தமிழறிஞர் வேதாசலம் அதிர்ச்சியில் ஒருகணம் பதைபதைத்து விட்டார்.
"என்னையா, நீங்களே ஃபோன் பண்றீங்க? உங்க செயலர்கிட்ட சொல்லி ஃபோன் பண்ணி இருந்தீங்கன்னா, நான் உங்களை வந்து சந்திச்சிருப்பேனே!" என்றார் வேதாசலம், பதட்டத்துடன்.
"பரவாயில்லை. உங்களை செயலர் மூலமா, கூப்பிடாம நானே கூப்பிடறேன்னு வச்சுக்கங்களேன்! இன்னிக்கு சாயந்திரம் நாலு மணிக்கு என்னை அலுவலகத்தில வந்து பாருங்க."
ஃபோனை வைத்து விட்டார் அமைச்சர் சுப்பு.
"பல வருஷங்களுக்கு முன்னே ஒரு வீட்டுமனை வாங்கினதாச் சொன்னீங்களே, அதை வித்துட்டீங்களா, இன்னும் வச்சிருக்கீங்களா?" என்றார் சுப்பு.
'எப்போதோ பேச்சு வாக்கில் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டு இப்போது ஏன் கேட்கிறார்?' என்று நினைத்துக் கொண்ட வேதாசலம், "இருக்கு!" என்றார்.
"அது இப்ப என்ன விலைக்குப் போகும்?"
"தெரியலையே! பத்துப் பதினைஞ்சு லட்சத்துக்குப் போகலாம். ஏன் கேக்கறீங்க?"
"அதை ஒத்தர் ரெண்டு கோடி ரூபாய்க்கு வங்கிக்கறதாச் சொன்னா, கொடுப்பீங்களா?" என்றார் சுப்பு, சிரித்துக் கொண்டே.
"அது எப்படி ஐயா?" என்றார் வேதாசலம், குழப்பத்துடன்.
"எப்படியோ! அதை ரெண்டு கோடி ரூபாய்க்கு வித்துட்டு, நான் சொல்ற ஒரு பங்களாவை ரெண்டு கோடி ரூபாய்க்கு வாங்கறீங்க. உண்மையில, அதோட மதிப்பு அஞ்சு கோடி ரூபா. ஆனா அதோட சொந்தக்காரரு, எனக்காக, அதை உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய்க்கு விக்கறாரு!" என்றார் சுப்பு.
சுப்பு என்ன சொல்ல வருகிறார் என்பது வேதாசலத்துக்குப் புரிய ஆரம்பித்தது.
"அப்புறம்?" என்றார் வேதாசலம், தயக்கத்துடன்
"அப்புறம் என்ன? அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு விட்டுடறீங்க. உங்களுக்கு ரொக்கமா முப்பது லட்சம் கிடைக்க ஏற்பாடு செஞ்சுடறேன். அப்புறம் பின்னால நான் எப்ப சொல்றேனோ, அப்ப அதை நான் சொல்ற ஆளுக்கு ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துடணும்!"
"நல்ல விஷயம்தானே! முப்பது லட்ச ரூபா சுளையாக் கிடைக்கும். உங்க பேர்ல வாங்கப் போற வீட்டை, அவர் கேக்கறப்ப அவர் சொல்றவங்க பேருக்கு ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துடலாமே! இதில நமக்கென்ன பிரச்னை?" என்றாள் வேதாசலத்தின் மனைவி கமலா.
"அவர் என்னைத் தனக்கு பினாமியாப் பயன்படுத்தப் பாக்கறாரு. நாளைக்கு அவர் மேல ஏதாவது கேஸ் வந்தா, நானும் இல்ல மாட்டிப்பேன்? தற்செயலா அவரோட தொடர்பு கிடைச்சது. அரசியல் தலைவரோட பழக்கம் நமக்குப் பயனுள்ளதா இருக்கும்னு நினைச்சுப் பழகினேன். என்னை அறியாம ரொம்ப நெருக்கமாயிட்டேனோ என்னவோ தெரியல, என்னை பினாமியா வச்சுக்கலாம்னு அவர் நினைக்கிற அளவுக்குப் போயிடுச்சு!"
"அவருக்கு என்ன பதில் சொன்னீங்க?"
"வேணாங்க, எனக்கு பயமா இருக்குன்னு சொல்லிட்டேன். அவரும் என்னோட பயத்தைப் புரிஞ்சுக்கிட்டாரு. என் மேல கோபமோ, வருத்தமோ படலேன்னு நினைக்கிறேன். இனிமே, அவர்கிட்ட ஜாக்கிரதையாப் பழகணும். அவர் கூப்பிட்டா மட்டும் போய், அளவோட பேசிட்டு வரணும். நெருப்போட பழகற மாதிரி இல்ல, எச்சரிக்கையா இருக்க வேண்டி இருக்கு!" என்றார் வேதாசலம், பதைபதைப்பு இன்னும் நீங்காதவராக.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 691:
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
பொருள்:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், நெருப்பில் குளிர் காய்வது போல், அதிகமாக நெருங்கி விடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment