Monday, January 25, 2021

447. உங்களைப் போல் ஒருவர்!

"உனக்கு அறிவிருக்காடா? ஒரு சின்னப் பையன் செய்யற வேலையா இது?"

15 வயதில் நான் திருட்டு 'தம்' பிடித்ததைத் தெரிந்து கொண்டு என் தாத்தா என்னைக் கடிந்து சொன்னது இது.

"ஏதோ சின்னப்பையன் தெரியாம செஞ்சுட்டான். அப்பா அம்மா இல்லாத பிள்ளையை இப்படியா திட்டுவாங்க?" என்றாள் என் பாட்டி. சொல்லும்போதே அவர் கண்களில் துளிர்ந்த கண்ணீரை என்னால் பார்க்க முடிந்தது.

"அப்பா அம்மா இல்லாததாலதான் நான் அவனைக் கண்டிச்சு வளர்க்க வேண்டி இருக்கு. டேய், இன்னொரு தடவை நீ சிகரெட் குடிச்சேன்னா உனக்குச் சோறு கிடையாது. நீ சிகரெட்டையே சாப்பாடா வச்சுக்க வேண்டியதுதான்!" என்றார் தாத்தா, கடுமை சற்றும் குறையாமல்.

என் சிகரெட் பழக்கம் அன்றே முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

"என்னங்க? சின்ன வயசிலியே உங்க அப்பா அம்ம இறந்துட்டதால, உங்களை  உங்க தாத்தா பாட்டி வளர்த்திருக்கறதால நீங்க அவங்ககிட்ட அன்போடயும் மரியாதையோடயும் இருக்கறது சரிதான். 

"இப்ப உங்க தாத்தாவுக்கு எண்பது வயசாகுது, உங்களுக்கு முப்பது வயசாகுது. இப்பவும் எல்லா விஷயத்திலேயும் அவர்கிட்ட யோசனை கேக்கறீங்க. 

"நீங்க செய்யறது தப்புன்னு நினைச்சா ஏதோ சின்னப் பையனைத் திட்டற மாதிரி அவர் உங்களைக் கடுமையாப் பேசறாரு. நீங்க சந்தோஷமா அவர் திட்டறதைக் கேட்டுக்கிட்டிருக்கீங்க! 

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம அஞ்சு வயசுப் பையன் கூட 'ஏம்மா அப்பாவோட தாத்தா அப்பாவைத் திட்டறாரு?'ன்னு கேக்கறான். நீங்க அவர்கிட்ட அதிகமாப் பேச்சு வச்சுக்காம இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்றாள் என் மனைவி.

"சின்ன வயசிலேந்து என் தாத்தா என்னைக் கண்டிச்சு வளர்த்ததாலதான் நான் வாழ்க்கையில முன்னுக்கு வந்திருக்கேன். இப்ப சொந்தமாத் தொழில் செய்யற அளவுக்கு வந்திருக்கேன். 

"என் தொழிலைப் பத்தி தாத்தாவுக்கு எதுவும் தெரியாட்டாக் கூட, முக்கியமான விஷயங்களை அவர்கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் செய்வேன். 

என் தொழிலைப் பத்தின நுணுக்கங்கள் தாத்தாவுக்குத் தெரியாட்டாலும் நல்லது கெட்டது அவருக்குத் தெரியும். நான் செய்யறது தப்புன்னா அவர் என்னைக் கண்டிக்கத் தயங்க மாட்டாரு. 

"ஏன், நான் கல்லூரியில படிச்சப்ப காதல்ங்கற மாயையில மாட்டிக்க இருந்தேன். தாத்தாதான் அந்த வயசில என்னால வாழ்க்கையைப் பத்தி சரியா முடிவு எடுக்க முடியாதுன்னு சொல்லி என்னை வழிப்படுத்தினாரு. அதனாலதான் உன்னை மாதிரி அருமையான மனைவி எனக்குக் கிடைச்சிருக்கே! 

"தாத்தாவுக்கு வயசாயிடுச்சு, இன்னும் எத்தனை காலத்துக்கு அவரோட வழிகாட்டல் எனக்குக் கிடைக்கும்னு தெரியல. அவர் காலத்துக்கப்புறம், நான் தப்பு வழியில போனா, என்னைக் கண்டிச்சு வழி நடத்த வேற யார் கிடைப்பாங்க என்பதுதான் என் கவலை!" 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 45 
 பெரியாரைத் துணைக்கோடல்  
குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

பொருள்:
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்?
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...