Monday, April 3, 2023

752. உமாவின் அண்ணன்கள்

"உன் பெரிய அண்ணனோட அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நல்லா நடந்தது இல்ல?" என்றான் சோமு, தன் மனைவி உமாவிடம்.

"என்னத்த நடந்தது? வந்திருந்தவங்களை சரியா வரவேற்று உபசரிக்கல. சாப்பாடு சுமார்தான். இருக்கறது ஒரே தங்கச்சி. எனக்கு ஒரு நல்ல புடவையா வாங்கி இருக்கக் கூடாது?" என்றாள் உமா.

"உன் அண்ணன் மணமேடையில உக்காந்திருந்தாரு. அப்படியும், அப்பப்ப எழுந்து வந்து, வந்தவங்களைப் பார்த்து வரவேற்பு சொல்லி விசாரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. எனக்கென்னவோ சாப்பாடு நல்லா இருந்த மாதிரிதான் இருந்தது. புடவையைப் பத்தி எனக்குத் தெரியாது!" என்றான் சோமு.

"என் சின்ன அண்ணன் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்காம். அடுத்த மாசம் கல்யாணம்!" என்றாள் உமா, பேச்சை மாற்றி.

"அப்படியா? எனக்குத் தெரியாதே! எப்ப நிச்சயமாச்சு? நம்மகிட்டல்லாம் ஒரு வார்த்தை கூடச் சொல்லல!" என்றான் சோமு.

"திடீர்னு நிச்சமாயிருக்கும் போல இருக்கு. அதான் கல்யாணத் தேதியைக் கூட சீக்கிரமா வச்சிருக்காங்க. பெரிய அண்ணனோட அறுபதாம் கல்யாணத்தும்போதுதான், சின்ன அண்ணன் எங்கிட்ட இதைச் சொன்னாரு!"

"எங்க சின்ன அண்ணனோட பொண்ணு கல்யாணம் எவ்வளவு சிறப்பா நடந்துது பாத்தீங்களா?" என்றாள் உமா, தன் கணவனிடம், பெருமையுடன்.

"கல்யாணம் நல்ல ஆடம்பரமாத்தான் நடந்தது. ஆனா, கல்யாணத்துக்கு வந்தவங்களை வாங்கன்னு கூட யாரும் கூப்பிடல. உங்க அண்ணனும், அண்ணியும் மணமேடையை விட்டு இறங்கவே இல்லை!" என்றான் சோமு.

"பெண்ணோட கல்யாணம்னா, அவங்க மணமேடையில இருக்க வேண்டாமா? உங்களுக்கு ஏதாவது குற்றம் சொல்லணும்!"

"ஆமாம். சாப்பாடு எப்படி இருந்தது?"

"பரவாயில்லை."

"சாப்பாடு நல்லா இல்லேன்னு நிறைய பேர் பேசிக்கிட்டதை நான் கேட்டேன்!"

"கல்யாணத்தில நிறைய பேருக்கு சமைக்கறப்ப, எல்லாமே பிரமாதமா இருக்கும்னு சொல்ல முடியாது!"

"நல்லாதான் சப்பைக் கட்டு கட்டற! அது சரி. உனக்குப் புடவை எதுவும் வாங்கிக் கொடுக்கலியா உங்க அண்ணன்?"

"கல்யாணத் தேதியை சீக்கிரமே வச்சுட்டதால, எல்லாருக்கும் புடவை வாங்க நேரம் இல்லையாம். அதனால, அண்ணன் புடவைக்கு பதிலா ஐநூறு ரூபாய் பணம் கொடுத்துட்டாரு!"

"உன் பெரிய அண்ணன் அவரோட அறுபதாம் கல்யாணத்துக்காக உனக்கு வாங்கிக் கொடுத்த புடவையோட விலை ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல இருக்கும் இல்ல?" என்றான் சோமு.

உமா மௌனமாக இருந்தாள்.

"உன் பெரிய அண்ணன் தன் அறுபதாம் கல்யாணத்தில உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கறதிலேந்து, வந்தவங்களை உபசாரம் செய்யறது, சாப்பாடு நல்லா இருக்கும்படி பாத்துக்கறதுன்னு எல்லாத்தையும் கவனமா பாத்துத் பாத்து செஞ்சாரு. ஆனா, நீ அவர் மேல ஆயிரம் குத்தம் சொன்ன. உன் சின்ன அண்ணன் தன் பொண்ணு கல்யாணத்தில நம்மை மதிச்சு நடந்துக்கல, ஒரே தங்கையான உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கல, கல்யாணச் சாப்பாடு நல்லா இருக்கணுங்கறதில கூட அக்கறை எடுத்துக்கல. ஆனா, நீ அவரைப் புகழற! நான் சுட்டிக் காட்டின  குறைகளையெல்லாம் இல்லைன்னு சாதிக்கற. இதுக்கு ஒரே காரணம்தான்!" என்றான் சோமு.

