Thursday, January 21, 2021

444. விழா நாயகன்

"சார்! நமக்குப் பரிசு வழங்கற விழா அடுத்த வாரம் இருக்கு. அது விஷயமா அரசாங்கத்திலேந்து அதிகாரி ஃபோன் பண்ணினாரு. எல்லா ஏற்பாடுகளும் தயாரா இருக்காம்" என்றார் நிறுவனத்தின் மானேஜர் ரகுபதி.

"சரி. விழாவை வெப்காஸ்ட் பண்ணணும். அதுக்கு அவங்ககிட்ட அனுமதி கேட்டு ஈமெயில் அனுப்பிடுங்க" என்றான் நிர்வாக இயக்குநர் கஜேந்திரன்.

"சார்! இது அரசாங்கம் ஏற்பாடு செஞ்சிருக்கற விழா. வெப்காஸ்டுக்கெல்லாம் அவங்க ஒத்துக்க மாட்டாங்க."

"நீங்க மெயில் அனுப்பிட்டு உங்ககிட்ட பேசின அதிகாரிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லுங்க. அவர் ஒத்துக்கலேன்னா ஃபோனை எங்கிட்ட கொடுங்க"

சில நிமிடங்கள் கழித்து கஜேந்திரனின் அறைக்கு வந்த ரகுபதி, "சார்! வெப்காஸ்டுக்கு ஒத்துக்க மாட்டாங்களாம். அதிகாரி லைன்ல இருக்காரு" என்றார்.

தன் அறையில் இருந்த தொலைபேசியை எடுத்துப் பேசிய கஜேந்திரன்,"சார்! வெப்காஸ்டை எங்க செலவில நாங்களே ஏற்பாடு செஞ்சுக்கறோம். உங்ககிட்ட அனுமதி மட்டும்தான் கேக்கறோம்... பாலிசி இஷ்யூவா? சார்! வெப்காஸ்டுக்கு அனுமதி கொடுத்தீங்கன்னாதான் நான் விழாவில வந்து பரிசு வாங்கிப்பேன். நீங்க செகரெட்டரி கிட்ட பேசி அனுமதி வாங்கப் பாருங்க" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.

வெப்காஸ்டுக்கு அனுமதி கொடுப்பதாக இரண்டு நாட்கள் கழித்து மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது.

சிறந்த தொழிலதிபர் என்ற விருதைப்பெற்றுக்கொண்டு கஜேந்திரன் பேசினான்:

"இந்த விருது எனக்குக் கிடைச்சிருக்கறதை நான் ஒரு கௌரவமா நினைக்கறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்துக்கும் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி.

"பொதுவா இது மாதிரி விருதுகளை வாங்கும்போது 'இதற்கு நான் தகுதியானவன் இல்லை. ஆயினும் அடக்கத்தோட இதை வாங்கிக்கறேன்'னு சொல்லுவாங்க. பொதுவா இது ஒரு மரியாதைக்காக அல்லது பண்பாட்டுக்காகச் சொல்றதுதான். ஆனா என் விஷயத்தில நான் உண்மையாவே அப்படித்தான் சொல்லணும். ஏன்னா இந்த விருதைப் பெறுகிற அளவுக்கு என் நிறுவனம் வளர்ச்சி அடைஞ்சதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு.

"இந்த நிறுவனத்தை நான் ஆரம்பிக்கல. இந்தத் தொழிலை ஆரம்பிச்சு நடத்தின திருமுருகன் என்பவர் கிட்டேந்து பத்து வருஷம் முன்னால நான் இதை வாங்கினேன். ஒரு புதிய பொருளைத் தன்னோட உழைப்பாலேயும் திறமையாலேயும் உருவாக்கி அதைத் தயாரிச்சு விற்பனை செஞ்சுக்கிட்டிருந்தார் அவர்.

"பொருளாதாரப் பிரச்னைகளால அவரால இதைத் தொடர்ந்து நடத்த முடியல. பல பேர் மிகக் குறைவான விலைக்கு அந்த நிறுவனத்தை வாங்க முயற்சி செஞ்சபோது, அதோட மதிப்பை உணர்ந்த நான் அதை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிட்டேன்.

"நிறுவனத்தை நான் வாங்கினப்பறம், தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை மட்டும் தன் வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போக திருமுருகன் விரும்பினார். நான் சொன்னேன். 'உங்க நாற்காலி மட்டுமில்ல, உங்களோட அறையையும் நீங்க எடுத்துக்கணும். அதாவது நீங்க உங்க அறையில உங்க நாற்காலியிலேயே உக்காந்துக்கிட்டு இந்த நிறுவனத்துக்கு ஆலோசகரா எனக்கு வழிகாட்டியா இருக்கணும்!'

"அவரு என் வேண்டுகோளை ஏத்துக்கிட்டு பத்து வருஷமா என்னையும் என் நிறுவனத்தையும் வழி நடத்திக்கிட்டிருக்காரு. என் நிறுவனத்தோட வளர்ச்சிக்கு அவரோட ஆலோசனைகளாலும், வழிகாட்டுதலும்தான் காரணம். இந்த விருது அவருக்குத்தான் சேரணும். நிறுவனம் என் பேரில இருக்கறாதால எனக்குக் கிடைச்சிருக்கு!

"கொஞ்ச நாளா அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில இருக்காரு. அதனால அவரால இந்த விழாவில கலந்துக்க முடியல. ஆனாலும் அவர் இந்த விழாவைப் பாக்கணுங்கறதுக்காகத்தான் இதை வெப்காஸ்ட் பண்ண அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்கினேன். 

"இப்ப இந்த விருதை நான் என்னோட வழிகாட்டியான திருமுருகன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தன் வீட்டில் இருந்தபடி இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்."

கஜேந்திரனின் பேச்சையும் அதைத் தொடர்ந்து எழுந்த பெரிய கரவொலியையும் படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த திருமுருகனின் கண்களில் நீர் துளிர்த்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  

குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

பொருள்:
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியோர்களைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மையானதாகும்..
  அறத்துப்பால்                                                                        காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...