"நம்மால் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் முற்றுகையை நீட்டிக்க முடியும். கோட்டைக்குள்ளிருந்து கொண்டு, அவர்களால் என்ன செய்ய முடியும்? எத்தனை நாட்கள்தான் உள்ளே பதுங்கி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்!" என்றான் படைத்தலைவன்.
மேலும் சில நாட்கள் கடந்தன. எதுவும் நடக்கவில்லை.
"உள்ளே யாராவது இருக்கிறார்களா இல்லையா?" என்றான் படைத்தலைவன், எரிச்சலுடன்.
"நாம் வருவது தெரிந்து, முன்பே கோட்டையைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்களோ என்னவோ!" என்றான் படையின் துணைத் தலைவன்.
படைத்தலைவன் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு அம்பு அவர்களுக்கு அருகில் வந்து விழுந்தது.
படைத்தலைவன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.
அடுத்த சில நிமிடங்களில், கோட்டைக்குள்ளிருந்து முழு அளவிலான தாக்குதல் தொடங்கியது.
"முற்றுகை இட்டவர்கள் மூட்டை கட்டிக் கொண்டு ஓடி விட்டனர்!" என்றான் கோட்டைத்தலைவன், சிரித்தபடி.
"நம் தாக்குதலை இரண்டு நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்காமல் ஓடி விட்டார்கள்!" என்றான் ஒரு வீரன், உற்சாகத்துடன்.
"கோட்டைத் தலைவரே, எனக்கு ஒரு சந்தேகம்!" என்றான் இன்னொரு வீரன்.
"என்ன சந்தேகம்?"
"நாம் ஏன் இத்தனை நாட்கள் காத்திருந்தோம்? அவர்கள் முற்றுகையைத் துவக்கியபோதே தாக்கி இருந்தால், அவர்களை அப்போதே விரட்டி இருக்கலாமே!"
"முற்றுகையைத் தொடங்கியபோது, அவர்கள் புத்துணர்ச்சியுடனும், தென்புடனும் இருந்திருப்பார்கள். அந்த நிலையில் அவர்களை நாம் தாக்கி இருந்தால், அவர்களைத் தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும். நாம் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்ததால், உள்ளிருந்து தாக்குவதற்கான போதிய பலம் நம்மிடம் இல்லை என்று நினைத்து, அவர்கள் சற்று அலட்சியமாக இருந்திருப்பார்கள். அத்துடன், இத்தனை நாட்கள் காத்திருந்ததில், அவர்களுக்கு அலுப்பும், சலிப்பும்தான் ஏற்பட்டிருக்கும். ஒன்றுமே செய்யாமல் சற்று நேரம் சும்மா இருந்தாலே, நம் உடலில் வலுவில்லாதது போல் தோன்றுமே! இத்தனை நாட்கள் சும்மா இருந்து விட்டு, திடீரென்று போரை எதிர்கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருந்திருக்கும். அதனால்தான், நாம் இத்தனை நாட்கள் காத்திருந்து தாக்கினோம்!" என்று பெருமிதத்துடன் விளக்கினான் கோட்டைத் தலைவன்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்
குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
No comments:
Post a Comment