"என்ன காரணம்?" என்றாள் உமா.

"உன் பெரிய அண்ணன் அவ்வளவு வசதியானவர் இல்ல. ஆனா, உன் சின்ன அண்ணன் பணக்காரர்!"

"அப்படியெல்லாம் இல்லை..."

"அப்படித்தான். ஆனா, இது உன்னோட தப்பு இல்ல. ஒத்தன் பணக்காரனா இருந்தா,அவனைத் தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடறதும், ஒத்தன் ஏழையா இருந்தா, அவனை ஏளனமாப் பேசறதும்தானே இந்த உலகத்தோட இயல்பாகவே இருக்கு!" என்றான் சோமு.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை (பொருள் ஈட்டல்)

குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

பொருள்: 
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும், இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 

Sunday, April 2, 2023

751. கல்விக் கொடை வள்ளல்!

"இந்தப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்தப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் துளிசிராமன் அவர்களுக்கு என் நன்றி!" என்று கூறித் தன் பேச்சை முடித்துக் கொண்டார் டாக்டர்  துருவ் மல்லிக்.

விழா முடிந்து துருவ் மல்லிக் ஓட்டல் அறைக்குத் திரும்பியபோது, ஓட்டலில் அவருக்காகக் காத்திருந்தார் அவருடைய நண்பர் பேராசிரியர் பட்டாபிராமன்.

"வாங்க, பட்டாபி! ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கீங்களா?" என்றார் துருவ் மல்லிக்.

இருவரும் அறைக்குள் நுழைந்து அமர்ந்து சற்று நேரம் பொதுவாகப் பேசியபின், "பட்டமளிப்பு விழா எப்படி இருந்தது?" என்றார் பட்டாபிராமன்.

"விழா நல்லாத்தான் இருந்தது. ஆனா..."

"சொல்லுங்க!"

"அந்தப் பல்கலைக் கழகம் புகழ் பெற்றதுன்னு நினைச்சுத்தான் பட்டமளிப்பு விழாவுக்கு வர ஒத்துக்கிட்டேன். ஆனா, அங்கே இருந்த மனுஷங்களையும், சூழ்நிலைகளையும் பார்த்தப்ப, எனக்கு அந்தப் பல்கலைக் கழகத்தைப் பத்தி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் ஏற்படல!" என்றார் துருவ் மல்லிக்.

"புகழ் பெற்றதுன்னா, அதோட பேர் எல்லாருக்கும் தெரியும்னு அர்த்தம், தரமானதுன்னு அர்த்தம் இல்லை!" என்றார் பட்டாபிராமன், சிரித்தபடி.

"பின்னே எப்படி இந்தியா முழுக்க அவங்க பேர் தெரிஞ்சிருக்கு?" 

"பட்டமளிப்பு விழாவுக்கு ஏன் சண்டிகர்லேந்து உங்களைக் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரியுமா?"

"தெரியல. நான் கூட யோசிச்சேன். எதுக்கு அவ்வளவு தூரத்திலேந்து என்னைக் கூப்பிட்டிருக்காங்கன்னு."

"பப்ளிசிடிக்காகத்தான். உங்களைக் கூப்பிட்டதால, நீங்க வேலை செய்யற பல்கலைக் கழகம், உங்க நண்பர்கள் இது மாதிரி பல பேருக்கு இந்தப் பல்கலைக் கழகத்தைப் பத்தித் தெரிய வருமே!"

"ஒ! நான் அப்படி யோசிக்கல. ஆமாம், அந்த யூனிவர்சிடியோட சான்சலர் டாக்டர் துளசிராமனோட பின்னணி என்ன?"

