கோபு அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு முதலில் நெருக்கமானவன் தாமோதரன்தான்.
தாமோதரன் இரண்டு வருடம் முன்பே அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்ததால் கோபுவுக்கு சீனியர் என்றாலும், கோபுவைத் தனக்குச் சமமானவன் போலவே கருதி அவனிடம் நெருங்கிப் பழகினான்.
ஒரு நாள் தாமோதரன் கோபுவிடம், "நீ சஞ்சய்கிட்ட ரொம்ப நெருக்கமாப் பழகற போல இருக்கு. அவன் அவ்வளவு நல்லவன் இல்ல. கொஞ்சம் விலகியே இரு!" என்றான்.
"நல்லவன் இல்லேன்னு எப்படிச் சொல்றே?" என்றான் கோபு.
"என்னால விவரமாச் சொல்ல முடியாது. அவன் எல்லார்கிட்டேயும் ரொம்ப நட்பா இருக்கற மாதிரி காட்டிப்பான். ஆனா அவன்கிட்ட நெருங்கிப் பழகினா, நம்மகிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துப்பான்."
"அட்வான்ட்டேஜ்னா? கடன் கேப்பானா?" என்றான் கோபு சிரித்தபடி.
"இது சிரிக்கிற விஷயம் இல்ல. நான் உன் நன்மைக்காகத்தான் சொல்றேன். கடன் வாங்கிட்டுத் திருப்பிக் கொடுக்கலைன்னா பொருள் நஷ்டம் மட்டும்தான் ஆகும். ஆனா அவனால பெரிய கேடுகள்ளாம் விளையும். அவனால பாதிக்கப்பட்ட சில பேர் எங்கிட்ட சொல்லி இருக்காங்க.
"அவனைப் பாத்ததிலேந்தே எனக்கு அவன் மேல நல்ல அபிப்பிராயம் இல்ல. அதனால நான் அவங்கிட்டேந்து ஒதுங்கியே இருக்கேன்.
"மேலதிகாரிகள் கிட்டல்லாம் தனக்குச் செல்வாக்கு இருக்கற மாதிரி பேசுவான். அதை நம்பி இந்த ஆஃபீஸ்ல சில பேர் அவன்கிட்ட பயந்து நடந்துக்கறாங்க. அதைத் தனக்கு சாதகமாப் பயன்படுத்திக்கிட்டு தான் ஒரு சக்தி வாய்ந்த நபர்ங்கற மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டிருக்கான்.
"என்னை மாதிரி சில பேர் அவனைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு அவன்கிட்டேந்து விலகி இருக்கோம். நீயும் அப்படி இருக்கறதுதான் உனக்கு நல்லது" என்றான் தாமோதரன்.
கோபு தனக்குள் சிரித்துக் கொண்டு மௌனமாக இருந்தான். தாமோதரன் பற்றி சஞ்சய் தன்னிடம் கூறி இருந்தது உண்மைதான் என்பது போல்தான் தாமோதரனின் பேச்சு இருந்ததாக கோபுவுக்குத் தோன்றியது.
தான் எச்சரித்த பிறகும் கோபு சஞ்சயுடன் நெருக்கமாக இருப்பதை தாமோதரன் கவனித்தான். ஆயினும் அதற்குப் பிறகு கோபுவிடம் அவன் இது பற்றிப் பேசவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கோபு தாமோதரனிடம் வந்து, "தாமோதரா! உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!" என்றான்.
அலுவலகம் முடிந்ததும் இருவரும் ஒரு ஓட்டலுக்குச் சென்று ஓரமாக இருந்த ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டனர்.
"தாமோதரா! நீ ஆரம்பத்திலேயே சஞ்சயைப் பத்தி எங்கிட்ட எச்சரிச்சே. ஆனா நான் அதை அலட்சியம் பண்ணினேன். அதுக்காக நீ என்னை மன்னிக்கணும். இப்பதான் அவனைப் பத்தி எனக்கு நல்லாப் புரிஞ்சது" என்றான் கோபு.
"என்ன நடந்தது?" என்றான் தாமோதரன்.
