"மன்னரே! அரண்மனைக்குள் திருட வந்தவனைப் பிடித்து விட்டார்கள்" என்றார் அமைச்சர்.
"ஆமாம். அதுதான் நீதிபதி அவனுக்கு தண்டனை அளித்து விட்டாரே! இதை என்னிடம் சொல்லவா ஒற்றர்படைத் தலைவருடன் வந்தீர்கள்?" என்று வினவினார் அரசர்.
"அரசே! நீதிபதிக்குக் குற்றத்தின் தீவிரம் தெரியாது. அரண்மனையில் புகுந்து திருடப் பார்த்தான் என்றுதான் அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல், நீதிபதி அவனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறார்."
"அப்புறம் என்ன?"
"மன்னரே! அவன் அரண்மனைக்குள் எப்படி நுழைந்தான் தெரியுமா?"
"தெரியும். அவனுக்கு இரண்டு காவலர்கள் உதவியிருக்கிறார்கள். அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே!"
அமைச்சர் ஒற்றர்படைத் தலைவரைப் பார்த்தார்.
உடனே ஒற்றர்படைத் தலைவர் அரசரைப் பார்த்து, "அரசே! அவன் அரண்மனைக்குள் நுழைந்தது நிலவறை வழியாக" என்றார், தயக்கத்துடன்.
"என்ன, நிலவறை வழியாகவா? அரண்மனையிலிருந்து கோட்டைக்கு வெளியே செல்லும் இந்த நிலவறைப் பாதை இருப்பது அரண்மனையில் இருக்கும் ஒரு சிலருக்குத்தானே தெரியும்? வெளியிலிருந்து ஒருவன் எப்படி அதற்குள் நுழைந்து உள்ளே வந்தான்?" என்றார் அரசர், கோபத்துடன்.
"அரசே! விசாரணையின்போது அவன் கூறியது இதுதான். நிலவறைப் பாதையைப் பயன்படுத்தி, யாரோ கோட்டைக்கு வெளியே வந்திருப்பதை அவன் பார்த்திருக்கிறான். ஒரு ஆர்வத்தில், அந்த இடத்துக்கு வந்து, அந்த நிலவறைக்குள் நுழைந்து அரண்மனைக்கு வந்து விட்டான்."
"அவனால் எப்படி உள்ளே வர முடியும்? அரண்மனைக்குள் நுழையும் இடத்தில் ஒரு கதவு இருக்கிறதே! அது எப்போதுமே பூட்டப்பட்டிருக்கும் அல்லவா?"
"அவன் அரண்மனைக்குள் வரவில்லை, அரசே! அவன் அந்தக் கதவுக்குப் பின்னே சிக்கிக் கொண்டு, உள்ளே வரவும் முடியாமல், இருட்டில் வழியைக் கண்டுபிடித்து வெளியே போகவும் முடியாமல், பயந்து போய்க் கதவை வேகமாகத் தட்டி இருக்கிறான். அந்தச் சத்தத்தைக் கேட்டு, அரண்மனைக்குள்ளிருந்த இரண்டு வீரர்கள் கதவைத் திறந்து கொண்டு போய், அவனைப் பிடித்து விட்டார்கள்!"
"நல்ல வேளை! அப்படியானால், அவனுக்கு உதவி செய்ததாக இரண்டு வீரர்களைப் பிடித்து வைத்திருப்பதாகக் காவல்படைத் தலைவர் அறிவித்திருப்பது?"
"மன்னிக்க வேண்டும், அரசே! நான்தான் அவரை அப்படிச் சொல்லச் சொன்னேன்!" என்றார் அமைச்சர்.
"ஏன் அப்படிச் சொன்னீர்கள்?"
"அரண்மனைக்குள் புக முயன்றான் என்று கூறி ஒருவனைப் பிடித்து விட்ட செய்தி தலைநகர் முழுவதும் பரவி விட்டது. காவலை மீறி அவன் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தான் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுமே! அதைப் போக்கத்தான், அவனுக்கு இரண்டு வீரர்கள் உதவியதாகவும், அவர்களும் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்குமாறு படைத்தலைவரிடம் கூறினேன்."
