Sunday, March 20, 2022

556. அதிர்ஷ்டசாலி!

"மன்னா! நீண்ட நாட்கள் கழித்து என்னைப் பார்க்க விரும்பி அழைத்திருக்கிறாய். என்ன விஷயம்?" என்றார் ராஜகுரு.

"மன்னிக்க வேண்டும் குருவே! நாட்டில் பல பிரச்னைகள் இருந்ததால் தங்களைச் சந்திக்க என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. தவறாக நினைக்காதீர்கள்" என்றான் மன்னன்.

'பிரச்னைகள் இருக்கும்போது என்னிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று உனக்கு ஏன் தோன்றவில்லை? என் ஆலோசனைகள் உனக்கு உகப்பாக இருக்க மாட்டா என்பதால்தானே?' என்று மனதில் நினைத்துக் கொண்ட ராஜகுரு, "இப்போது என்னைச் சந்திக்க உனக்கு நேரம் கிடைத்திருப்பதால்   நாட்டில் இருந்த பிரச்னைகள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்!" என்றார்.

அடிபட்டவன் போல் ராஜகுருவைப் பார்த்த மன்னன், "குருவே! நாட்டில் இப்போது பிரச்னைகள் அதிகமாகிக் கொண்டிருப்பதைத் தாங்கள் அறியாமல் இருக்க முடியாது. எல்லாமே என் கையை விட்டுப் போவது போல் இருக்கிறது. உண்மையில் தங்கள் ஆலோசனையையும் உதவியையும் பெறத்தான் உங்களை அழைத்தேன்" என்றான்.

"சொல்! நான் என்ன செய்ய வேண்டும்?"

"குருவே! சில ஆண்டுகளாகவே நாட்டில் அதிகக் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதலில் என்னிடம் அன்பு காட்டி வந்த மக்கள் இப்போது என் மீது கோபத்துடனும் வெறுப்புடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. நாட்டில் உணவுப் பற்றாக்குறை போன்ற சில பிரச்னைகள் இருப்பது உண்மைதான். அதற்காக மக்கள் என் மீது கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?"

"மன்னா! என் ஆலோசனையைக் கேட்பதற்காகவே என்னை அழைத்தாய் என்பது உண்மைதானே?"

"உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம்?"

"அப்படியானால் சில உண்மைகளை நான் உன்னிடம் சொல்ல வேண்டும். துவக்கத்தில் மக்கள் உன்னிடம் அன்பு காட்டியதாக நீயே சொன்னாய்"

"ஆமாம்! நான் அதை நேரடியாக அனுபவித்திருக்கிறேன்."

"அது உண்மைதான். நானும் அதைப் பார்த்திருக்கிறேன். உன்னிடம் அன்பு செலுத்திய மக்கள் மனம் மாறி உன் மீது கோபம் கொள்வதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?"

மன்னன் மௌனமாக இருந்தான்.

"மன்னா! உன் உள்ளுணர்வுக்கு அந்தக் காரணம் தெரியும்! ஆனால் அதை ஏற்றுக் கொள்ள உனக்குத் தயக்கமாக இருக்கிறது. நான் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேன். ஆரம்பத்தில் நீ மக்களிடம் நிறைய அக்கறை காட்டி செங்கோல் தவறாமல் ஆண்டு வந்தாய். அதனால்தான் மக்களும் உன்னிடம் அன்பு காட்டினார்கள். ஆனால் நாட்டில் உணவுப் பிரச்னை ஏற்பட்டபோது, மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக நீ அவர்கள் மீது அதிக வரிகளை விதித்தாய். அவர்கள் எதிர்ப்புக் காட்டியபோது அவர்களைப் போர் வீரர்களைக் கொண்டு அடக்கினாய். பலரைச் சிறையில் தள்ளினாய். இவையெல்லாம் சிலரின் தவறான ஆலோசனையேக் கேட்டு நீ செய்தவை. நான் இவற்றை ஆதரிக்க மாட்டேன் என்பதை நீ அறிந்ததால்தான் என்னைச் சந்திப்பதையே தவிர்த்து வந்தாய் என்பதை நான் அறிவேன்! மக்கள் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியதும் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விட்டதை உணர்ந்து என்னை அழைத்திருக்கிறாய். சரிதானா?" என்றார் ராஜகுரு அரசனின் கண்களை நேரே பார்த்து.

அவர் கண்களைச் சந்திக்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்ட மன்னன், "நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் என் அதிகாரத்தை மக்கள் மதிக்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்றான்.

"மன்னா! மக்கள் உன் கையில் இருக்கும் செங்கோலைத்தான் மதிப்பார்கள். அந்தச் செங்கோல் வழுவாதபோது அவர்கள் உன்னை நேசிப்பார்கள். அந்தச் செங்கோல் வழுவி விட்டால் மன்னன் என்ற மதிப்பே உனக்கு இருக்காது. ஆயினும் நீ அதிர்ஷ்டசாலிதான்!"

"அதிர்ஷ்டசாலியா? எப்படிச் சொல்கிறீர்கள்?" என்றான் மன்னன் வியப்புடன்.

"ஏனென்றால் மக்கள் உன்மிது அதிருப்தியாக இருக்கும்போதும் நீ மன்னனாகத் தொடர்கிறாய்! சில நாடுகளில் ஜனநாயகம் என்று ஒரு புதிய அரசு முறை வந்திருக்கிறதாம். அதில் தங்களுக்கு மன்னராக இருப்பது யார் என்பதை மக்களே வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கிறார்களாம். அதிக மக்களின் வாக்கைப் பெற்றவர் ஐந்தாண்டுகளுக்கு மன்னராக இருப்பாராம். அவர் ஆட்சி சரியாக இல்லை என்றால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அடுத்த வாக்கெடுப்பில் மக்கள் அவரைத் தூக்கி எறிந்து விட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுப்பார்களாம். இங்கே அது போன்ற நிலை இல்லையே! அதனால்தான் உன்னை அதிர்ஷ்டசாலி என்று சொன்னேன்!" என்றார் ராஜகுரு சிரித்தபடி.

அரசன் வியப்புடனும் சற்றே பதட்டத்துடனும் ராஜகுருவைப் பார்த்தான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை

குறள் 556:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

பொருள்:
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அத்தகைய செங்கோல் ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது..
அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...