"டாக்டர் துளசிராமனா? பதினைஞ்சு வருஷம் முன்னால அவர் ஒரு கல்லூரியை ஆரம்பிச்சப்ப, அவரோட கல்வித் தகுதி என்னன்னே யாருக்கும் தெரியாது. பள்ளி இறுதித் தேர்வைக் கூட முடிக்காதவர்னுதான் பலரும் சொன்னாங்க. அப்புறம் பாத்தா, சில வருஷங்கள்ள தன் பேருக்குப் பின்னால  பி.ஏ-ன்னு போட்டுக்கிட்டாரு. கரெஸ்பாண்டன்ஸில படிச்சார்னு சொன்னாங்க. பரீட்சை கூட அவருக்கு பதிலா வேற யாரோ எழுதினதாத்தான் சொன்னாங்க.."

"அது எப்படி சார்?"

"அதெல்லாம் அடையாள அட்டை, கண்காணிப்பு கேமரா இதெல்லாம் இல்லாத காலம். தமிழ்ல வசூல் ராஜான்னு ஒரு சினிமா வந்தது. இந்தியிலேந்து வந்ததுதான். இந்தியில அதுக்கு முன்னாபாய்னோ என்னவோ பேரு!"

"புரியுது, சொல்லுங்க!" என்றார் துருவ் மல்லிக், சிரித்தபடி.

"அப்புறம் எம்.ஏ. பட்டம் வந்தது! அவர் காலேஜ் டீம்ட் யூனிவர்சிடி ஆகி, அப்புறம் யூனிவர்சிடியாகவும் ஆயிடுச்சு. அதுக்குக் கீழே இன்னும் சில கல்லூரிகளைக் கூட ஆரம்பிச்சாரு. அவர் பி.எச்.டி. பண்றாருன்னு ஒரு செய்தி வந்தது. அப்புறம் டாக்டர் பட்டமும் வந்துடுச்சு. அதுவும் கௌரவ டாக்டர் பட்டம் இல்ல, படிச்சு, ஆராய்ச்சி செஞ்சு வாங்கின டாக்டர் பட்டம்!" என்று சிரித்தார் பட்டாபிராமன்.

"அவர் பேருக்கு முன்னால ஏதோ ஒரு பட்டம் சொன்னாங்களே, எனக்கு அது சரியாப் புரியல. என்ன அது?"

"கல்விக் கொடை வள்ளல்!"

"அப்படின்னா?"

பட்டாபிராமன் விளக்கினார்.

"அவரோட கல்லூரிகள்ள பணம் வாங்காம இலவசக் கல்வியா கொடுக்கறாங்க?" என்றார் துருவ் மல்லிக், வியப்புடன்.

"நீங்க வேற! அதிகமா கட்டணம் வாங்கற கல்லூரிகள் பட்டியல்ல அவரோட எல்லாக் கல்லூரிகள் பெயரும் வரும். அதைத் தவிர, நன்கொடைன்னு பெரிய தொகை வாங்கறதா வேற புகார்கள் வருது. இதெல்லாம் ஒரு போலித்தமான பட்டம்தான்!"

"அவரோட பொருளாதாரப் பின்னணி என்ன? கல்லூரி ஆரம்பிக்க முதலீடு எப்படி வந்தது? குடும்பச் சொத்து நிறைய இருந்ததா?"

"குடும்பச் சொத்து எதுவும் இல்லை. தான் சின்ன வயசில சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதா அவர் பெருமையா சொல்லிப்பாரு! ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு நெருக்கமாகி, அவருக்கு நிறைய வேலைகள் செஞ்சு கொடுத்ததாகவும், அதில சம்பாதிச்ச பணம்தான் எல்லாம்னும் சொல்லுவாங்க. வருமான வரித்துறையில கணக்குக் கேட்டிருக்க மாட்டாங்களான்னு கேக்காதீங்க!"

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட துருவ் மல்லிக், "எந்த ஒரு சிறப்போ, திறமையோ, படிப்போ இல்லாத ஒரு ஆள் இவ்வளவு பெரிய மனுஷரா, மதிப்போடயும், மரியாதையோடயும் இருக்காருன்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்னு இப்ப எனக்குப் புரியுது!" என்றார்.

"அதிர்ஷ்டம்னு சொல்றீங்களா?" என்றார் பட்டாபிராமன்.

"இல்லை, பணம்!" என்றார் துருவ் மல்லிக்.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை (பொருள் ஈட்டல்)

குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

பொருள்: 
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வது பொருள்(பணம்)தான். அதை விடச் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 

Saturday, April 1, 2023

750. படைத்தலைவரின் வருத்தம்

"அமைச்சரே! தங்களிடம் ஒன்று கேட்கலாமா!"

"கேளுங்கள், படைத்தலைவரே!"

