"எப்படி சார் இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்தாங்க? என்னோட இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையில, என் மேல ஒரு ஊழல் புகார் கூட இருந்ததில்லையே! நான் முதல்வரா இருந்தப்ப, என் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்தப்ப, அவங்க மேல நடவடிக்கை எடுத்திருக்கேன். என் மேல சொத்துக் குவிப்பு வழக்கு போட்டு, நான் குற்றவாளின்னு தீர்ப்பளிச்சு, எனக்கு சிறை தண்டனை விதிச்சு,பத்து கோடி ருபா அபராதம் போட்டிருக்காங்க. எங்கிட்ட அந்த அளவுக்கு சொத்து கூட இல்லையே சார்!" என்று பொருமினார் முன்னாள் முதல்வர் மணிமாறன்.
"உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு பண்ணி, ஜாமீன் மனுவும் போட்டிருக்கோம். ஒரு வாரத்தில உங்களுக்கு ஜாமீன் கிடைச்சுடும். உச்ச நீதிமன்றத்தில, உங்க மேல்முறையீட்டை சீக்கிரம் விசாரிக்கணும்னு கோரிக்கை வச்சிருக்கோம்!" என்றார், சிறையில் அவரைப் பார்க்க வந்த அவருடைய வக்கீல்.
"ஜாமீன் இருக்கட்டும் சார்! இது அடிப்படையிலேயே ஒரு தப்பான தீர்ப்பு இல்லையா? ஆரம்பத்தில, இந்த வழக்கை நான் சீரியஸா எடுத்துக்கல. நான்தான் தப்புப் பண்ணலியேன்னு தைரியமா இருந்தேன். ஆனா, என் அரசியல் எதிரிகள், என் தம்பி சொத்தையும் என் பினாமி சொத்துன்னு சொல்லி வழக்குப் போட்டாங்க. கீழ் நீதிமன்றத்தில அதை ஏத்துக்கிட்டு, என் தம்பியோட சொத்துக்களை என் சொத்துக்களோட சேர்த்து, நான் குற்றவாளின்னு சொல்லித் தீர்ப்பு வந்தப்ப கூட, உயர் நீதிமன்றத்தில எனக்கு நியாயம் கிடைக்கும்னு நினைச்சேன்!"
"சார்! இதைப் பத்தியெல்லாம் நாம் விவரமாப் பேசி இருக்கோம். உங்க தம்பி கல்யாணம் செஞ்சுக்காம, உங்க வீட்டில உங்களோடயே இருந்திருக்காரு. அவர் செஞ்ச ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல அவருக்கு நிறைய லாபம் வந்திருக்கு. அவர் அதுக்கெல்லாம் சரியா கணக்கு வச்சுக்கல. வருமான வரி குறைச்சுக் கட்டணுங்கறதுக்காக, வருமானத்தையும் கொஞ்சமாக் காட்டி இருக்காரு. அவருக்கு வாரிசு இல்லாததால, அவர் தன் சொத்தையெல்லாம் உங்க பையன்களுக்கு உயில் எழுதி வச்சுட்டு, இறந்தும் போயிட்டாரு. நீங்க தேர்தல்ல தோத்தப்பறம், பதவிக்கு வந்த உங்க அரசியல் எதிரிகள் இதையெல்லாம் ரொம்ப புத்திசாலித்தனமாப் பயன்படுத்தி, உங்களைச் சிக்க வைக்கற மாதிரி வலுவான ஆதரங்களோட வழக்குப் போட்டுட்டாங்க" என்றார் வக்கீல்.
"அப்படி இருக்கறப்ப, உச்ச நீதிமன்றத்தில எனக்கு சாதகமாத் தீர்ப்பு கிடைக்கும்னு எப்படிச் சொல்றீங்க?" என்று சீறினார் மணிமாறன்.
'நான் எப்ப அப்படிச் சொன்னேன்?' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட வக்கீல், "நாம முயற்சி பண்ணலாம். உச்ச நீதிமன்றத்தில வாதாடற சில பெரிய வக்கீல்கள் தங்கள் வாதத் திறமையால சில வழக்குகள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை உடைச்சிருக்காங்களே!" என்றார், சமாளிக்கும் விதத்தில்.
"எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்க அப்பீலுக்கு ஏற்பாடு பண்ணுங்க. ஜாமீனுக்கும் சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க."
அடுத்த நாள், மணிமாறனின் மனைவி குமரி அவரைப் பார்க்கச் சிறைக்கு வந்தாள்.
"குமரி! உனக்கே தெரியும். நான் யார்கிட்டேயும் லஞ்சம் வாங்கல. எனக்கு ஏன் இப்படி நடக்கணும்?" என்றார் மணிமாறன்.
அவர் சற்றும் எதிர்பாராமல், அவர் மனைவி கோபமாகச் சீறினாள்: "ஏனா? நீங்க முதல்வரா இருந்தப்ப, கொஞ்சம் அக்கிரமமா பண்ணினீங்க? நீங்க லஞ்சம் வாங்காம இருந்திருக்கலாம். ஆனா, நீங்க பண்ணின அடக்குமுறையும், சர்வாதிகாரமும் கொஞ்சமா என்ன? நானே உங்ககிட்ட எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன், இப்படியெல்லாம் நடந்துக்காதீங்கன்னு!"
"என்ன உளறர குமரி? ஆட்சி செய்யும்போது, அதிகாரத்தைப் பயன்படுத்தத்தான் வேணும். என்னைப் பிடிக்காதவங்க என்னை சர்வாதிகாரி, கொடுங்கோலன் எல்லாம் சொன்னாங்க. நான் செய்ய நினைச்சதைத் தடுக்க முயற்சி செஞ்சவங்ககிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன். அது ஒரு தப்பா?"
"தப்பு இல்ல, அக்கிரமம்! எத்தனை பேரை சிறையில தள்ளினீங்க! எத்தனை பேர் மேல தடியடி நடத்தினீங்க! ஏன் துப்பாக்கிச் சூடு கூட நடத்தினீங்களே!"
"கலவரம் பண்றவங்ககிட்ட கடுமையா நடந்துக்கத்தான் வேணும்!"
"என்ன பேசறீங்க? உங்க கையில அதிகாரம் இருந்ததுங்கறதுக்காக, சட்டத்தைக் கையில எடுத்துக்கிட்டீங்க. அந்த ரசாயனத் தொழிற்சாலையோட புகையினால அந்தச் சுற்று வட்டாரமே பாதிக்கப்படுது, குழந்தைகளுக்கு நோய்கள் வருதுன்னு சொல்லிப் போராட்டம் நடத்தினவங்க மேல துப்பாக்கிச் சூடு நடத்தி பதினைஞ்சு பேரைக் கொன்னீங்க. அங்கே டீ வித்துக்கிட்டிருந்த ஒரு பையனையும் சுட்டுட்டாங்க. அவனோட அம்மா கதறினதை டிவியில பாத்தப்ப, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? 'என் பையனை சுட்டுக் கொன்னவங்களுக்குக் கடவுள் தண்டனை கொடுப்பாரு'ன்னு அந்த அம்மா சாபம் போட்டபோதே, நமக்கு இப்படி ஏதாவது நடக்கும்னு நான் பயந்தேன். இப்ப நம்ம சொத்தெல்லாம் போய், நீங்களும் ஜெயிலுக்குப் போகப் போறீங்க. நானும் நம்ம ரெண்டு பையன்களும் நடுத்தெருவுக்குத்தான் வரப் போறோம்!" என்றாள் குமரி, துக்கமும், ஆத்திரமும் சேர.
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை
குறள் 555:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
No comments:
Post a Comment