விழா முடிந்து துருவ் மல்லிக் ஓட்டல் அறைக்குத் திரும்பியபோது, ஓட்டலில் அவருக்காகக் காத்திருந்தார் அவருடைய நண்பர் பேராசிரியர் பட்டாபிராமன்.
"வாங்க, பட்டாபி! ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கீங்களா?" என்றார் துருவ் மல்லிக்.
இருவரும் அறைக்குள் நுழைந்து அமர்ந்து சற்று நேரம் பொதுவாகப் பேசியபின், "பட்டமளிப்பு விழா எப்படி இருந்தது?" என்றார் பட்டாபிராமன்.
"விழா நல்லாத்தான் இருந்தது. ஆனா..."
"சொல்லுங்க!"
"அந்தப் பல்கலைக் கழகம் புகழ் பெற்றதுன்னு நினைச்சுத்தான் பட்டமளிப்பு விழாவுக்கு வர ஒத்துக்கிட்டேன். ஆனா, அங்கே இருந்த மனுஷங்களையும், சூழ்நிலைகளையும் பார்த்தப்ப, எனக்கு அந்தப் பல்கலைக் கழகத்தைப் பத்தி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் ஏற்படல!" என்றார் துருவ் மல்லிக்.
"புகழ் பெற்றதுன்னா, அதோட பேர் எல்லாருக்கும் தெரியும்னு அர்த்தம், தரமானதுன்னு அர்த்தம் இல்லை!" என்றார் பட்டாபிராமன், சிரித்தபடி.
"பின்னே எப்படி இந்தியா முழுக்க அவங்க பேர் தெரிஞ்சிருக்கு?"
"பட்டமளிப்பு விழாவுக்கு ஏன் சண்டிகர்லேந்து உங்களைக் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரியுமா?"
"தெரியல. நான் கூட யோசிச்சேன். எதுக்கு அவ்வளவு தூரத்திலேந்து என்னைக் கூப்பிட்டிருக்காங்கன்னு."
"பப்ளிசிடிக்காகத்தான். உங்களைக் கூப்பிட்டதால, நீங்க வேலை செய்யற பல்கலைக் கழகம், உங்க நண்பர்கள் இது மாதிரி பல பேருக்கு இந்தப் பல்கலைக் கழகத்தைப் பத்தித் தெரிய வருமே!"
"ஒ! நான் அப்படி யோசிக்கல. ஆமாம், அந்த யூனிவர்சிடியோட சான்சலர் டாக்டர் துளசிராமனோட பின்னணி என்ன?"
"டாக்டர் துளசிராமனா? பதினைஞ்சு வருஷம் முன்னால அவர் ஒரு கல்லூரியை ஆரம்பிச்சப்ப, அவரோட கல்வித் தகுதி என்னன்னே யாருக்கும் தெரியாது. பள்ளி இறுதித் தேர்வைக் கூட முடிக்காதவர்னுதான் பலரும் சொன்னாங்க. அப்புறம் பாத்தா, சில வருஷங்கள்ள தன் பேருக்குப் பின்னால பி.ஏ-ன்னு போட்டுக்கிட்டாரு. கரெஸ்பாண்டன்ஸில படிச்சார்னு சொன்னாங்க. பரீட்சை கூட அவருக்கு பதிலா வேற யாரோ எழுதினதாத்தான் சொன்னாங்க.."
"அது எப்படி சார்?"
"அதெல்லாம் அடையாள அட்டை, கண்காணிப்பு கேமரா இதெல்லாம் இல்லாத காலம். தமிழ்ல வசூல் ராஜான்னு ஒரு சினிமா வந்தது. இந்தியிலேந்து வந்ததுதான். இந்தியில அதுக்கு முன்னாபாய்னோ என்னவோ பேரு!"
"புரியுது, சொல்லுங்க!" என்றார் துருவ் மல்லிக், சிரித்தபடி.
"அப்புறம் எம்.ஏ. பட்டம் வந்தது! அவர் காலேஜ் டீம்ட் யூனிவர்சிடி ஆகி, அப்புறம் யூனிவர்சிடியாகவும் ஆயிடுச்சு. அதுக்குக் கீழே இன்னும் சில கல்லூரிகளைக் கூட ஆரம்பிச்சாரு. அவர் பி.எச்.டி. பண்றாருன்னு ஒரு செய்தி வந்தது. அப்புறம் டாக்டர் பட்டமும் வந்துடுச்சு. அதுவும் கௌரவ டாக்டர் பட்டம் இல்ல, படிச்சு, ஆராய்ச்சி செஞ்சு வாங்கின டாக்டர் பட்டம்!" என்று சிரித்தார் பட்டாபிராமன்.
"அவர் பேருக்கு முன்னால ஏதோ ஒரு பட்டம் சொன்னாங்களே, எனக்கு அது சரியாப் புரியல. என்ன அது?"
"கல்விக் கொடை வள்ளல்!"
"அப்படின்னா?"
பட்டாபிராமன் விளக்கினார்.
"அவரோட கல்லூரிகள்ள பணம் வாங்காம இலவசக் கல்வியா கொடுக்கறாங்க?" என்றார் துருவ் மல்லிக், வியப்புடன்.
"நீங்க வேற! அதிகமா கட்டணம் வாங்கற கல்லூரிகள் பட்டியல்ல அவரோட எல்லாக் கல்லூரிகள் பெயரும் வரும். அதைத் தவிர, நன்கொடைன்னு பெரிய தொகை வாங்கறதா வேற புகார்கள் வருது. இதெல்லாம் ஒரு போலித்தமான பட்டம்தான்!"
"அவரோட பொருளாதாரப் பின்னணி என்ன? கல்லூரி ஆரம்பிக்க முதலீடு எப்படி வந்தது? குடும்பச் சொத்து நிறைய இருந்ததா?"
"குடும்பச் சொத்து எதுவும் இல்லை. தான் சின்ன வயசில சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதா அவர் பெருமையா சொல்லிப்பாரு! ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு நெருக்கமாகி, அவருக்கு நிறைய வேலைகள் செஞ்சு கொடுத்ததாகவும், அதில சம்பாதிச்ச பணம்தான் எல்லாம்னும் சொல்லுவாங்க. வருமான வரித்துறையில கணக்குக் கேட்டிருக்க மாட்டாங்களான்னு கேக்காதீங்க!"
ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட துருவ் மல்லிக், "எந்த ஒரு சிறப்போ, திறமையோ, படிப்போ இல்லாத ஒரு ஆள் இவ்வளவு பெரிய மனுஷரா, மதிப்போடயும், மரியாதையோடயும் இருக்காருன்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்னு இப்ப எனக்குப் புரியுது!" என்றார்.
"அதிர்ஷ்டம்னு சொல்றீங்களா?" என்றார் பட்டாபிராமன்.
"இல்லை, பணம்!" என்றார் துருவ் மல்லிக்.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை (பொருள் ஈட்டல்)
குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
No comments:
Post a Comment