"கோட்டையைக் காப்பதற்கென்று நாம் ஒரு படையை உருவாக்கி இருக்கிறோம். அந்தப் படை கோட்டைத் தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும்."

"ஆமாம். ஆயினும், நாட்டின் முக்கியப்படை உங்கள் தலைமையில்தான் இயங்கும். நாம் வேறு நாட்டின் மீது படையெடுத்தாலோ, அல்லது கோட்டைக்கு வெளியே சென்று போரிட்டாலோ அந்தப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லப் போவது நீங்கள்தான்!"

"அது சரிதான், அமைச்சரே! ஆனால் என் படையிலிருந்து பல வீரர்களை எடுத்துக் கோட்டையைக் காக்கும் படையில் சேர்த்திருக்கிறீர்களே, அது ஏன்?"

"நான் எதுவும் செய்யவில்லை, படைத்தலைவரே! மன்னரின் உத்தரவைச் செயல்படுத்தி இருக்கிறேன். அவ்வளவுதான்!"

"தெரியும், அமைச்சரே! ஆனால், மன்னரிடம் நான் இது பற்றிக் கேட்க முடியாது அல்லவா? அதுதான் உங்களிடம் கேட்கிறேன்!"

அமைச்சர் தன் அருகிலிருந்த ஒரு நீண்ட ஆயுதத்தை எடுத்துப் படைத்தலைவரிடம் கொடுத்து, "படைத்தலைவரே! இது ஒரு புதுவகை ஆயுதம். கடல் கடந்து உள்ள சில நாடுகளில் இதைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு வணிகர் இதை நம்மிடம் விற்பதற்காகக் கொண்டு வந்திருக்கிறார். இதை உங்களால் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்!" என்றார்.

அந்த ஆயுதத்தைக் கையில் வாங்கிப் பார்த்த படைத்தலைவர், "இது ஒரு தடி போல் இருக்கிறது. ஆனால் வலுவாக இல்லை. ஒரு புறம் மெல்லிய குழாய் போல் இருக்கிறது. மறுபுறம் சற்று அலமாகவும், தடிமனாகவும் இருக்கிறது. எது முன்பக்கம், எது பின்பக்கம் என்று தெரியவில்லை. ஒரு சாதாரண தடியே இதை விட இன்னும் வலிமையான ஆயுதமாக இருக்கும் போலிருக்கிறதே!" என்றார்.

"படைத்தலைவரே! இதன் பெயர் துப்பாக்கி, இதற்குள் குண்டுகளைப் போட்டு இந்த விசையை இழுத்தால், வில்லிலிருந்து அம்பு செல்வது போல், இதிலிருந்து குண்டுகள் பாய்ந்து சென்று குறியைத் தாக்கி அழித்து விடும். இது இவ்வளவு வலுவான ஆயுதமாக இருந்தாலும், இதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாவிட்டால், இதனால் எந்தப் பயனும் இல்லை அல்லவா? ஆற்றலும், அனுபவமும் வாய்ந்த உங்கள் கையிலேயே இது ஒரு விளையாட்டுப் பொருள் போல்தானே இருக்கிறது?"

"மன்னிக்க வேண்டும், அமைச்சரே! இந்த ஆயுதத்தை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விரைவிலேயே கற்றுக் கொண்டு..."

"நான் சொல்ல வந்தது அதுவல்ல, படைத்தலைவரே! சமீபத்தில், நம் கோட்டையின் அமைப்பை நாம் சிறப்பானதாக மாற்றி இருக்கிறோம். கோட்டைக்குள் இருந்து கொண்டே வெளியே இருக்கும் எதிரிகளைத் தாக்குவதற்கான சில அற்புதமான சாதனங்களை அமைத்திருக்கிறோம். எதிரிகள் உள்ளே வந்தால் கூட, அவர்கள் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டு தாக்குவதற்கான மறைவிடங்கள், இன்னும் பல வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி இருக்கிறோம்."

"அறிவேன், அமைச்சரே! ஆனால், அதற்கும்..."

"அந்த வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த, நமக்குத் திறமையான வீரர்கள் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், துப்பாக்கி போன்ற சக்தி வாய்ந்த ஆயுதம் இருந்தும், அதைப் பயன்படுத்தும் திறமை இல்லாவிட்டால், அது பயனில்லாமல் போவது போல், கோட்டையில் பல அற்புதமான வசதிகளும், சாதனங்களும் இருந்தும், அவை நமக்குப் பயன்படாமல் போய் விடும். அதனால்தான், அந்த வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், உங்கள் படையிலிருந்து சில திறமையான வீரர்களைக் கோட்டையைக் காக்கும் படைக்கு மாற்ற வேண்டும் என்று மன்னர் விரும்பினார்."