"நேத்து ஆஃபீஸ் முடிஞ்சதும் சஞ்சய் சினிமாவுக்குப் போகலாம்னு கூப்பிட்டான். போற வழியில அவன் தங்கை வீட்டுக்குப் போய் அவளைப் பாத்துட்டுப் போகலாம்னு சொன்னான். அவளுக்கு உடம்பு சரியால்லாம இருந்ததாம்.
"அவ வீட்டுக்குப் போனப்ப அவ சாதாரணமாத்தான் இருந்தா. அவ காப்பி போட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு உள்ளே போனா. சஞ்சய் யாருக்கோ ஃபோன் பண்ணிப் பாத்துட்டு சிக்னல் கிடைக்கலேன்னு வெளியே போனான்.
"அவன் வெளியில போனதும் அந்தப் பொண்ணு உள்ளேந்து வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கப் பாத்தா. நான் திமிறிக்கிட்டு வெளியில ஓடினேன். அப்ப விட்டு வாசல்ல ஃபோனை வச்சுக்கிட்டு ஃபோட்டோ எடுக்கற மாதிரி சஞ்சய் நின்னுக்கிட்டிருந்தான்.
"அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. அவ அவன் தங்கையே இல்ல. அவளை எங்கிட்ட நெருக்கமா நடந்துக்க வச்சு வன் அதை வெளியிலேந்து வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்ண முயற்சி பண்ணி இருக்கான். நல்லவேளையா நான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன்!" என்றான் கோபு படபடப்புடன்.
"இது மாதிரி நம்ம ஆஃபீஸ்ல வேற சிலருக்கு நடந்திருக்கு. அதையெல்லாம் உங்கிட்ட விளக்கமாச் சொல்ல வேண்டாம்னு நினைச்சுத்தான் உனக்கு ஒரு கோடி காட்டிட்டுப் பொதுவா உன்னை எச்சரிக்கை செஞ்சேன். ஆனா அப்ப நான் சொன்னதை நீ நம்பல!" என்றான் தாமோதரன், குற்றம் சாட்டுவது போல்.
"என் முட்டாள்தனம்தான்! நீ எங்கிட்ட அவனைப்பத்தி அப்படிச் சொல்லுவேன்னு அவன் எங்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தான். அவன் சொன்ன மாதிரியே நீ சொன்னதும் நான் அவன் சொன்னது சரியா இருக்குன்னு நினைச்சேன்!"
"நான் எதுக்கு அவனைப் பத்தி உங்கிட்ட தப்பா சொல்லணும்னு நீ யோசிக்கலியா?" என்றான் தாமோதரன், சற்றே கோபத்துடன்.
"தாமோதரா! மறுபடி நீ என்னை மன்னிக்கணும். நீ இந்த ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்த புதுசில ஒரு லேடி ஸ்டாஃப்கிட்ட தப்பா ஏதோ பேசிட்டதாகவும், அவங்க அதை எம் டிகிட்ட புகார் செய்யப் போனப்ப, சஞ்சய் அவங்களைச் சமாதானப்படுத்தி உன்னை அவங்ககிட்ட மன்னிப்புக் கேக்க வச்சதாகவும், அவன் உனக்கு நல்லதுதான் செஞ்சான்னாலும், உன்னை அந்தப் பெண்கிட்ட மன்னிப்புக் கேக்க வச்சதுக்காக நீ அவன்கிட்ட கோபமா இருக்கறதாகவும் அவன் எங்கிட்ட சொன்னான்."
"அடப்பாவி! கதையை மாத்திட்டானே! லேடி ஸ்டாஃப்கிட்ட தப்பாப் பேசினவன் அவன். அவனை மன்னிப்புக் கேக்க வச்சு அந்தப் பொண்ணை எம் டிகிட்ட போகாம தடுத்து அவன் வேலையைக் காப்பாத்தினவன் நான். அவனை அப்ப காப்பத்தினதுதான் அவன் விஷயத்தில நான் செஞ்ச ஒரே தப்பு!" என்றான் தாமோதரன்.
அரசியல் இயல்
No comments:
Post a Comment