"கேளுங்கள், படைத்தலைவரே!"
"கோட்டையைக் காப்பதற்கென்று நாம் ஒரு படையை உருவாக்கி இருக்கிறோம். அந்தப் படை கோட்டைத் தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும்."
"ஆமாம். ஆயினும், நாட்டின் முக்கியப்படை உங்கள் தலைமையில்தான் இயங்கும். நாம் வேறு நாட்டின் மீது படையெடுத்தாலோ, அல்லது கோட்டைக்கு வெளியே சென்று போரிட்டாலோ அந்தப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லப் போவது நீங்கள்தான்!"
"அது சரிதான், அமைச்சரே! ஆனால் என் படையிலிருந்து பல வீரர்களை எடுத்துக் கோட்டையைக் காக்கும் படையில் சேர்த்திருக்கிறீர்களே, அது ஏன்?"
"நான் எதுவும் செய்யவில்லை, படைத்தலைவரே! மன்னரின் உத்தரவைச் செயல்படுத்தி இருக்கிறேன். அவ்வளவுதான்!"
"தெரியும், அமைச்சரே! ஆனால், மன்னரிடம் நான் இது பற்றிக் கேட்க முடியாது அல்லவா? அதுதான் உங்களிடம் கேட்கிறேன்!"
அமைச்சர் தன் அருகிலிருந்த ஒரு நீண்ட ஆயுதத்தை எடுத்துப் படைத்தலைவரிடம் கொடுத்து, "படைத்தலைவரே! இது ஒரு புதுவகை ஆயுதம். கடல் கடந்து உள்ள சில நாடுகளில் இதைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு வணிகர் இதை நம்மிடம் விற்பதற்காகக் கொண்டு வந்திருக்கிறார். இதை உங்களால் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்!" என்றார்.
அந்த ஆயுதத்தைக் கையில் வாங்கிப் பார்த்த படைத்தலைவர், "இது ஒரு தடி போல் இருக்கிறது. ஆனால் வலுவாக இல்லை. ஒரு புறம் மெல்லிய குழாய் போல் இருக்கிறது. மறுபுறம் சற்று அலமாகவும், தடிமனாகவும் இருக்கிறது. எது முன்பக்கம், எது பின்பக்கம் என்று தெரியவில்லை. ஒரு சாதாரண தடியே இதை விட இன்னும் வலிமையான ஆயுதமாக இருக்கும் போலிருக்கிறதே!" என்றார்.
"படைத்தலைவரே! இதன் பெயர் துப்பாக்கி, இதற்குள் குண்டுகளைப் போட்டு இந்த விசையை இழுத்தால், வில்லிலிருந்து அம்பு செல்வது போல், இதிலிருந்து குண்டுகள் பாய்ந்து சென்று குறியைத் தாக்கி அழித்து விடும். இது இவ்வளவு வலுவான ஆயுதமாக இருந்தாலும், இதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாவிட்டால், இதனால் எந்தப் பயனும் இல்லை அல்லவா? ஆற்றலும், அனுபவமும் வாய்ந்த உங்கள் கையிலேயே இது ஒரு விளையாட்டுப் பொருள் போல்தானே இருக்கிறது?"
"மன்னிக்க வேண்டும், அமைச்சரே! இந்த ஆயுதத்தை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விரைவிலேயே கற்றுக் கொண்டு..."
"நான் சொல்ல வந்தது அதுவல்ல, படைத்தலைவரே! சமீபத்தில், நம் கோட்டையின் அமைப்பை நாம் சிறப்பானதாக மாற்றி இருக்கிறோம். கோட்டைக்குள் இருந்து கொண்டே வெளியே இருக்கும் எதிரிகளைத் தாக்குவதற்கான சில அற்புதமான சாதனங்களை அமைத்திருக்கிறோம். எதிரிகள் உள்ளே வந்தால் கூட, அவர்கள் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டு தாக்குவதற்கான மறைவிடங்கள், இன்னும் பல வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி இருக்கிறோம்."
"அறிவேன், அமைச்சரே! ஆனால், அதற்கும்..."
"அந்த வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த, நமக்குத் திறமையான வீரர்கள் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், துப்பாக்கி போன்ற சக்தி வாய்ந்த ஆயுதம் இருந்தும், அதைப் பயன்படுத்தும் திறமை இல்லாவிட்டால், அது பயனில்லாமல் போவது போல், கோட்டையில் பல அற்புதமான வசதிகளும், சாதனங்களும் இருந்தும், அவை நமக்குப் பயன்படாமல் போய் விடும். அதனால்தான், அந்த வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், உங்கள் படையிலிருந்து சில திறமையான வீரர்களைக் கோட்டையைக் காக்கும் படைக்கு மாற்ற வேண்டும் என்று மன்னர் விரும்பினார்."
அமைச்சர் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினார் படைத்தலைவர்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்
குறள் 750:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
No comments:
Post a Comment