மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"ஆளும் கட்சி செய்யற அட்டூழியங்களைப் பத்தி நாம மக்கள்கிட்ட எவ்வளவோ பிரசாரம் பண்ணிட்டோம். பொதுக்கூட்டங்கள்ள நாம் பேசறதையெல்லாம் மக்கள் ஆர்வமாக் கேக்கறாங்க, கை தட்டறாங்க. ஆனா, தேர்தல்கள்ள அவங்கதான் வெற்றி பெற்றுக்கிட்டே இருக்காங்க. இது எப்படின்னு எனக்குப் புரியல" என்றார் கட்சியின் தலைவர் சிவராஜ்.
"அவங்களுக்கும் நமக்கும் அஞ்சு சதவீதம்தான் ஓட்டு வித்தியாசம். அடுத்த தேர்தலுக்குள்ள, இதை நாம் சரி செஞ்சுடலாம்" என்றார் ஒரு மூத்த உறுப்பினர்.
"அப்படியெல்லாம் நாம குருட்டுத்தனமா நம்பிக்கிட்டு சும்மா இருக்க முடியாது. நம்ம ஆட்சியில இருந்த சின்னக் குறைகளையெல்லாம் பெரிசாக்கி, அவங்க பதவிக்கு வந்தாங்க. ஊடகங்களும் நமக்கு எதிரா பிரசாரம் பண்ணினாங்க. ஆனா, இந்த ஆட்சியில, மக்களுக்கு எதிரா இவ்வளவு அக்கிரமங்கள் நடக்குது. நாட்டில வளர்ச்சியே இல்லை. விலைவாசி ஏறிக்கிட்டே இருக்கு. விவசாயத்தைச் சீரழிச்சுட்டாங்க, தொழில் வளர்ச்சி இல்லை, இருக்கற தொழில்களையும் மூடிக்கிட்டிருக்காங்க. படிச்சவங்க, படிக்காதவங்க யாருக்கும் வேலை இல்லை. ஆனா, ஊடகங்கள் இதையெல்லாம் வெளிப்படுத்தாம, ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டுக்கிட்டிருக்காங்க. அதனாலதான், மக்களுக்கு உண்மையான நிலைமை புரியல. நாம பிரசாரத்தைத் தீவிரப்படுத்தறதைத் தவிர வேற வழி இல்லை" என்றார் இன்னொரு உறுப்பினர்.
"இப்ப சமீபத்தில, 'ஒரே நாடு, ஒரே சீருடை'ங்கற பேரில, கிண்டர்கார்டன்லேயிருந்து கல்லூரி வரை, எல்லா மாணவ மணவர்களுக்கும் ஒரே மாதிரி சீருடைன்னு சட்டம் போட்டிருக்காங்க. பச்சையும், சிவப்பும் கலந்து, ஆளும் கட்சியோட கொடி நிறத்தில சீருடை இருக்கு. இதனால, மாணவர்கள் எல்லாம் கொதிச்சுப் போயிருக்காங்க. சீக்கிரமே, பெரிய போராட்டம் வெடிக்கும்னு நினைக்கிறேன். மாணவர்கள் போராட்டம்தான் பல ஆட்சிகளைக் கவிழ்த்திருக்கு. நாம காத்திருந்து பார்க்கலாம்" என்றார் மற்றொரு உறுப்பினர்
ஆனால், மாணவர்கள் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. சீருடை குறித்து மாணவர்களிடையே அதிருப்தியும், எதிர்ப்பும் இருந்தாலும், அவர்கள் போராட்டம் எதிலும் ஈடுபடவில்லை. ஓரிரு வாரங்களில், முணுமுணுப்புகள் கூட அடங்கி விட்டன.
"என்ன ஐயா இது? தேர்தல் ஆலோசகர்ன்னு சொல்லி இவ்வளவு ஃபீஸ் வாங்கினீங்க. நாமதான் ஜெயிக்கப் போறோம்னு அடிச்சு சொன்னீங்க. இப்ப இப்படி ஆயிடுச்சே! உங்களுக்குக் கொடுத்த பணத்தை வேற விதமா செலவழிச்சிருந்தா, நாங்க ஜெயிச்சிருப்போம் போல இருக்கே!" என்றார், தேர்தலில் தோல்வி அடைந்து பதவியை இழந்திருந்த மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் இந்திரகுமார்.
"சார்! தேர்தலுக்கு அப்புறம் நாங்க ஒரு ஆய்வு நடத்தினோம். பல வாக்காளர்களை அவங்க வீடுகள்ள சந்திச்சு, அவங்க யாருக்கு ஓட்டுப் போட்டாங்க, ஏன் ஓட்டுப் போட்டாங்கன்னு ஒரு சர்வே நடத்தினோம். இதை போஸ்ட் போல் சர்வேன்னு சொல்லுவாங்க. இந்த சர்வேயில, நாங்க மக்களை அவங்க வீட்டுக்குள்ள சந்திச்சுக் கேள்விகள் கேட்கறதால, அவங்க பெரும்பாலும் தைரியமா வெளிப்படையாப் பேசுவாங்க. அதனால, இந்த சர்வே முடிவுகள் பெரும்பாலும் சரியாக இருக்கும்..." என்று தேர்தல் ஆலோசகர் விளக்கிக் கொண்டிருந்தபோதே, அவரை இடைமறித்த இந்திரகுமார், "சர்வேயில என்ன கண்டு பிடிச்சீங்க? அதைச் சொல்லுங்க!" என்றார், பொறுமையில்லாமல்.
"சார்! மூணு வருஷம் முன்னால, நீங்க எல்லா மணவர்களுக்கும் ஒரே சீருடைன்னு உங்க கட்சிக் கொடியோட நிறத்தில சீருடையைத் திணிச்சீங்க."
"வார்த்தையை அளந்து பேசுங்க. சீருடைகள் எங்க கட்சிக் கொடி நிறத்தில இருந்ததுன்னு சொல்றதும் தப்பு, நாங்க அதைத் திணிச்சோம்னு சொல்றதும் தப்பு!" என்றார் இந்திரகுமார், கோபத்துடன்.
"சார் எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப நீங்க அதிகாரத்தில இல்ல. இருக்கறதை இல்லேன்னு எங்கிட்ட சொல்றதால, எந்தப் பயனும் இல்ல. நான் சொல்ல வரதைச் சொல்ல விடுங்க. மாணவர்களுக்கு இது பிடிக்கல. அவங்க ரொம்ப கோபமா இருந்தாங்க, உங்க திணிப்பினால காயப்பட்டும் இருந்தாங்க. ஆனா, வேற வழியில்லாம, அமைதியா இருந்தாங்க. அவங்கள்ள 18 வயது ஆகி ஓட்டுரிமை கிடைச்ச எல்லோரும் மொத்தமா உங்களுக்கு எதிரா ஓட்டுப் போட்டிருக்காங்க. ஓட்டுப் போடற வயதை அடையாத மாணவர்கள் கூட, தங்கள் பெற்றோர்கள்கிட்ட சொல்லி, உங்களுக்கு எதிரா ஓட்டுப் போடச் சொல்லி இருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து, உங்க எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிகமாகி, அதெல்லாம் மொத்தமா எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் போயிடுச்சு. அவங்க ஜெயிச்சுட்டாங்க. அவங்களே இதை எதிர்பார்க்கல. என் அனுபவத்தில..."
"என்ன உங்க அனுபவத்தில?" என்றார் இந்திரகுமார், கோபம் தணியாமல்.
'என் அனுபவத்தில, எல்லா சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும் ரொம்ப வலுவா இருக்கற மாதிரி இருந்தாலும், ஏதோ ஒண்ணு அவங்களைக் கவுத்துடும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஆலோசகர், "என் அனுபவத்தில, இது மாதிரி ஸ்விங் எல்லாம் பலமுறை நடந்திருக்கு" என்றார்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(மக்களுக்கு அச்சமூட்டும் செயல்களைச் செய்யாமை)
குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்..