Wednesday, December 23, 2020

437. சேர்த்து வைத்த பணம்!

குப்புசாமி சிறிய அளவில் துவங்கிய கமிஷன் மண்டி வியாபரம் ஓரிரு வருடங்களுக்குள்ளேயே சூடு பிடித்து அவருக்குப் பெரிய அளவில் வியாபார வெற்றியைக் கொடுத்து விட்டது.

இளமையில் வறுமையை அனுபவித்ததால் சிக்கனம் என்பது குப்புசாமிக்கு வாழ்க்கையின் தாரக மந்திரமாக அமைந்து விட்டது. அவர் மனைவி புஷ்பா, ஒரே மகன் குமார் இருவருமே சிக்கனம் என்ற அவருடைய இறுக்கமான பிடியில் சிக்கித் தவித்தனர்.

வயிற்றுப் பசிக்கு உணவு, உடுத்திக் கொள்ள ஆடைகள் தவிர வேறு எந்த சுகத்தையும் அவர்கள் அனுபவிக்க குப்புசாமி இடம் கொடுக்கவில்லை. ஒரு சுமாரான நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் இருக்கக் கூடியவற்றை விட அதிகமான பொருட்களோ, வசதியோ அவர்கள் வீட்டில் இல்லை. 

ஒவ்வொரு ஆண்டும் குமாரின் பள்ளி விடுமுறையின் போது ஊட்டி, கொடைக்கானல் அல்லது வேறு ஊர்களுக்குச் சில நாட்களாவது சென்று வர வேண்டும் என்று புஷ்பா கூறுவாள், அவள் கோரிக்கையை ஒவ்வொரு முறையும் நிராகரித்து விடுவார் குப்புசாமி.

வியாபாரத்தை விட்டு விட்டுத் தன்னால் ஒரு நாள் கூட வர முடியாது என்பது துவக்கதில் குப்புசாமி கூறிய காரணம். இரண்டு மூன்று முறை அவர் இப்படிச் சொன்னதும், "சரி. உங்களால வர முடியாட்டா பரவாயில்ல. நானும் குமாரும் மட்டுமாவது போயிட்டு வரோம்" என்றாள் புஷ்பா.

அப்போதுதான் தன் மறுப்புக்கான உண்மையான காரணத்தைக் கூறினார் குப்புசாமி. பணம் செலவழிந்து விடுமாம்!

"நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் பணம் சம்பாதிக்கிறேன்! டூர் போறேன்னு சொல்லி எல்லாத்தையும் ஒரு வாரத்தில அழிக்கணுமா?" என்றார் குப்புசாமி சற்றே கோபத்துடன். "என்னை மாதிரி பணத்துக்குக் கஷ்டப்பட்டுட்டு, அப்புறம் பணத்தைச் சம்பாதிக்கறப்பதான் பணத்தோட அருமை தெரியும்!"

புஷ்பாவுக்கு கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

"விடுமுறையில ஏதாவது ஊருக்குப் போறதுங்கறது ரொம்ப சாதாரண விஷயம். பணம் இல்லாதவங்க கூட எப்பவாவது இப்படி உல்லாசப் பயணம் போயிட்டுத்தான் வருவாங்க. நீங்க இவ்வளவு சம்பாதிக்கறீங்க. ஆனா, இந்தச் செலவு அதிகமாத் தெரியுது உங்களுக்கு!" என்றாள் அவள் கோபத்துடன்.

"வேணும்னா உன் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு வா. நான் தடுக்கலியே!"

புஷ்பாவால் அதை மட்டும்தான் செய்ய முடிந்தது.

தான் சம்பாதித்த பணத்தில் ஒரு வீடு வாங்கியதைத் தவிர வேறு எந்தப் பெரிய செலவும் செய்யவில்லை குப்புசாமி.

குமார் பொறியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா சென்று மேல்படிப்புப் படிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான்..

"நீ நல்லாப் படிக்கறதாலதான் உன்னை எஞ்சினீரிங் படிக்க வச்சேன். அதுக்கே நிறைய செலவாயிடுச்சு. அதான் காம்பஸ்ல வேலை கிடைக்குமே! அப்புறம் எதுக்கு ஏகப்பட்ட செலவு பண்ணி அமெரிக்கா போய்ப் படிக்கணும்?" என்றார் குப்புசாமி.

