வாடகைக்கார் விமான நிலையத்திலிருந்து கிளம்பி வெளியே வந்து வெளிப்புறச் சாலையில் ஓடத் தொடங்கிய பிறகுதான், விவேக் கார் ஓட்டுநரிடம் கேட்டான்.
"வண்டியைக் கிளப்பறத்துக்கு முன்னே ஒரு படத்தைத் தொட்டுக் கண்ணில ஒத்திக்கிட்டீங்களே, அது காந்தியோட படமா?"
"ஆமாம்" என்ற காரோட்டி செந்தில், சற்றுத் தயங்கி விட்டு, "நீங்க பார்த்தீங்களா?" என்றான்.
"ஆமாம். நீங்க என்னவோ யாரும் பாத்துடக் கூடாதுன்னு, ரகசியமா கும்பிட்ட மாதிரி தெரிஞ்சுது!" என்றான் விவேக், சிரித்தபடி.
"ஆமாம் சார். சில பேர் பாத்துட்டு என்னைக் கேலி செஞ்சிருக்காங்க. அதனாலதான், கூடிய வரையில யாரும் பாக்காத மாதிரி கும்பிடுவேன்."
"நான் அதைக் கேலியா நினைக்க மாட்டேன். நீங்க காந்தியை ஏன் கடவுளா நினைச்சுக் கும்பிடறீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா இந்த நாட்டைக் காப்பாத்த, காந்தி மாதிரி ஒத்தர் மறுபடியும் வரணும்னு நினைக்கறவன் நான்."
செந்தில் ஒரு கணம் வியப்புடன் பின்புறம் திரும்பிப் பயணியைப் பாத்தான்.
"இந்த நாட்டைக் காப்பாத்துங்கன்னு வேண்டிக்கிட்டுத்தான் நான் காந்தியைக் கும்படறேன். ஆனா, உங்களை மாதிரி வசதியானவங்க இப்படி நினைக்கிறது ஆச்சரியமா இருக்கு சார்!" என்றான், தொடர்ந்து.
"ஏழைகள் ஓட்டுப் போட்டாதான் யாருமே ஆட்சிக்கு வர முடியும். இப்ப ஆட்சியில இருக்கறவங்க, ஏழைகள் ஓட்டுப் போட்டதாலதான் பதவிக்கு வந்திருக்காங்க. ஆனா, என்னை மாதிரி ஒரு தொழிலதிபர் இந்த அரசாங்கத்தைக் குறை சொன்னா, எங்களைப் பாத்து, 'நீங்க வசதியானவங்க, மேட்டுக்குடி, உங்களுக்கு என்ன கஷ்டம்?'னு உங்களை மாதிரி சில பேர் கேக்கறீங்க!"
"சார்! தப்பா நினைக்காதீங்க. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா, இந்த அரசாங்கத்தோட நடவடிக்கைகளால, ஏழைகள் அதிகம் பாதிக்கப்படறாங்கங்கறது உண்மைதானே? எல்லா விலைகளையும் ஏத்திட்டாங்க. தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிச்சுட்டாங்க. அரசாங்கத்தைக் குறை சொல்ற பத்திரிகைக்காரங்களைக் கைது பண்ணி, மாசக்கணக்கா சிறையில வைக்கறாங்க. அதனால, ஏழைகளுக்காகப் பேச ஆளே இல்லாம போயிடுச்சு. தேர்தல்ல எப்படியோ ஏழைகளோட ஓட்டை வாங்கி ஜெயிச்சுடறாங்க. அதுக்காக, ஏழைகள் சந்தோஷமா இருக்கறதா அர்த்தம் இல்லையே!" என்றான் செந்தில்.
"உண்மைதான். ஆனா, என்னை மாதிரி தொழிலதிபர்கள், வியாபாரிகள், சின்ன அளவில சொந்தத் தொழில் பண்றவங்க எல்லாம் படற கஷ்டம் பலருக்குத் தெரியாது. பெரிய தொழிலதிபர்கள் ரெண்டு மூணு பேரைத் தவிர, எல்லாருக்கும் இதே நிலைமைதான். இந்த அரசாங்கத்தோட பொருளாதாரக் கொள்கைகள், வரிவிதிப்பு எல்லாமே இந்த ரெண்டு மூணு பெரிய தொழிலதிபர்களுக்குச் சாதகமாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ள, நாங்கள்ளாம் எங்க தொழில்களை மூடிட்டு, இந்த ரெண்டு மூணு பேருக்கு சப் கான்ட்ராக்டரா ஆகிற நிலைமை வந்துடும் போலருக்கு. ஏற்கெனவே பல பேர், தங்க தொழில்களை மூடிட்டு, தொழிலுக்காக வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாம, நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க. இதைப் பத்தி யாரும் எழுதவோ, பேசவோ மாட்டாங்க. தொழிலாளர்களா இருந்தா, போராட்டமாவது பண்ணலாம். எங்களால அதுவும் பண்ண முடியாது!"
"சாரி சார்! இந்த ஆட்சியில, ஏழைகள் மட்டும்தான் கஷ்டப்படறாங்கன்னு நினைச்சேன். வசதியா இருக்கறதா நான் நினைச்சுக்கிட்டிருக்கறவங்க, இன்னும் அதிகமாவே கஷ்டப்படற மாதிரி இருக்கு!" என்றான் செந்தில்.
"சாரி! நீங்க காந்தி படத்தைத் தொட்டுக் கும்பிட்டதும், ஏதோ சட்னு ஒரு உணர்ச்சி வேகத்தில உங்ககிட்ட இதையெல்லாம் சொன்னேன். பொதுவா என் நண்பர்களைத் தவிர, வேற யார்கிட்டேயும் நான் இதைப்பத்தியெல்லாம் பேசறதில்ல!" என்றான் விவேக்.
அதற்குப் பிறகு, இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
இறங்குமிடம் வந்தது. கார் வாடகை 550 ரூபாய் என்று விவேக்கின் கைபேசி காட்டியது. விவேக் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை செந்திலிடம் கொடுத்தான்.
"அம்பது ரூபாய் இல்லையா சார்?" என்றான் விவேக், பணத்தை வாங்காமல்
"இல்லையே!" என்றான் விவேக்.
"பரவாயில்லை சார்! ஐநூறு ரூபாய் கொடுங்க போதும்!" என்று ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை மட்டும் வாங்கிக் கொண்டான் செந்தில்.
"அம்பது ரூபய் குறைவா இருக்கே! உங்களுக்கு நஷ்டம் ஆகாதா?"
"பரவாயில்லை சார்!" என்றான் செந்தில்.
'என்னை விட நீங்கள் அதிகம் கஷ்டப்படறவர் போலருக்கே! பரவாயில்லை. கீப் தி சேஞ்ஜ்' என்று செந்தில் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருப்பானோ என்று விவேக் யோசித்தான்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை
குறள் 558:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
No comments:
Post a Comment