"மூணு வருஷமா மழை இல்லை. இதுவரையிலேயும் இப்படி நடந்ததே இல்லை."
"கடுமையான தண்ணிர்ப் பஞ்சம். ஆனா, அரசாங்கம் மக்களுக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கல. சில தொழிலதிபர்கள் லாபம் சம்பாதிக்கணுங்கறதுக்காக, காடுகளை அழிக்க அரசாங்கம் அவங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கு. அவங்க காடுகளை அழிக்கறதால, மழை பெய்யறது இன்னும் குறைஞ்சுடும்னு சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள் சொல்றாங்க. காடுகளில் வசிக்கிற பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு, இருக்க இடம் இல்லாம தவிக்கிறாங்க. இவ்வளவு மோசமான அரசாங்கத்தை நான் இதுவரையிலேயும் பார்த்ததில்ல."
"இப்படி ஒரு மோசமான ஆட்சி நடந்துக்கிட்டிருக்கறதாலதான் மூணு வருஷமா நாட்டில மழையே பெய்யல."
"உளறாதே! மழை பெய்யறதுக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? அரசன் நல்லா ஆண்டா மழை பெய்யும், அரசன் முறை தவறினால் மழை பெய்யாதுங்கறதெல்லாம் அரசர்கள் பயத்தினாலேயாவது ஓரளவுக்கு முறையான ஆட்சியைக் கொடுக்கணுங்கறதுக்காக அந்தக் காலத்தில சொல்லி வச்சது. வேப்ப மரத்தடியிலே பேய் இருக்குங்கற மாதிரி, இது ஒரு மூட நம்பிக்கை. மழை பெய்யாததுக்கு விஞ்ஞானரீதியான காரணங்கள் இருக்கும். அரசாங்கம் மோசமா இருக்கறதுக்கும், மழை பெய்யாததுக்கும் சம்பந்தம் இல்ல."
"எவ்வளவு ஆதாரங்கள் கொடுத்தாலும், உன்னை மாதிரி ஆளுங்கள்ளெல்லாம் ஒத்துக்க மாட்டீங்க! நீ வேணும்னா பாரு. கொஞ்ச நாள்ள தேர்தல் வரப் போகுது. எப்படியும் இந்த ஆட்சி போய், வேற ஆட்சி வரப் போகுது. அப்ப நிச்சயமா மழை பெய்யும். அப்பவாவது, நீ இதை ஒத்துக்கறியான்னு பாக்கறேன்!"
"பாத்தியா? நான் சொன்னப்ப நீ ஒத்துக்கல. இந்த ஆட்சி வந்ததும், முந்தைய ஆட்சியில நடந்த தப்பான விஷயங்களையெல்லாம் சரி செஞ்சுக்கிட்டிருக்காங்க. இவங்க நல்ல ஆட்சி கொடுக்க ஆரம்பிச்சதுமே, மழை வந்துடுச்சு பாரு. அதுவும் இது கோடைக்காலம். மழை பெய்யற சீசனே இல்ல. எப்படி மழை கொட்டுது பாரு!"
"அட போடா! ரெண்டு மூணு வருஷமா மழை பெய்யலேன்னா, அதுக்கப்பறம் நல்ல மழை பெய்யறதுதான் இயல்பு. இதை 'லா ஆஃப் ஆவரேஜஸ்'னு சொல்லுவாங்க. ஆட்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. இவங்க தொடர்ந்து நல்ல ஆட்சி கொடுத்தா, அப்ப கூட சில வருஷங்கள்ள மழை பெய்யாம போகலாம். இல்லை, இவங்க ஆட்சியும் மோசமாப் போச்சுன்னா, அப்ப நல்ல மழை பேஞ்சா, இவங்க ஆட்சி நல்ல ஆட்சின்னு சொல்லுவமா? சம்பந்தமில்லாத விஷயங்களை முடிச்சுப் போடறது முட்டாள்தனம், மூடநம்பிக்கை!"
"போடா! நீ எதையுமே ஒத்துக்க மாட்டே! நீ சொல்ற சராசரி விதி மாதிரி, இயற்கை விதின்னு ஒண்ணு இருக்கு. இதெல்லாம் உனக்குப் புரியப் போறதில்ல. உங்கிட்ட போய்ப் பேசிக்கிட்டிருக்கேன் பாரு, என்னைச் சொல்லணும்!"
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை
குறள் 559:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
No comments:
Post a Comment