அமைச்சர் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினார் படைத்தலைவர்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 750:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

பொருள்: 
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும் கூட, உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 

749. சிறிய கோட்டைதான்...

"அதோ தெரிகிறதே, அதுதான் கோட்டை!" என்று சுட்டிக் காட்டினான், சங்கு தேசத்தின் படைக்கு வழி காட்டி நடத்தி வந்த கார்வண்ணன்.

"மிகவும் சிறிய கோட்டையாக இருக்கிறதே! இதை வைத்துக் கொண்டா, இந்த வல்லப நாடு இவ்வளவு ஆட்டம் போடுகிறது?" என்றான் படைத்தலைவன் இந்திரவர்மன்.

சொல்லி முடிப்பதற்குள், அருகிலிருந்து "ஐயோ!" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிய இந்திரவர்மன், தன் வீரர்களில் ஒருவன் மீது ஈட்டி பாய்ந்திருப்பதைக் கண்டான்.

"எங்கிருந்து வந்தது இந்த ஈட்டி? யார் இதை வீசினார்கள்?" என்றான் இந்திரவர்மன், கோபத்துடன்,

"கோட்டையிலிருந்துதான் ஈட்டி வீசப்பட்டிருக்கிறது!" என்றான் ஒரு வீரன்.

"அவ்வளவு தூரத்திலிருந்து எப்படி வீச முடியும்? வேறு யாரோ அருகிலிருந்து மறைந்திருந்து வீசி இருக்க வேண்டும்!"

"இல்லை, படைத்தலைவரே! கோட்டையிலிருந்துதான் வந்திருக்கிறது. எப்படி இவ்வளவு தூரம் வீசினார்கள் என்று தெரியவில்லை!" என்றான் மற்றொரு வீரன்.

"பலவீனமான ஒரு கோட்டையை வைத்துக் கொண்டு, நாம் அதை எளிதாகத் தகர்த்து விடுவோம் என்பதால், நம்மைக் கோட்டைக்கு அருகிலேயே வர விடாமல் தடுக்க முயல்கிறார்கள். இதற்கெல்லாம் நாம் அஞ்சப் போவதில்லை. வாருங்கள், முன்னேறிச் செல்வோம்!" என்றான் இந்திரவர்மன்.

படைவீரர்கள் தயக்கத்துடன் நடக்கத் தொடங்கினர். 

சில அடிகள் நடந்ததும், இன்னொரு ஈட்டி பாய்ந்து வந்தது. இந்த முறை அது தரையில் விழுந்ததால், யாருக்கும் அடிபடவில்லை.

படைக்கு வழி காட்டி அழைத்து வந்த கார்வண்ணன், "படைத்தலைவரே! வல்லப நாட்டின் கோட்டை சிறிதாக இருந்தாலும், அதற்குள்ளிருந்து போர் செய்து எதிரிப்படைகளைத் தொலைவில் வரும்போதே தாக்க வகையாக, கோட்டைச் சுவர்களில் அவர்கள் இயந்திரங்களைப் பொருத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஓரிரு ஈட்டிகளை மட்டும் வீசி, அவர்கள் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். நாம் தொடர்ந்து முன்னேறினால், அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஈட்டிகளை வீசக் கூடும். நாம் கோட்டைக்கு அருகில் செல்வதற்குள், நம் படையில் பாதி அழிந்து விடும். மீதமிருப்பவர்களுக்கும் போரிடுவதற்கான மன உறுதி இருக்காது!" என்றான்.

"அப்படியானால், நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிறீர்களா?" என்றான் இந்திரவர்மன் கோபத்துடன்.

"வல்லப நாட்டின் கோட்டை சிறியது, அதை எளிதாகத் தாக்கி அழித்து விடலாம் என்று தகவல் சொன்னது நான்தான். ஆனால் கோட்டைக்குள்ளிருந்து கொண்டே எதிரிப் படைகளைத் தொலைதூரத்திலேயே அழிக்கும் அமைப்புகளை அவர்கள் உருவாக்கி இருப்பதை நான் அறியவில்லை. இப்போது நிலைமையை உணர்ந்து, நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!" என்றான் கார்வண்ணன்.

