"நம் அரசருக்கு எவ்வளவு கருணை உள்ளம் பார்த்தாயா? கால்நடைகளை யாராவது சரியாகப் பராமரிக்காவிட்டால், அவர்களைப் பிடித்துக் கடுமையாக தண்டிக்கும்படி உத்தரவு போட்டிருக்கிறார்!"
"மக்களைப் பலவிதங்களிலும் கொடுமைப்படுத்துபவர், கால்நடைகளிடமாவது கருணை காட்டுகிறாரே என்று மகிழ்ச்சி அடையலாம்தான். ஆனால், இதனால் கால்நடைகளுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை, அப்பாவி மக்களுக்கு இன்னல்தான் ஏற்படப் போகிறது!"
"நம் அரசர் என்ன நன்மை செய்தாலும், அவர்மீது குறை கூறுவதையே உன்னைப் போன்ற சில அறிவுஜீவிகள் பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான், அறிவுஜீவிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று மன்னர் அடிக்கடி மக்களை எச்சரிக்கிறார் போலிருக்கிறது!"
"நீ என் நண்பன் என்பதால், உன்னிடம் நான் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து, என்னை அறிவுஜீவி என்று சொல்லாதே! காவலர்கள் யார் காதிலாவது விழுந்தால், என்னைப் பிடித்துக் காராகிருகத்தில் அடைத்து விடுவார்கள்! நம் அரசருக்கு அறிவைப் பயன்படுத்துபவர்களைக் கண்டாலே பிடிக்காது. அதனால்தான், அறிவுஜீவிகள் என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறார். அவர் செய்யும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் உன்னைப் போன்ற விசுவாசக் குடிமக்கள் மட்டும்தான் நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் மன்னர்!"
"நான் கண்ணை மூடிக்கொண்டு மன்னரை ஆதரிக்கிறேன் என்றால், நீ கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறாய்!"
"சரி, சிறிது காலம் கழித்துப் பார்க்கலாம். நீ நினைப்பது சரியா என்று உனக்கே புரியும்."
"என்னப்பா இது! நாட்டில் பாலுக்கு இவ்வளவு பஞ்சம் வந்து விட்டது!"
"கால்நடைகளைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் தண்டனை என்று மன்னர் சட்டம் போட்டபோது, நீ அதைப் பாராட்டினாயே, இப்போது என்ன ஆயிற்று?"
"கால்நடைகள் மீது உள்ள கருணையினால்தான் மன்னர் சட்டம் போட்டார். ஆனால் காவலர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, கால்நடைகள் வைத்திருந்த பலரை, அவர்கள் தங்கள் கால்நடைகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்று சொல்லிச் சிறையில் அடைத்து விட்டனர். அதனால் அவர்கள் வைத்திருந்த கால்நடைகளைப் பராமரிக்க ஆள் இல்லாமல் போய் விட்டது. இன்னும் பலர் காவலர்கள் தங்களைக் கைது செய்து விடுவார்களோ என்று பயந்து, தங்கள் கால்நடைகளை விற்கப் பார்த்தார்கள். ஆனால் வாங்குவதற்கு ஆள் இல்லாததால், அவர்கள் தங்கள் கால்நடைகளை வெளியே விட்டு விட்டார்கள். இப்போது நாட்டில் பல இடங்களில், ஆடுகளும் மாடுகளும் திரிந்து கொண்டும், பயிர்களை மேய்ந்து கொண்டும் இருக்கின்றன. இதனால், ஒருபுறம் பால் கிடைக்காமல் போய், மறுபுறம் பயிர்களைக் கால்நடைகள் மேய்வதால், தானியப் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மன்னர் என்ன செய்வார்?"
"ஆமாம், மன்னர் என்ன செய்வார் பாவம்! அவர் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டு தனக்குப் புதிய அரண்மனை கட்டிக் கொண்டிருக்கிறார்! அது இருக்கட்டும், உன் மகனைக் கலாசாலையில் சேர்க்கப் போவதாகச் சொன்னாயே, என்ன ஆயிற்று?"
"அதை ஏன் கேட்கிறாய்? மன்னரின் ஆட்கள் படித்தவர்களை எல்லாம் அறிவுஜீவிகள் என்று கேலி செய்கிறார்கள். நாட்டில் ஏதாவது குற்றம் நடந்தால், அதை அறிவுஜீவிகள்தான் தூண்டி விடுவதாகச் சொல்லிக் காவலர்கள் அவர்களைச் சிறையில் அடைக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து பயந்து போய், என் மகன் தனக்குப் படிப்பே வேண்டாம் என்கிறான். படித்தால், அறிவுஜீவி என்று சொல்லி, அவனைச் சிறையில் அடைத்து விடுவார்களாம்! நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறான். நீயாவது அவனுக்கு புத்தி சொல்லேன்!"
"உன் மகன் மட்டும் இல்லையப்பா, இன்று நாட்டில் பலரும் படிக்கவே பயப்படுகிறார்கள். கலாசாலைகள் மாணவர்கள் இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன."
"அடப்பாவமே! நாடு இவ்வளவு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! இதை மாற்ற, மன்னர்தான் ஏதாவது செய்ய வேண்டும்,"
"இதற்கெல்லாம் காரணமே மன்னரின் கொடுங்கோல்தான். உன்னைப் போன்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் மன்னருக்குச் சிந்து பாடிக் கொண்டே இருங்கள்!"
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை
குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
No comments:
Post a Comment