ராஜகோபால் மாநில முதல்வர் என்றாலும் அவரை யாரும் முதல்வர் என்று அழைப்பதில்லை, பெரியவர் என்றுதான் அழைப்பார்கள் - அவருடைய கட்சிக்காரர்கள், பொதுமக்கள், ஊடகங்கள், பிற கட்சித் தலைவர்கள் என்று எல்லோருமே.
எதிர்க்கட்சித் தலைவர் செல்லக்கண்ணு கூட அரசாங்கத்தைத் தாக்கிப் பேசும்போது, 'பெரியவர் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது,' 'பெரியவரின் ஆட்சியில் மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்' என்றுதான் பேசுவார்.
பெரியவர் என்ற அடைமொழி ராஜகோபாலின் வயதுக்காக மட்டும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.
அவரது ஐம்பதாவது வயதிலேயே 'பெரியவர்' என்று அவர் அழைக்கப்படத் துவங்கி சிறிது காலத்தில் அது அவரது பெயராகவே நிலைபெற்று விட்டது. இதற்குக் காரணம் அவருடைய கண்ணியமான நடத்தை, நாகரிகமான பேச்சு, அறிவுக் கூர்மை மற்றும் பணிவான அணுகுமுறை.
அவரை அரசியல்ரீதியாக எதிர்த்தவர்களும் அவரைப் பெரியவர் என்று குறிப்பிடத் தயங்கியதில்லை. 'ஒரு மனிதராகப் பெரியவரை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். ஆனால் அரசியல்ரீதியாக அவரை எதிர்க்கிறோம்' என்றுதான் மாற்றுக் கட்சியினர் கூறுவார்கள்.
மற்ற பல அரசியல் தலைவர்களைப் போலவே ராஜகோபாலும் அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்து வந்தார்.
திடீரென்று மாநில முதல்வராக இருந்த ராஜகோபாலின் உடல்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நிலை தேறிய பிறகும் அவர் மீண்டும் பதவிக்கு வர விரும்பவில்லை. தீவிர அரசியலில் ஈடுபடாமல், வீட்டிலேயே இருந்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
முக்கியமான பிரச்னைகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர அரசியலில் அவர் அதிகம் பங்கு கொள்ளவில்லை.
அவருக்குப் பின் முதல்வரான அவர் கட்சியைச் சேர்ந்த நம்பி ராஜகோபாலைச் சந்திப்பதிலோ, அவரிடம் ஆலோசனை பெறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை.
மாநலச் சட்டமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ராஜகோபால் அறிவித்து விட்டார். ஆயினும், தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெற்றால் ராஜகோபாலை முதல்வராகும்படி அவர் கட்சி கேட்டுக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.
ஆனால் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெறவில்லை. செல்லக்கண்ணு தலைமையிலான கட்சிதான் வெற்றி பெற்றது.
செல்லக்கண்ணு முதல்வராகப் பதவி ஏற்றதும் ராஜகோபாலின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். சந்தித்து விட்டு வந்ததும் ராஜகோபாலின் வீட்டு வாசலில் ஊடகங்களைச் சந்தித்தார்.
"எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரியவரை நீங்கள் சந்தித்ததற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உண்டா?" என்று கேட்டார் ஒரு நிருபர்.
"அரசியல்ரீதியான காரணங்கள் இல்லை, ஆனால் அரசுரீதியான காரணம் உண்டு!" என்றார் செல்லக்கண்ணு, புன்னகையுடன்.
"அப்படியென்றால்...?"
"எங்கள் அரசுக்கு ஒரு கௌரவ ஆலோசகராக இருக்கும்படி பெரியவரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்திருக்கிறார். "
"எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரான பெரியவரை நீங்கள் ஆலோசகராக வைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கடந்த காலங்களில் அவரை நீங்கள் கடுமையாக விமரிசித்திருக்கிறீர்களே!"
"அவரை விமர்சிக்கவில்லை. அவர் அரசியலைத்தான் விமர்சித்திருக்கிறோம். அவர் இப்போது தீவிர அரசியலில் இல்லை. பெரியவரின் அறிவும் அனுபவமும் ஆற்றலும் நம் மாநில நலனுக்குப் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அவரது துணையை நாடி இருக்கிறோம். இது எங்கள் ஆட்சிக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நன்மை தரும் என்று நம்புகிறேன்" என்றார் செல்லக்கண்ணு.
குறள் 442:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
No comments:
Post a Comment