"இப்போது நாம் திரும்பச் செல்வோம். வேறு விதத்தில் திட்டமிட்டு மீண்டும் வருவோம்!" என்றான் இந்திரவர்மன், தன் தோல்வியை மறைத்துக் கொண்டு. 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

பொருள்: 
போர் முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 


748. ஏன் இந்த தாமதம்?

அவர்கள் அந்தக் கோட்டையை முற்றுகையிடத் தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்டது.

"நம்மால் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் முற்றுகையை நீட்டிக்க முடியும். கோட்டைக்குள்ளிருந்து கொண்டு, அவர்களால் என்ன செய்ய முடியும்? எத்தனை நாட்கள்தான் உள்ளே பதுங்கி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்!" என்றான் படைத்தலைவன்.

மேலும் சில நாட்கள் கடந்தன. எதுவும் நடக்கவில்லை.

"உள்ளே யாராவது இருக்கிறார்களா இல்லையா?" என்றான் படைத்தலைவன், எரிச்சலுடன்.

"நாம் வருவது தெரிந்து, முன்பே கோட்டையைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்களோ என்னவோ!" என்றான் படையின் துணைத் தலைவன்.

படைத்தலைவன் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு அம்பு அவர்களுக்கு அருகில் வந்து விழுந்தது.

படைத்தலைவன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

அடுத்த சில நிமிடங்களில், கோட்டைக்குள்ளிருந்து முழு அளவிலான தாக்குதல் தொடங்கியது.

"முற்றுகை இட்டவர்கள் மூட்டை கட்டிக் கொண்டு ஓடி விட்டனர்!" என்றான் கோட்டைத்தலைவன், சிரித்தபடி.

"நம் தாக்குதலை இரண்டு நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்காமல் ஓடி  விட்டார்கள்!" என்றான் ஒரு வீரன், உற்சாகத்துடன்.

"கோட்டைத் தலைவரே, எனக்கு ஒரு சந்தேகம்!" என்றான் இன்னொரு வீரன்.

"என்ன சந்தேகம்?"

"நாம் ஏன் இத்தனை நாட்கள் காத்திருந்தோம்? அவர்கள் முற்றுகையைத் துவக்கியபோதே தாக்கி இருந்தால், அவர்களை அப்போதே விரட்டி இருக்கலாமே!"

"முற்றுகையைத் தொடங்கியபோது, அவர்கள் புத்துணர்ச்சியுடனும், தென்புடனும் இருந்திருப்பார்கள். அந்த நிலையில் அவர்களை நாம் தாக்கி இருந்தால், அவர்களைத் தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும். நாம் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்ததால், உள்ளிருந்து தாக்குவதற்கான போதிய பலம் நம்மிடம் இல்லை என்று நினைத்து, அவர்கள் சற்று அலட்சியமாக இருந்திருப்பார்கள். அத்துடன், இத்தனை நாட்கள் காத்திருந்ததில், அவர்களுக்கு அலுப்பும், சலிப்பும்தான் ஏற்பட்டிருக்கும். ஒன்றுமே செய்யாமல் சற்று நேரம் சும்மா இருந்தாலே, நம் உடலில் வலுவில்லாதது போல் தோன்றுமே! இத்தனை நாட்கள் சும்மா இருந்து விட்டு, திடீரென்று போரை எதிர்கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருந்திருக்கும். அதனால்தான், நாம் இத்தனை நாட்கள் காத்திருந்து தாக்கினோம்!" என்று பெருமிதத்துடன் விளக்கினான் கோட்டைத் தலைவன்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

பொருள்: 
முற்றுகையிடும் வலிமை மிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 


Friday, March 31, 2023

747. "பாதுகாப்பு வல்லுனர்"

"அரசே! பாதுகாப்பு வல்லுனர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் இந்த மனிதரின் ஆலோசனையை நாம் கேட்க வேண்டுமா என்ன?" என்றார் அமைச்சர்.

"இதற்கு முன் இரண்டு நாடுகளுக்குப் பாதுகாப்பு அமைப்பு பற்றி ஆலோசனை கூறி இருப்பதாகவும், அவர் யோசனையைக் கேட்டு அவர்கள் தங்கள் கோட்டைகளை வலுப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். அவரை வரச் சொல்லுங்கள். உங்களையும், என்னையும் தவிர, கோட்டைத் தலைவரும், படைத் தலைவரும் கூட இருக்கட்டும்!" என்றான் அரசன்.