"எனக்கு எஜுகேஷன் லோன் கிடைக்கும்ப்பா. அதை வேலைக்குப் போனப்பறம் நானே அடைச்சுடுவேன். ஆரம்பத்தில மட்டும் கொஞ்சம் பணம் தேவைப்படும்" என்றான் குமார்.

குப்புசாமி அரை மனதுடன் சம்மதித்தார்.

குமார் அமெரிக்கா சென்று படித்து அங்கேயே ஒரு வேலையிலும் சேர்ந்து விட்டான். தனக்கு இந்தியாவுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை என்று அவர்களிடம் கூறி விட்டான், வேலைக்குப் போன ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான்.

குப்புசாமிக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. புஷ்பா மட்டும் மனமுடைந்து போய் விட்டாள். ஏற்கெனவே கணவன் பணம்தான் உலகம் என்று அலையும் நிலையில், மகனும் தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பிறகு, தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாள். இதனால் அவள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடல்  வலுவிழந்து வந்து கொண்டிருந்தது.

சந்தை மாற்றங்களால் குப்புசாமியின் கமிஷன் மண்டித் தொழிலும் நலிவடைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் வியாபாரத்தை மூடுவது என்ற முடிவுக்கு வந்து அவ்வாறே மூடி விட்டார்.

வியாபாரத்தை விட்டு விட்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்ததும் குப்புசாமி வயது தன் உடலில் ஏற்படுத்தி இருந்த பலவீனங்களையும் நோய்களையும் உணர ஆரம்பித்தார்.

புஷ்பாவுக்கும் உடல் சோர்வும் பற்ற பிரச்னகளும் அதிகமாகி விட்டன.

இருவரும் பல மருத்துவச் சோதனைகள் செய்து கொண்ட பின், அவர்களைப் பரிசீலனை செய்த மருத்துவர், "உங்க ரெண்டு பேருக்குமே உடம்பில நிறைய பிரச்னைகள் இருக்கு. மத்தவங்க உதவி இல்லாம நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கறது கஷ்டம். உங்களுக்கு அவ்வபோது மருத்துவ உதவியும் தேவைப்படலாம். அதனால உங்களைப் பாத்துக்க யாராவது உங்களோட எப்பவுமே இருக்கணும்!" என்றார் மருத்துவர்.

புஷ்பா மகனிடம் தொலைபேசியில் பேசினாள்.

"அம்மா! உங்க ரெண்டு பேரால மட்டும் தனியா இருக்க முடியாது. சமையலுக்கு வீட்டு வேலைக்கெல்லாம் ஆள் வச்சுக்கறதோட வீட்டில எப்பவுமே ஒரு நர்ஸ் இருக்கணும். அதுவும் உனக்கு ஒரு பெண் நர்ஸ் அப்பாவுக்கு ஒரு ஆண் நர்ஸ்னு ரெண்டு பேர் இருக்கணும். இல்லேன்னா, நீங்க ரெண்டு பேரும் எல்லா வசதிகளும் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில சேரணும். உங்க எல்லாத் தேவைகளையும் அவங்க பாத்துப்பாங்க. உடனடி மருத்துவ வசதியும் இருக்கும். ரெண்டுல எதைச் செஞ்சாலும் நிறையச் செலவாகும். அப்பாதான் நிறையப் பணத்தை சேத்து வச்சிருக்காரே!" என்றான் குமார்.

ஒப்புக்குக் கூடத் தான் பணம் கொடுப்பதாக மகன் சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்ட புஷ்பா, அருகில் அமர்ந்து ஸ்பீக்கர் மூலம் வந்த மகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கணவரின் முகத்தைப் பார்த்தாள்.

முதல் முறையாக அவர் முகத்தில் வருத்தம் படர்வதைப் பார்த்தாள் அவள். தன் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்ற வருத்தமா, அல்லது, சம்பாதித்தபோது எதையும் அனுபவிக்காமல் சேர்த்து வைத்த பணம் இப்படியா செலவாக வேண்டும் என்ற வருத்தமா?

அவளுக்குப் புரியவில்லை. 

அரசியல் இயல்
அதிகாரம் 44 
குற்றங்கடிதல்  
குறள் 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

பொருள்:
தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைச் செய்து கொள்ளாமல் சேமித்து வைக்கப்படும் செல்வம் அனுபவிக்கப்படாமல் அழிந்து போகும்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்





















No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...