"எதுக்குப்பா என் கேபின்ல இன்னொரு மேஜை போடறே?" என்றார் சர்மா.
"ஏ ஓ தான் சார் போடச் சொன்னாரு. புதுசா ஒரு அதிகாரி வேலையில சேர்ந்திருக்காரு. அவருக்குத்தான்னு நினைக்கிறேன்" என்றான் பியூன் சபாபதி.
"அதுக்கு என் கேபின்தான் கிடைச்சுதா? நான் ஒரு சீனியர் ஆஃபீசர்ங்கற மரியாதை கூடத் தெரியலியே உங்க ஏ ஓ வுக்கு?" என்றார் சர்மா, கோபத்துடன்.
"சார்! ஏ ஓ சொன்னதை நான் செய்யறேன். எனக்கென்ன தெரியும்? ஆனா எல்லா கேபின்லேயும் ரெண்டு பேர் உக்காந்திருக்காங்களே!" என்றான் சபாபதி.
"இருந்தா? நான் எவ்வளவு சீனியர்? உங்க ஏ ஓவை விட சீனியர் நான். அவன் தனி கேபின்லதானே உக்காந்திருக்கான்?"
"சார்! அவர் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீசர்!" என்றான் சபாபதி.
"இப்பவே அவனை இன்டர்காம்ல கூப்பிட்டுக் கிழி கிழின்னு கிழிக்கறேன் பார்!" என்ற சர்மா, உடனே இன்டர்காமில் சில எண்களை அழுத்தி ஏ ஓ விடம் ஆங்கிலத்தில் கோபமாகப் பேசினார்.
சபாபதிக்கு அவர் ஆங்கிலத்தில் பேசியது புரியவில்லை. பேசி முடித்ததும் சர்மா ஃபோனை அவனிடம் கொடுத்தார்.
"நீ மேஜையை வெளியில எடுத்துட்டு வந்து அங்கேயே வராந்தாவில ஒரு ஓரமா வச்சுடு. எங்கே போடறதுன்னு அப்புறம் சொல்றேன்" என்றார் ஏ ஓ, பலவீனமான குரலில்.
சபாபதி தன்னுடன் வந்த ஆளுடன் மேஜையைத் தூக்கிக் கொண்டு வெளியில் சென்றபோது, "பாத்த இல்ல, என் பவரை? நான் போட்ட சத்தத்தில ஏ ஓ எப்படி பயந்துட்டான் பாரு!" என்றார் சர்மா, முகத்தில் வெற்றிப் பெருமிதத்துடன்.
அடுத்த நாள் காலையில் சர்மா அலுவலகத்துக்கு வந்தபோது, அவர் மேஜை மீது ஒரு அலுவலக உத்தரவு இருந்தது. அன்றிலிருந்து அவர் கோவிந்த் என்ற மூத்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் பணி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அலுவலகத்தில் இது போன்ற மாறுதல்கள் அவ்வப்போது நடப்பதுண்டு. அவை அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் ஒப்புதலோடு செய்யப்படுபவை.
இன்டர்காமில் ஏ ஒவை அழைத்த சர்மா, "எதுக்கு ஐயா என்னை இந்த கோவிந்த் கீழ போட்டிருக்கீங்க? யார் அவரு? அந்தப் பெயரையே நான் கேள்விப்பட்டதில்லையே! வேற எங்கேயிருந்தாவது மாற்றலாகி வந்திருக்காரா?" என்றார்.
"இந்த மாறுதல் எல்லாம் டைரக்டரோட அப்ருவல்படிதான் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமே சர்மா!" என்றார் ஏ ஒ.
"நீதானே இந்த மாறுதலையெல்லாம் செய்யற? நீ கொடுக்கற லிஸ்டை டைரக்டர் அப்படியே அப்ருவ் பண்றாரு. இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே! அது சரி கோவிந்த் யாருன்னு கேட்டேனே?"
"அவரு நம்ம ஆஃபீஸ்ல புதுசா சேர்ந்திருக்கற இளைஞர். யூ பி எஸ் சியில தேர்வாகி நேரடியா உயர் பதவிக்கு வந்திருக்காரு. நேத்திக்குத்தான் ஜாயின் பண்ணினாரு. நம்ம ஆஃபீஸ்ல கேபின்கள் குறைவா இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமே! அவருக்கு உடனே கேபின் கொடுக்க முடியல. அதனாலதான் சீனியர் ஆஃபீசரான உங்க ரூம்ல அவருக்கு சீட் கொடுக்கலாம்னு பாத்தேன். நீங்க பெரிசா கத்தினதால வேற ரூம்ல அவருக்கு மேஜை போட்டுட்டேன். நீங்க எங்கிட்ட ஃபோன்ல கத்தறப்ப அவரு எனக்கு முன்னாலதான் உக்காந்திருந்தாரு!" என்றார் ஏ ஒ சிரித்துக் கொண்டே.
No comments:
Post a Comment