"நல்லது! இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?"
"அரசே! இந்தக் குற்றத்துக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை போதாது. இந்தக் குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அளிக்க நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. எனவே, நீங்கள் அவன் தண்டனையை அதிகரிக்க வேண்டும்."
"அரண்மனையில் திருடினால் அதிக தண்டனை, சாதாரண மக்களிடம் திருடினால் குறைந்த தண்டனை என்ற விதியை உண்டாக்க நான் விரும்பவில்லை" என்றார் அரசர்.
அமைச்சர் மௌனமாக இருந்தார்.
"சரி ஒன்று செய்யலாம். திருடுவதற்கான தண்டனையையே அதிகப்படுத்தி விடலாம்!" என்றார் அரசர்.
"ஐந்தாண்டுகள் என்பதைப் பத்தாண்டுகள் என்று ஆக்கி விடலாம், அரசே."
"பத்தாண்டுகள் என்று ஆக்கினால் போதாது, அமைச்சரே! ஆயுள் தண்டனை என்று ஆக்கி விடலாம்."
"ஆயுள் தண்டனையா? அது மிக அதிகம் இல்லையா?"
"திருட்டு என்பதை ஒரு கொடிய குற்றம் என்று நாம் ஏன் கருதக் கூடாது? கொடிய குற்றத்துக்குக் கடுமையான தண்டனை என்பது பொருத்தமானதுதானே? இதனால், திருடுவதற்கே பலரும் அஞ்சுவார்கள், அல்லவா? அதனால், நாட்டில் திருட்டுக் குற்றம் குறையும்."
"அப்படியே செய்து விடலாம், அரசே!" என்றார் அமைச்சர், சற்றுத் தயக்கத்துடன்.
"அமைச்சரே! உங்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது. ஆயுள் தண்டனை கொடியதுதான். சிறை தண்டனையே கொடியதுதான். சிறைக்குப் போனால் மீண்டும் வெளியே வர முடியாது, நம் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடும் என்ற பயம் இருந்தால், திருட்டுக் குற்றங்கள் குறையலாம் அல்லவா? சிறையில் இருக்கும்போது, ஒரு கைதிக்குத் தீவிர நோய் ஏற்பட்டாலோ, அல்லது வேறு குடும்பக் காரணங்களுக்காக அவர் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலோ, அவருக்கு நாம் கருணை அடிப்படையில் விடுதலை அளிக்கலாம். அத்தகைய நடைமுறைகள் இப்போதே இருக்கின்றவே! எனவே, தண்டனையைக் கடுமையாக்கி, அதன் மூலம் குற்றங்களைக் குறைப்பதுதான் சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது."
"அப்படியே செய்து விடலாம், அரசே! உங்கள் முடிவுகள் எப்போதுமே அறிவுசார்ந்தும், நியாயமாகவும்தான் இருக்கும். அப்படியானால், அரண்மனைக்குள் புக முயன்றவனுக்கும் ஆயுள் தண்டனை அளித்துத் தாங்கள் அறிவித்து விடுங்கள்."
"இல்லை, அமைச்சரே! சட்டங்கள் அவை இயற்றப்பட்ட நாளிலிருந்துதான் செயல்படுத்தப்பட வேண்டும். நேற்று நடந்த ஒரு குற்றத்தை, இன்று போடப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தண்டிப்பது முறையாக இருக்காது! எனவே, நீதிபதியால் அவனுக்கு அளிக்கப்பட ஐந்தாண்டு தண்டனை அப்படியே இருக்கட்டும்"
"அரசே! இப்போதுதான் சொன்னேன், தங்கள் முடிவுகள் அறிவு சார்ந்து இருப்பதுடன், நியாயமாகவும் இருக்குமென்று. அதை உடனேயே நிரூபித்து விட்டீர்கள்!" என்றார் அமைச்சர், பெருமிதத்துடன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(மக்களுக்கு அச்சமூட்டும் செயல்களைச் செய்யாமை)
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

No comments:
Post a Comment