அதனால், சிரவணனை இருக்கையில் அமரச் செய்து, அவனிடம் சற்று நேரம் உரையாடினான் மன்னன்.
பேசிக் கொண்டிருந்தபோது, அபிஷேகவல்லபன், "உங்கள் மன்னருக்கு அவருடைய ஒன்று விட்ட சகோதரர்கள் பிரச்னை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே!" என்றான்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்றான் சிரவணன், தங்கள் நாட்டு அரச குடும்பத்தின் விஷயங்களை இன்னொரு நாட்டு மன்னனிடம் பேச விரும்பாமல்.
"உங்கள் மன்னரின் ஒன்று விட்ட சகோதரர் சூரியகேசி தனக்கு எதிராகச் சதி செய்து வருவதாக உங்கள் மன்னரே என்னிடம் கூறி இருக்கிறாரே!" என்றான் அபிஷேகவல்லபன், விடாமல்.
"எனக்குத் தெரியாது, அரசே! எங்கள் அரசருக்கு மக்கள் ஆதரவு நிறைய இருக்கிறது. ஏனெனில் அவர் முறையாக..." என்று ஆரம்பித்த சிரவணன், தான் செய்யவிருந்த தவற்றை உணர்ந்து, "முறையாக ஆட்சி செய்து வருகிறார்!" என்று புன்னகையுடன் கூறி முடித்தான்.
'நல்ல வேளை! 'எங்கள் மன்னன் முறையாகப் பிறந்தவர்!' என்று நான் சொல்ல ஆரம்பித்ததைச் சொல்லி முடித்திருந்தால், தன் தந்தைக்கு முறையாகப் பிறக்காமல், அவருக்கு முறையாகப் பிறந்த இளவரசரைக் கொன்று விட்டு ஆட்சிக்கு வந்த அபிஷேகவர்மன் அதைத் தன்னைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டிருப்பான். அதனால், நான் வெற்றிகரமாகச் செய்து முடித்த தூது பயனில்லாமல் போய், இரு நாடுகளுக்கும் விரோதம் கூட ஏற்பட்டிருக்கும். ஒரு பெரும் அபாயத்திலிருந்து என்னையும், என் நாட்டையும் காத்து விட்டேன். உரிய நேரத்தில் என் சிந்தனையைச் சரியாகச் செயல்பட வைத்து, நான் செய்ய இருந்த தவறைத் தடுத்த இறைவனுக்கு நன்றி!' என்று நினைத்துக் கொண்டான் சிரவணன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது
குறள் 689:
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.
பொருள்:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய் தவறிக் கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment