு முழுக்க முழுக்க உங்களோட பிரசாரமும் வியூகங்களும்தான் காரணம். அதனால மந்திரி சபையை உங்க விருப்பபடி அமைச்சுக்கங்க. நான் யாரையும் சிபாரிசு செய்யப் போறதில்ல!" என்றார் குமரவேல்.
"நன்றி ஐயா! உங்க வழிகாட்டலும், ஊக்கமும்தான் எனக்கு உந்துதலா இருந்தது. இதை நான் மனசாரச் சொல்றேன்" என்றார் குணசீலன்.
"தெரியும் குணா. போன தடவை நீங்க முதல் தடவையா முதலமைச்சரா இருந்தபோது மற்ற தலைவர்கள் உங்களுக்குக் கொடுத்த அழுத்தங்கள், தொந்தரவுகள், அவங்க செஞ்ச தவறுகள் இதனால் எல்லாம்தான் நாம போன தடவை தோத்தோம். நானும் அவங்களைக் கட்டுப்படுத்தத் தவறிட்டேன். இந்தத் தடவை அந்த மாதிரி நடக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் நீங்க முழு அளவு சுதந்திரத்தோட செயல்படணும்னு நினைக்கறேன்."
"அதுக்கு அமைச்சர்களை சரியாத் தேர்ந்தெடுத்தா மட்டும் போதாது. நான் ஒரு யோசனை வச்சிருக்கேன். அதைச் செயல்படுத்த உங்க அனுமதி வேணும்."
"சொல்லுங்க."
குணசீலன் சொல்லி முடித்ததும், "அருமையான யோசனை. அப்படியே செய்யுங்க. என்னோட முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு" என்றார் குமரவேல் உற்சாகமாக.
அமைச்சரவையின் முதல் கூட்டம் துவங்கியது.
"என்ன தலைவரே, இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் மூத்த அமைச்சர் அரசகுமார்.
"என்ன பண்ணிட்டேன்?" என்றார் குணசீலன், சிரித்துக் கொண்டே.
"நாங்க 30 பேரு அமைச்சரா இருக்கோம். ஆனா உங்களுக்குன்னு ஆறு சிறப்புச் செயலாளர்களை நியமிச்சிருக்கீங்க. ஐந்து அமைச்சர்களுக்கு ஒத்தர்னு பிரிச்சு எல்லா ஃபைல்களையும் நாங்க அவங்களுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கணும்னு ஒரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்கீங்க. இது என்ன கேபினட்டுக்கு மேல ஒரு சூப்பர் கேபினட் மாதிரி இல்ல இருக்கு?" என்றார் அரசகுமார், சற்றுக் கோபமாக.
"அதோட இது அரசியல் சட்டத்துக்கு முரணானதுன்னு நினைக்கிறேன்" என்றார் கமலநாதன் என்ற அமைச்சர். அவர் படித்தவர், விவரம் அறிந்தவர் என்று கருதப்படுபவர்.
"இதில அரசியல் சட்டத்துக்கு முரணானது எதுவும் இல்ல. முதலமைச்சர் தனக்கு சிறப்புச் செயலாளர்களா யாரை வேணும்னா நியமிச்சுக்கலாம். ஃபைல்கள்ள அவங்க கையெழுத்துப் போட மாட்டாங்க. அவங்க கருத்துக்களை எழுதி எனக்கு அனுப்புவாங்க. நான்தான் ஃபைல்கள்ள என்னோட ஒப்புதலோடயோ அல்லது வேற முடிவோடயோ திருப்பி அனுப்புவேன்" என்று கமலநாதனுக்கு முதலில் பதில் கூறிய குணசீலன், அரசகுமாரிடம் திரும்பினார்.
"அண்ணே! போன தடவை நம்ம ஆட்சியில நிறையத் தவறுகள் நடந்துடுச்சு. அதனாலதான் நாம தோத்துட்டோம். இந்த முறை அப்படி நடக்காம, நம்ம ஆட்சி மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யறதா, குறைகள் இல்லாததா இருக்கணும்னு கட்சித் தலைவர் எங்கிட்ட சொல்லி இருக்காரு.
"நீங்கள்ளாம் தப்பு பண்ணக் கூடியவங்கன்னு நான் சொல்லல. தெரியாம கூடத் தவறுகள் நடக்காலாம். நான் நியமிச்சிருக்கறவங்க விஷயம் தெரிஞ்சவங்க, நேர்மையானவங்க, சமூக அக்கறை உள்ளவங்க. அவங்க ஆலோசனை உங்களுக்குக் கூட உபயோகமாத்தான் இருக்கும். அமைச்சர்ங்கறத்துக்கான உங்க அந்தஸ்து, கௌரவம் இதுக்கெல்லாம் எந்தக் குறையும் வராம இருக்கற அளவுக்குத்தான் நான் இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்கேன். கொஞ்ச நாள் ஆனா, அவங்க ஆலோசனைகளும், வழிகாட்டலும் நமக்கு எவ்வளவு பயனுள்ளதா இருக்கும்னு நீங்களே புரிஞ்சுப்பீங்க."
அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அனைவரையும் ஒருமுறை கண்களைச் சுற்றிப் பார்த்த குணசீலன், "உங்கள்ள யாருக்காவது இந்த ஏற்பாடு பிடிக்கலேன்னா, நீங்க அமைச்சரவையிலேந்து விலகிக்கலாம்!" என்றார் சிரித்தபடி.
அரசியல் இயல்
குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
No comments:
Post a Comment