"அரசே! ஒரு கோட்டைக்கு இரண்டு விதங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். முதலாவதாக, கோட்டை எதிரி நாட்டுப் படைகளால் தாக்கப்படமுடியாத அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும். அதனால், தாக்க வரும் படைகள் கோட்டையை முற்றுகை இடுவார்கள். அந்த முற்றுகையை நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் அளவுக்குக் கோட்டைக்குள் வசதிகள் இருக்க வேண்டும்.

"இரண்டாவதாக, ஒருவேளை எதிரி நாட்டுப் படைகள் நம் கோட்டைக்குள் நுழைந்து விட்டால், அவர்களுடைய தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நமக்கு இருக்க வேண்டும்!"

"அற்புதமான யோசனைகள், வல்லுனரே! ஆனால், எல்லா நாட்டின் கோட்டைகளுமே இந்த இரண்டு நோக்கங்களையும் கருத்தில் கொண்டுதானே அமைக்கப்பட்டிருக்கும்?" என்றான் அரசன்.

"உண்மைதான், அரசே! ஆயினும், கோட்டைகளைக் கட்டமைக்கும்போது, சில பலவீனங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கோட்டையைச் சுற்றிப் பார்க்க என்னை அனுமதித்தால், நான் அந்த பலவீனங்களைக் கண்டறிந்து, அவற்றைப் போக்குவதற்கான வழிகளைக் கூறுவேன்" என்றார் வல்லுனர்.

"அப்படியே செய்து விடலாம். கோட்டைத் தலைவரே! வல்லுனருக்குக் கோட்டையைச் சுற்றிக் காட்டுங்கள். அப்போதுதானே, அவர் கோட்டையில் உள்ள அமைப்புகளை நன்கு பார்த்து, அவற்றை நம் எதிரி நாட்டு மன்னரிடம் எடுத்துச் சொல்ல முடியும்!" என்றான் அரசன் சிரித்தபடி.

"அரசே!" என்றார் வல்லுனர், திடுக்கிட்டு.

"வல்லுனரே! கோட்டையை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ தாக்குவதைத் தவிர, மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது. அதுதான் வஞ்சனை மூலம் கோட்டையின் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது. அதற்காகத்தான் எங்கள் எதிரி, ஒற்றரான உங்களை ஒரு வல்லுனர் போல் அனுப்பி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் மன்னர் உங்களிடம் சற்று விளையாடிப் பார்க்க நினைத்தார். அவ்வளவுதான்!" என்றார் அமைச்சர், சிரித்தபடி.

"துரதிர்ஷ்டவசமாக, உங்களால் கோட்டையைப் பார்க்க முடியாது. நீங்கள் பார்க்கப் போவது எங்கள் பாதாளச் சிறையைத்தான். உங்கள் நாட்டுச் சிறை அளவுக்கு அது வசதியாக இருக்குமா என்று தெரியாது" என்ற அரசன் கோட்டைத் தலைவனைப் பார்த்துக் கண்ணசைக்க, கோட்டைத் தலைவன் "வல்லுனரை" சிறைக்கு அழைத்துச் செல்லக் காவலர்களை அழைத்தான்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

பொருள்: 
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ, அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 


 

690. தோளில் விழுந்த வெட்டு!

"பொன்னி நாட்டுக்குத் தூது போகும் உனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமை!" என்றார் அமைச்சர்.

"ஆபத்துகள் பற்றி எனக்கு அச்சம் இல்லை அமைச்சரே!" என்றான் தூது செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்ட காத்தவராயன்.

"காத்தவராயா! உனக்கு அச்சம் இல்லை என்பதை நான் அறிவேன். அதனால்தான், உன்னைத் தூதனாக அனுப்ப அரசரிடம் பரிந்துரை செய்தேன். ஆயினும், வரக் கூடிய  ஆபத்துகளை முன்பே அறிந்திருப்பதுதானே புத்திசாலித்தனம்!"

அமைச்சர் கூறியவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்டான் காத்தவராயன்.

"பாராட்டுக்கள், காத்தவராயா! உன் தூதை வெற்றிகரமாக முடித்திருக்கிறாய். நாம் அனுப்பிய சமாதான யோசனையைப் பொன்னி நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு, உன் மூலமே பதில் ஓலை அனுப்பி இருக்கிறாரே! போரைத் தவிர்த்து விட்டோம். இது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் செய்தி!" என்றார் அரசர்.

"அரசே! தூதர் தங்களை ஒரு கையால் வணங்கினாரே, அது தவறு இல்லையா?" என்றார் அமைச்சர்.

