"என்னத்த நடந்தது? வந்திருந்தவங்களை சரியா வரவேற்று உபசரிக்கல. சாப்பாடு சுமார்தான். இருக்கறது ஒரே தங்கச்சி. எனக்கு ஒரு நல்ல புடவையா வாங்கி இருக்கக் கூடாது?" என்றாள் உமா.
"உன் அண்ணன் மணமேடையில உக்காந்திருந்தாரு. அப்படியும், அப்பப்ப எழுந்து வந்து, வந்தவங்களைப் பார்த்து வரவேற்பு சொல்லி விசாரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. எனக்கென்னவோ சாப்பாடு நல்லா இருந்த மாதிரிதான் இருந்தது. புடவையைப் பத்தி எனக்குத் தெரியாது!" என்றான் சோமு.
"என் சின்ன அண்ணன் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்காம். அடுத்த மாசம் கல்யாணம்!" என்றாள் உமா, பேச்சை மாற்றி.
"அப்படியா? எனக்குத் தெரியாதே! எப்ப நிச்சயமாச்சு? நம்மகிட்டல்லாம் ஒரு வார்த்தை கூடச் சொல்லல!" என்றான் சோமு.
"திடீர்னு நிச்சமாயிருக்கும் போல இருக்கு. அதான் கல்யாணத் தேதியைக் கூட சீக்கிரமா வச்சிருக்காங்க. பெரிய அண்ணனோட அறுபதாம் கல்யாணத்தும்போதுதான், சின்ன அண்ணன் எங்கிட்ட இதைச் சொன்னாரு!"
"எங்க சின்ன அண்ணனோட பொண்ணு கல்யாணம் எவ்வளவு சிறப்பா நடந்துது பாத்தீங்களா?" என்றாள் உமா, தன் கணவனிடம், பெருமையுடன்.
"கல்யாணம் நல்ல ஆடம்பரமாத்தான் நடந்தது. ஆனா, கல்யாணத்துக்கு வந்தவங்களை வாங்கன்னு கூட யாரும் கூப்பிடல. உங்க அண்ணனும், அண்ணியும் மணமேடையை விட்டு இறங்கவே இல்லை!" என்றான் சோமு.
"பெண்ணோட கல்யாணம்னா, அவங்க மணமேடையில இருக்க வேண்டாமா? உங்களுக்கு ஏதாவது குற்றம் சொல்லணும்!"
"ஆமாம். சாப்பாடு எப்படி இருந்தது?"
"பரவாயில்லை."
"சாப்பாடு நல்லா இல்லேன்னு நிறைய பேர் பேசிக்கிட்டதை நான் கேட்டேன்!"
"கல்யாணத்தில நிறைய பேருக்கு சமைக்கறப்ப, எல்லாமே பிரமாதமா இருக்கும்னு சொல்ல முடியாது!"
"நல்லாதான் சப்பைக் கட்டு கட்டற! அது சரி. உனக்குப் புடவை எதுவும் வாங்கிக் கொடுக்கலியா உங்க அண்ணன்?"
"கல்யாணத் தேதியை சீக்கிரமே வச்சுட்டதால, எல்லாருக்கும் புடவை வாங்க நேரம் இல்லையாம். அதனால, அண்ணன் புடவைக்கு பதிலா ஐநூறு ரூபாய் பணம் கொடுத்துட்டாரு!"
"உன் பெரிய அண்ணன் அவரோட அறுபதாம் கல்யாணத்துக்காக உனக்கு வாங்கிக் கொடுத்த புடவையோட விலை ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல இருக்கும் இல்ல?" என்றான் சோமு.
உமா மௌனமாக இருந்தாள்.
"உன் பெரிய அண்ணன் தன் அறுபதாம் கல்யாணத்தில உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கறதிலேந்து, வந்தவங்களை உபசாரம் செய்யறது, சாப்பாடு நல்லா இருக்கும்படி பாத்துக்கறதுன்னு எல்லாத்தையும் கவனமா பாத்துத் பாத்து செஞ்சாரு. ஆனா, நீ அவர் மேல ஆயிரம் குத்தம் சொன்ன. உன் சின்ன அண்ணன் தன் பொண்ணு கல்யாணத்தில நம்மை மதிச்சு நடந்துக்கல, ஒரே தங்கையான உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கல, கல்யாணச் சாப்பாடு நல்லா இருக்கணுங்கறதில கூட அக்கறை எடுத்துக்கல. ஆனா, நீ அவரைப் புகழற! நான் சுட்டிக் காட்டின குறைகளையெல்லாம் இல்லைன்னு சாதிக்கற. இதுக்கு ஒரே காரணம்தான்!" என்றான் சோமு.
"என்ன காரணம்?" என்றாள் உமா.
"உன் பெரிய அண்ணன் அவ்வளவு வசதியானவர் இல்ல. ஆனா, உன் சின்ன அண்ணன் பணக்காரர்!"
"அப்படியெல்லாம் இல்லை..."
"அப்படித்தான். ஆனா, இது உன்னோட தப்பு இல்ல. ஒத்தன் பணக்காரனா இருந்தா,அவனைத் தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடறதும், ஒத்தன் ஏழையா இருந்தா, அவனை ஏளனமாப் பேசறதும்தானே இந்த உலகத்தோட இயல்பாகவே இருக்கு!" என்றான் சோமு.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை (பொருள் ஈட்டல்)
குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
No comments:
Post a Comment