Saturday, January 23, 2021

445. முதல்வருடன் ஒரு சந்திப்பு

பத்திரிகையாளர் கிளப்பில் குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த ஒரே தலைப்பு நடந்து முடிந்திருந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றியும், கதிர்வேலன் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது பற்றியும்தான்.

சங்கரமணியும் அவருடைய பத்திரிகை உலக நண்பர் குழந்தைசாமியும் ஒரு மேஜையில் எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"நீங்க யாரைத் தீவிரமா எதிர்த்து எழுதிக்கிட்டிருந்தீங்களோ அவ தேர்தல்ல ஜெயிச்சு பதவிக்கு வந்துட்டாரு. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அவர்தான் முதலமைச்சர். மத்தியில ஆள்ற கட்சியோடயும் அவரு நட்பா இருக்காரு. நீங்க என்ன செய்யப் போறீங்க?" என்றார் குழந்தைசாமி.

"செய்யறதுக்கு என்ன இருக்கு? தொடர்ந்து என் கருத்துக்களைச் சொல்லிக்கிட்டிருப்பேன். அரசாங்கத்திலேந்து எனக்கு நிறையத் தொந்தரவுகள் வரலாம். நாட்டு நலனுக்கு எதிரா எழுதினேன்னு சொல்லி வழக்குப் போடலாம், சிறையில அடைக்கலாம். எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன்!" என்றார் சங்கரமணி.

"எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிங்க. ஆட்சியில இருக்கறவங்களைப் பகைச்சுக்கிட்டு வாழறது ரொம்பக் கஷ்டம்" என்று குழந்தைசாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகே வந்த செந்தில் என்ற பத்திரிகையாளர், சங்கரமணியிடம் குனிந்து, "சார்! உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்!" என்றார்.

இது காதில் விழுந்ததும் குழந்தைசாமி, "சரி. நாம அப்புறம் பாக்கலாம்" என்றபடியே எழுந்து நின்றார்.

"நீங்க இருங்க. சார் கிட்ட ஒரு சேதி சொல்லணும். அதைச் சொல்லிட்டுப் போயிடறேன். அப்புறம் நீங்க தொடர்ந்து பேசலாம்" என்று செந்தில் கூறியதும், சங்கரமணி எழுந்து சற்றுத் தள்ளிச் சென்று நின்றார். 

செந்தில் அவர் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சங்கரமணி மீண்டும் மேஜைக்கு வந்து குழந்தைசாமிக்கு எதிரே அமர்ந்தார்.

"இவரு கதிர்வேலனோட ஆளாச்சே! என்ன சொல்றாரு? எங்க ஆளு பதவிக்கு வந்துட்டாரு, ஜாக்கிரதைன்னு எச்சரிக்கிறாரா?" என்றார் குழந்தைசாமி.

"இல்லை. முதல்வர் என்னைப் பார்க்க விரும்பறாராம்!" என்றார் சங்கரமணி, யோசனையுடன்.

"பாத்துட்டு வாங்க. நேரில கூப்பிட்டு எச்சரிக்க விரும்பறாரோ என்னவோ! ஜாக்கிரதையாப் பேசுங்க. ரொம்ப மோசமான ஆளு அவரு. உங்களுக்குத் தெரியாதது இல்ல!" என்றார் குழந்தைசாமி, சற்றே கவலையான குரலில்.

முதல்வர் கதிர்வேலனை அவர் அலுவலகத்தில் சங்கரமணி சந்தித்தபோது, அறையில் வேறு யாரும் இல்லை.

"சொன்னா நம்புவீங்களோ என்னவோ, நீங்க எழுதறது அத்தனையும் உன்னிப்பாப் படிக்கறவன் நான்!" என்றார் கதிர்வேலன்.

'தெரியுமே! அதுக்கு பதிலா என்னைத் தரக்குறைவாத் தாக்கி உங்க கட்சிப் பத்திரிகையில உங்க ஆட்கள் எழுதறதையெல்லாம் நானும் படிப்பேன்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சங்கரமணி, "நன்றி" என்றார் சுருக்கமாக.

"இப்ப நான் பதவிக்கு வந்திருக்கேன். நான் பதவியில இருக்கறதால என்னைச் சுத்தி இருக்கறவங்கல்லாம் நான் எதை விரும்பறேனோ அதைத்தான் எங்கிட்ட சொல்லுவாங்க. உண்மைகளைச் சொல்ல மாட்டாங்க. ஆனா நீங்க நாட்டில நடக்கற விஷயங்களை உன்னிப்பா கவனிச்சு எழுதறீங்க. சும்மா குத்தம் சொல்லணுங்கறத்துக்காக இல்லாம, உண்மைகளை மட்டும்தான் எழுதறீங்க.

"அரசியல்ரீதியா நீங்க என்னைக் குறை சொல்லி எழுதினப்ப எங்க கட்சிக்காரங்க உங்களைக் கடுமையா விமரிசனம் செஞ்சிருக்கலாம். ஆனா இப்ப நான் ஆட்சியில இருக்கறப்ப, நாட்டில என்ன நடக்குது, மக்கள் என்ன நினைக்கறாங்க மாதிரி உண்மைகளை அறிஞ்சுக்கணும்னு நினைக்கறேன். 

"என்னைச் சுத்தி இருக்கறவங்க, என்னை ஆதரிக்கிற பத்திரிகையாளர்கள் எல்லாம் எனக்கு பாதகமான விஷயங்களை என் பார்வைக்கே கொண்டு வர மாட்டாங்க. அதனால, நடக்கறதை உன்னிப்பா கவனிச்சு உண்மைகளைத் தயங்காம சொல்ற உங்களை என் ஊடக ஆலோசகரா வச்சுக்கணும்னு நினைக்கறேன்.

"நீங்க இப்ப எழுதற மாதிரியே சுதந்திரமா பத்திரிகைகள்ள எழுதிக்கிட்டிருக்கலாம். ஆனா எனக்குத் தெரிய வேண்டிய கசப்பான உண்மைகளை, மத்தவங்க எங்கிட்ட சொல்லத் தயங்கக் கூடிய விஷயங்களை நீங்க எனக்கு சொல்லிக்கிட்டிருக்கணும். இந்தப் பொறுப்பை நீங்க ஏத்துக்கணும்னு உங்களைக் கேட்டுக்கறேன்."

சங்கரமணி கதிர்வேலனை வியப்புடனும், ஒரு புதிய மரியாதையுடனும் பார்த்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

பொருள்:
நம்மைச் சுற்றி இருந்து கொண்டு நடப்பவற்றைக் கண்டு எடுத்துரைக்கும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.
அறத்துப்பால்                                                                                காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...