Tuesday, March 1, 2022

552. கொள்ளையர்கள்!

"நான் அதிபரானால் வரிகளைப் பாதியாகக் குறைப்பேன்!" என்று அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார் நித்திய சத்தியர். 

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அவர் அதிபர் ஆனதும் ஒரு ஆண்டுக்குள் வரி விகிதங்கள் கடுமையாக உயர்ந்தன. 

குறிப்பாக ஏழை மக்களை பாதிக்கும் மறைமுக வரிகளை அவர்  பலமுறை உயர்த்தியதால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. அடித்தட்டு மக்களுக்கு அன்றாட வாழ்க்கையே சவாலாக அமைந்தது. 

வறுமை காரணமாக நிகழும் தற்கொலைகள் அதிகரித்தன. நாட்டின் பல பகுதிகளிலும் வரி உயர்வையும் விலைவாசி உயர்வையும் எதிர்த்துப் போராட்டங்கள் வெடிப்பது ஒரு தினசரி நிகழ்வாக ஆயிற்று. ஆனால் நித்திய சத்தியர் அவற்றைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..

டுத்த நிதிநிலை அறிக்கை பற்றி விவாதிக்க நிதித்துறைச் செயலரை அழைத்திருந்தார் அதிபர் நித்திய சத்தியர்.

சில வரி விகிதங்களை இன்னும் உயர்த்த வேண்டும் என்று அதிபர் கூறியபோது, "சார்! அதிக வரிவிதிப்பையும் விலைவாசி உயர்வையும் எதிர்த்து ஏற்கெனவே மக்கள் போராட்டங்கள் நடத்திக்கிட்டிருக்காங்க. விலைகளை இன்னும் உயர்த்தினால் போராட்டங்கள் இன்னும் அதிகமாகும்!" என்றார் செயல,ர்.

"அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். காவல்படை எதுக்கு இருக்கு? அவங்களுக்கு தடிகள், துப்பாக்கிகள் எல்லாம் எதுக்குக் கொடுத்திருக்கோம்?" என்றார் அதிபர் சிரித்தபடி.

"அதோட, மக்கள் மன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களோட கோபத்தினால பயந்து போயிருக்காங்க. அதனால வரியை உயர்த்தினா மக்கள் மன்ற உறுப்பினர்கள் அதை ஆதரிக்க மாட்டாங்க. மக்கள் மன்றத்தில இதை நிறைவேற்றறது கடினமா இருக்கும்."

"அப்படி மக்கள் மன்றத்தில இது நிறைவேறலேன்னா, என்னோட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிறைவேற்றுவேன். நீங்க நான் சொன்னபடி செய்யுங்க!" என்றார் அதிபர் கடுமையாக.

செயலர் அமைதியாக அங்கிருந்து கிளம்பினார்.

ள்துறைச் செயலருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் அதிபர்.

"நாட்டில சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு?" என்றார் அதிபர்.

"வரி உயர்வை எதிர்த்து நடக்கிற போராட்டங்கள் தினமும் அதிகரிச்சுக்கிட்டிருக்கு" என்று ஆரம்பித்தார் உள்துறைச் செயலர்.

"அதை விடுங்க. அதைப் பத்தி நான் காவலர் படைத் தலைவர் கிட்ட பேசிக்கறேன். மற்ற விஷயங்களைப் பத்திப் பேசுங்க!" என்றார் அதிபர் எரிச்சலுடன்.

"சமீபமா நாட்டில பல இடங்கள்ள வழிப்பறிக் கொள்ளைகள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. சாலையில நடக்கறவங்களையும், கார்ல போறவங்களையும் நிறுத்தி, கத்தியைக் காட்டி பணம், நகைகளைக் கொள்ளை அடிக்கற சம்பவங்கள் நடக்குது. இந்தச் சம்பவங்கள் ஆங்காங்கே திடீர் திடீர்னு நடக்கறதால காவலர் படையால இதையெல்லாம் தடுக்க முடியல. ஆனா கொள்ளையடிக்கறவங்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்துக்கிட்டிருக்கு."

"இந்தச் சம்பவங்கள் எத்தனை நாளா நடந்துக்கிட்டிருக்கு?"

"ரெண்டு மூணு மாசமா..." என்றார் உள்துறைச் செயலர் மென்று விழுங்கியபடி. 

"ஆச்சரியமா இருக்கே! அரசாங்கம் வரி விதிச்சா அதுக்கு எதிராப் போராட்டம் நடத்தற மக்கள் ஏன் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தல?" என்றார் நித்திய சத்தியர்.

"தெரியல!" என்ற உள்துறைச் செயலர். 'ஒருவேளை உங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி நீங்க மக்களைக் கசக்கிப் பிழிஞ்சு வரி வசூலிக்கிறதை விட கத்தியை வச்சு மிரட்டிக் கொள்ளையர்கள் பணம் பறிக்கறது மோசமான விஷயம் இல்லைன்னு மக்கள் நினைக்கறாங்களோ என்னவோ!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை

குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

பொருள்:
ஆட்சிக்கோல் ஏந்தியிருக்கும் அரசன் தன் குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரன் மிரட்டிப் பொருள் பறிப்பதைப் போன்றது.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...