அமைச்சர் மௌனமாகத் தலையாட்டினார், தான் சொல்ல வேண்டியதை அரசரிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்தபடியே.
"அரசே! அதற்குப் பிறகு, நாம் படைகளை அனுப்பி சீவக நாடு பிடித்துக் கொண்ட பகுதிகளை மீட்க முயற்சி செய்தபோது, அந்தப் பகுதி மக்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையே!" என்றார் அமைச்சர்.
"அதுதான் எனக்கும் வியப்பாக இருக்கிறது! இதற்கு என்ன காரணம்? சீவக நாட்டு மன்னனிடம் அவர்களுக்கு அவ்வளவு பயமா, அல்லது தங்கள் சொந்த நாட்டின் மீது அவர்களுக்குப் பற்று இல்லாமல் போய் விட்டதா?"
"அரசே! அதை விவாதிக்க வேண்டிய தருணம் இதுவல்ல. இப்போது, நம் நாட்டின் மையப் பகுதியிலேயே பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்."
"இதில் யோசிக்க என்ன இருக்கிறது. பிரச்னை செய்பவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தால், மற்றவர்கள் தானே அடங்கி விடுவார்கள்!" என்றான் அரசன் கோபத்துடன்.
"மன்னிக்க வேண்டும், அரசே! அவர்கள் நம் மக்கள். குழந்தை அழுதால், அது ஏன் அழுகிறது என்று கண்டறிந்து, அதற்கு வேண்டியதைச் செய்வதுதானே ஒரு தாயின் கடமை?"
"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அடிக்கடி அங்கே வெள்ளம் வருவதால், அதை நாம் தடுக்க வேண்டும் என்கிறார்கள்! மழையை நாம் நிறுத்த முடியுமா? வெள்ளம் வரும்போது மக்கள் வேறு ஊர்களுக்குச் சென்று தங்கி விட்டு, வெள்ளம் வடிந்ததும் திரும்பி வர வேண்டியதுதான். இயற்கை விளைவிக்கும் பிரச்னைகளை அரசரால் எப்படித் தீர்க்க முடியும்?"
"சில முயற்சிகள் செய்யலாம், அரசே! வெள்ளம் வரும் பகுதிகளில் புதிதாகக் கால்வாய்கள் வெட்டி, வெள்ள நீரின் ஒரு பகுதியை வேறு இடங்களுக்குத் திருப்பி விடலாம். இதை முழுமையாகச் செய்யப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆயினும், நாம் சிறிய அளவில் பணிகளை ஆரம்பித்தால் கூட, மக்களுக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கிடைக்கும். முக்கியமாக, அவர்கள் பிரச்னையை நாம் புரிந்து கொண்டு, அதற்குத் தீர்வு காண முயற்சி எடுக்கிறோம் என்பதே அவர்களை அமைதிப்படுத்தும்."
அரசர்யோசிப்பது போல் மௌனமாக இருந்தார்.
"அரசே! நம் தெற்கு எல்லையில் பிரச்னை ஏற்பட்டபோதே, நாம் அங்கே சில அதிகாரிகளை அனுப்பி அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றைத் தீர்க்க நாம் முயற்சி எடுப்போம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று நான் ஆலோசனை கூறியது தங்களுக்கு நினைவிருக்கும். ஆனால், அதை ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக நாம் அணுகியதால், அந்த மக்கள் நம்மிடம் நம்பிக்கை இழந்து விட்டனர். நம் எதிரிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டனர்."
"நீங்கள் சொல்வது சரிதான் அமைச்சரே! மக்களின் குறைகளைப் புரிந்து கொண்டு செயல்படாததால்தான், நம் நாட்டின் ஒரு பகுதியை நாம் இழந்து விட்டோம். அந்தப் பகுதியை இழந்ததை விட, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் நம்பிக்கையை இழந்ததைத்தான் நான் பெரிய இழப்பாகக் கருதுகிறேன். இனி, நம் மக்களில் ஒருவர் நம்பிக்கையைக் கூட நான் இழக்க விரும்பவில்லை. மையப்பகுதி மக்களின் பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். அதிகாரிகளை அங்கே அனுப்பி, அந்த மக்களிடம் பேசி, அவர்களுக்கு உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கச் சொல்லுங்கள்!" என்றான் அரசன்.
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை
குறள் 553:
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
No comments:
Post a Comment