"ஏன்?" என்றார் சதாசிவம்.
"புதுசா ஒரு போட்டி நிறுவனம் வந்திருக்கு. அவங்க ரொம்பக் குறைஞ்ச தொகைக்கு டெண்டர் கேக்கப் போறதா எனக்குத் தகவல் வந்திருக்கு."
"நீ அந்தத் தொகைக்குக் கீழே கோட் பண்ண முடியாதா?"
"அவங்களோடது சின்ன நிறுவனம். எனக்கு இருக்கற மாதிரி செலவுகள் அவங்களுக்குக் கிடையாது. அதோட ,இந்த ஒரு டெண்டருக்கு நான் குறைவா கோட் பண்ணினா, என்னோட மத்த கான்டிராக்ட்களுக்கும் நான் விலையைக் குறைக்கும்படியா இருக்கும். என் போட்டி நிறுவனத்துக்கே நீண்ட கால அடிப்படையில இது லாபகரமா இருக்காது. ஆனா அதைப் புரிஞ்சுக்காம, இந்த டெண்டரை எப்படியாவது ஜெயிச்சுடணும்னு அவங்க வெறித்தனமா செயல்படறாங்க."
சற்று யோசித்த சதாசிவம், "டெண்டர் நோட்டீஸ் வந்துடுச்சா?" என்றார்.
"இல்லை. ரெண்டு மூணு நாள்ள வரும்னு சொல்றாங்க" என்றார் பாலமுருகன்.
"சரி. நீ நாளைக்கு ராத்திரி எனக்கு ஃபோன் பண்ணு!" என்றார் சதாசிவம்.
மறுநாள் இரவு, பாலமுருகன் சதாசிவத்துக்கு ஃபோன் செய்தபோது, "முடிஞ்சுடுச்சு!" என்றார் சதாசிவம்.
"அப்படின்னா?"
"நாளைக்குக் காலையில டெண்டர் நோட்டீஸ் வரும். அதைப் பாத்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு. அப்புறம்..."
"சொல்லு!" என்றார் பாலமுருகன், சற்றுப் பதட்டத்துடன்.
சதாசிவம் கூறியதைக் கேட்டதும், "அவ்வளவா?" என்றார் பாலமுருகன், அதிர்ச்சியுடன்.
மறுநாள் காலை, சதாசிவத்துக்கு ஃபோன் செய்தபோது, பாலமுருகன் மிகவும் உற்சாகமாக இருந்தார்.
"சதாசிவம்! இதை நான் எதிர்பாக்கல. இந்த வருஷம் டெண்டரோட கண்டிஷன்ளை எல்லாம் மாத்தியிருக்காங்க. என்னோட போட்டியாளரால இந்த டெண்டர்ல கலந்துக்கவே முடியாது. சொல்லப் போனா, இந்த டெண்டர் எனக்குக் கிடைக்கணுங்கறதுக்காகவே இந்த டெண்டர் நோட்டீஸ் அமைஞ்சிருக்கற மாதிரி இருக்கு!"
"பின்னே? நேத்திக்கு நான் சொன்னப்ப, அவ்வளவான்னியே! சும்மாவா சொன்னாங்க, ஏதோ ஒண்ணு பாதாளம் மட்டும் பாயும்னு!" என்றார் சதாசிவம், சிரித்தபடியே.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை
குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
No comments:
Post a Comment