"எல்லாரும் குழந்தைகள் இல்லையேன்னு ஏங்குவாங்க. நீ பெரியவங்க இல்லையேன்னு வருத்தப்படறியே!" என்றான் பிரபாகர்.
"என் அப்பா பல வருஷங்களுக்கு முன்னேயே இறந்துட்டாரு. நமக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள்ள என் அம்மாவும் இறந்துட்டாங்க. உங்க அப்பா அம்மாவும் ரொம்ப நாள் முன்னாலேயே போய்ச் சேந்துட்டாங்க.
"கடவுள் புண்ணியத்தில நமக்கு ஒரு பையன் பிறந்திருக்கான். நீங்க நல்ல வேலையில இருக்கீங்க. நமக்கு எந்தக் குறையும் இல்லதான்.
"ஆனா வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது" என்றாள் சியாமளா.
"குழந்தையைப் பாத்துக்கறது உனக்குக் கஷ்டமா இருந்தா ஒரு ஆயாவை வச்சுக்கலாம்."
"நான் விரும்பறது அது இல்ல. நமக்கு வழி காட்டவும், ஆலோசனை சொல்லவும் வீட்டில பெரியவங்க யாராவது இருந்தா நல்லா இருக்கும்னுதான் நினைச்சேன். சில குடும்பங்கள்ள பெரியவங்க இருக்கறதைப் பாத்தா எனக்கு நம்ம வீட்டில அது மாதிரி இல்லையேன்னு ஏமாத்தமா இருக்கு."
"நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு. பல குடும்பங்கள்ள பெரியவங்களை ஒரு சுமையா நினைக்கறாங்க. பெரியவங்களை முதியோர் விடுதியில கொண்டு விட்டுட்டு, தாங்கள், தங்கள் பிள்ளைகள்னு இருக்கணும்னு நினைக்கறவங்கதான் அதிகம்."
"அது உண்மைதான். பெரியவங்களோட அருமை அவங்களுக்குப் புரியலேன்னுதான் நினைக்கறேன்."
"நீ நினைக்கறது சரியா இருக்கலாம். ஆனா குழந்தைகளைத் தத்து எடுக்கற மாதிரி பெரியவங்களைத் தத்து எடுக்க முடியாதே!" என்றான் பிரபாகர்.
"அது சரிதான்!" என்றாள் சியாமளா.
இரண்டு நாட்கள் கழித்து பிரபாகர் சியாமளாவிடம் சொன்னான்:
"சியாமளா! நீ சொன்னதைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன். வீட்டில பெரியவங்க யாராவது இருக்கறது நல்லதுதான்னு எனக்கும் தோணுது.
"என் நண்பன் சேகர் இப்ப அமெரிக்கால இருக்கான். அவன் அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவன் அப்பா இந்த ஊர்ல தனியாத்தான் இருக்காரு. அவருக்கு அமெரிக்காவுக்குப் போயிட்டு வரதில விருப்பமில்ல. அவரு ரொம்ப நல்ல மனுஷன். படிச்சவரு. அனுபவசாலி. அவர்கிட்ட நான் நிறைய தடவை பேசி இருக்கேன். அவரை எல்லாருக்குமே பிடிக்கும்.
"நாம அவரைப் போய்ப் பாப்போம். உனக்கு அவரைப் பிடிச்சிருந்தா, அவரும் சேகரும் சம்மதிச்சா அவரை நமக்குத் துணையா நம்ம வீட்டில வச்சுக்கலாம். என்ன சொல்ற?"
"நிச்சயமா. எனக்கு அவரைப் பிடிக்காம போகாது. அவரும், உங்க நண்பரும் சம்மதிச்சா, அதை நம்ம அதிர்ஷ்டம்னுதான் நினைப்பேன்!" என்றாள் சியாமளா, மகிழ்ச்சியுடன்.
அரசியல் இயல்
No comments:
Post a Comment