"காத்தவராயர் தன் தூதை வெற்றிகரமாக முடித்துப் பொன்னி நாட்டு மன்னரிடமிருந்து ஒரு நல்ல செய்தியுடன் வந்திருக்கிறார். அவர் ஒரு கையால் வணங்கியதை நான் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். காத்தவராயர் மரியாதை தெரிந்தவர். அவர் ஒரு கையால் வணங்குகிறார் என்றால், இன்னொரு கையில் சுளுக்கு ஏற்பட்டிருக்கலாம்!" என்றார் மன்னர், சிரித்தபடி.

"சுளுக்கு இல்லை, அரசே! அவருடைய வலது தோளில் வாளால் வெட்டப்பட்ட காயம் உள்ளது!" என்றார் அமைச்சர்.

"என்ன, வாள் வெட்டா? அது எப்படி நேர்ந்தது?" என்றர் அரசர், அதிர்ச்சியுடன்.

"அரசே! பொன்னி நாட்டு அரசருக்கு எதிராகச் செயல்படும் அவருடைய உள்நாட்டு எதிரிகள் சிலர், நம் இரு நாடுகளிடையே போரை விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் நடந்தால், பொன்னி நாட்டு மன்னர் போரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, அரண்மனையில் உள்ள சில சதிகாரர்கள் உதவியுடன் அவரைச் சிறைப்பிடித்து விட்டுத் தங்களில் ஒருவர் அரசுக் கட்டிலில் அமரலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் நான் அறிந்தேன். அதனால், நம் சமாதான முயற்சியைச் சீர்குலைக்க அவர்கள் முயல்வார்கள் என்றும், அதன் ஒரு பகுதியாக, அவர்கள் நம் தூதரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க முயல்வார்கள் என்றும் நான் எதிர்பார்த்தேன். அதனால், இங்கிருந்து கிளம்பும்போதே காத்தவராயரை எச்சரிக்கை செய்துதான் அனுப்பினேன்" என்றார் அமைச்சர்.

"ஆனால், உங்கள் எச்சரிக்கை பயனளிக்காமல் போய் விட்டதே! தூதர் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றால், அவரை அனுப்பியதையே தவிர்த்திருக்கலாமே!" என்றார் அரசர்.

"நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, போரைத் தவிர்ப்பதற்கான முயற்சியில், தூதரை அனுப்ப வேண்டியது அவசியமாக இருந்தது. அவருடைய உயிருக்கு நேரக் கூடிய ஆபத்து பற்றியும், அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும், காத்தவராயரிடம் அவர் கிளம்புவதற்கு முன்பே விரிவாக விளக்கினேன். தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று தெரிந்துதான் அவர் தூது செல்ல ஒப்புக் கொண்டார். ஆபத்தை உணர்ந்து அவர் எச்சரிக்கையுடன் இருந்ததால்தான், அவர் மீது நடந்த தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார். அத்துடன், காத்தவராயர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி அறிந்த பொன்னி நாட்டு அரசர், சதிகாரர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விட்டார். அதனால், அவர் பதவிக்கு ஏற்படவிருந்த ஆபத்தும் நீங்கி விட்டது. காத்தவராயர் தாக்கப்பட்டது ஒரு விதத்தில் பொன்னி நாட்டுக்கு நன்மை பயத்திருக்கிறது! தனக்குக் காயம் ஏற்பட்டது பற்றித் தங்களிடம் கூற வேண்டாம், அது தங்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் என்று காத்தவராயர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவர் தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் தூது சென்று வந்தது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால்தான், அவர் தங்களை ஒரு கையால் வணங்கினார் என்று அவர் மீது குற்றம் கூறுவது போல் ஆரம்பித்து, உங்களிடம் அவர் தாக்கப்பட்டதைக் கூறினேன்!" என்றார் அமைச்சர்.

"தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தைப் பற்றி அஞ்சாமல் தூது சென்று, தன் பணியைச் சிறப்பாக முடித்து, இரு நாடுகளுக்குமே பெரும் நன்மையை விளைவித்திருக்கும் காத்தவராயருக்கு எவ்வளவு சிறந்த பரிசை வழங்கினாலும் தகும்!" என்றார் அரசர், காத்தவராயனைப் பெருமையுடன் பார்த்தபடி.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது

குறள் 690:
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

பொருள்:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது, தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும், அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித் தருபவரே நல்ல தூதர்.

Read 'A Shoulder Injury' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...