"நம்ம கிட்ட வேலை செஞ்சவன், நமக்குப் போட்டியா அதே தொழிலை ஆரம்பிச்சு, நம்ம வாடிக்கையாளர்களையே இழுக்கப் பாக்கறான்னா எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! அந்த சங்கரன் பயலை நினைச்சாலே... " என்று குமுறினார் பரமசிவம்.
"அவனை சொந்தப் பையன் மாதிரி நடத்தி எல்லாப் பொறுப்பையும் அவங்கிட்ட ஒப்படைச்சீங்க. உங்களோட ஆதரவு இருக்குங்கற திமிர்ல அவன் எங்களையெல்லாம் கூட மதிக்காம நடந்துக்கிட்டான். இப்ப உங்களுக்கே போட்டியா வந்துட்டானே!" என்றார் மாணிக்கம்.
பரமசிவம் புதிதாக வந்த ஒரு சின்னப் பையனுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தன்னைப் போன்ற மூத்த ஊழியர்களைப் புறக்கணித்த வருத்தத்தை மாணிக்கம் மறைமுகமாக வெளிப்படுத்தியது பரமசிவத்துக்குப் புரிந்தது.
"அவன் மேல அளவுக்கதிகமா நம்பிக்கை வச்சது என் தப்புதான். ஆனா என்னைப் பத்தி அவன் சரியாப் புரிஞ்சுக்கல. என் அனுபவம் என்ன, தொடர்புகள் என்ன! இன்னும் மூணு மாசத்தில அவனை தொழிலை விட்டே விரட்டிக் காட்டறேன் பாருங்க!" என்றார் பரமசிவம்.
பரமசிவம் சொன்னபடி, அவரால் சங்கரனை மூன்று மாதங்களில் தொழிலை விட்டு விரட்ட முடியவில்லை, ஆனால் ஆறு மாதங்களில் அதைச் செய்து விட்டார்!
அவருடைய வியாபார உத்திகள், வியாபாரத் தொடர்புகள், பண பலம், தொழில் அனுபவம் அனைத்தையும் பயன்படுத்தி, சங்கரனின் தொழிலில் சரிவையும், இழப்புகளையும் ஏற்படுத்தி, ஆறு மாதங்களில் அவன் தொழிலை மூடும்படி செய்து விட்டார்.
துவக்கத்தில் தனக்கு ஏற்பட்ட வியாபாரப் பின்னடைவுகளயும், பொருளாதார இழப்புகளையும் சரிக்கட்டி, ஆறு மாத முடிவில், தன் தொழிலை ஆறுமாதத்துக்கு முன்பிருந்ததை விட இன்னும் வலுவான நிலைக்குக் கொண்டு வந்து விட்டார் பரமசிவம்.
சில மாதங்கள் கழித்து, பரமசிவத்திடம் வந்த மாணிக்கம்,"சார்! சங்கரன் வேற ஒரு தொழில் ஆரம்பிச்சுட்டானாமே!" என்றார்.
"ஆமாம். நானும் கேள்விப்பட்டேன்!" என்றார் பரமசிவம்.
"உங்களுக்குத் தெரியுமா? வெட்ட வெட்ட துளிர்த்துக்கிட்டே இருக்கானே! அவனோட இந்தத் தொழிலையும் ஒண்ணுமில்லாம செய்யணும்!" என்றார் மாணிக்கம்.
"மாணிக்கம்! அவன் எங்கிட்ட மோதினான். அதுக்கு அவனுக்குப் பாடம் கற்பிச்சாச்சு. அவன் வேற ஏதாவது தொழில் செஞ்சா, அதைப்பத்தி நமக்கென்ன?" என்றார் பரமசிவம்.
"என்ன சார் இது! அவன் உங்களுக்கு எப்படிப்பட்ட துரோகம் பண்ணினான்? அவனைச் சும்மா விட்டுடலாமா?" என்றார் மாணிக்கம்.
"மாணிக்கம்! நம்மை ஒத்தன் தாக்கறப்ப, நம்ம மொத்த பலத்தையும் பயன்படுத்தி, அவனைத் திருப்பித் தாக்கி, அவனோட தாக்குதலை முறியடிக்க வேண்டியதுதான். அதுக்கப்பறமும், அவனைத் துரத்தித் துரத்தித் தாக்கிக்கிட்டா இருந்தா, அது நமக்குத்தான் கெடுதலா முடியும்! தங்களோடவலிமையைக் காட்டறதா நினைச்சு, தேவையில்லாம, மற்ற அரசர்களோட போருக்குப் போய்த் தங்களை அழிச்சுக்கிட்ட அரசர்கள் கதை சரித்திரத்தில இருக்கு. அப்படி ஒரு அழிவைத் தேடிக்கற செயல்ல நான் எப்பவுமே இறங்க மாட்டேன்" என்றார் மாணிக்கம், உறுதியுடன்.
அரசியல் இயல்
very good.
ReplyDeleteThank you.
Delete