Saturday, April 1, 2023

749. சிறிய கோட்டைதான்...

"அதோ தெரிகிறதே, அதுதான் கோட்டை!" என்று சுட்டிக் காட்டினான் சங்கு தேசத்தின் படைக்கு வழி காட்டி நடத்தி வந்த கார்வண்ணன்.

"மிகவும் சிறிய கோட்டையாக இருக்கிறதே! இதை வைத்துக் கொண்டா இந்த வல்லப நாடு இவ்வளவு ஆட்டம் போடுகிறது?" என்றான் படைத்தலைவன் இந்திரவர்மன்.

சொல்லி முடிப்பதற்குள், அருகிலிருந்து"ஐயோ!" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிய இந்திரவர்மன். தன் வீரர்களில் ஒருவன் மீது ஈட்டி பாய்ந்திருப்பதைக் கண்டான்.

"எங்கிருந்து வந்தது இந்த ஈட்டி? யார் இதை வீசினார்கள்?" என்றான் இந்திரவர்மன் கோபத்துடன்,

"கோட்டையிலிருந்துதான் ஈட்டி வீசப்பட்டிருக்கிறது" என்றான் ஒரு வீரன்.

"அவ்வளவு தூரத்திலிருந்து எப்படி வீச முடியும்? வேறு யாரோ அருகிலிருந்து மறைந்திருந்து வீசி இருக்க வேண்டும்!"

"இல்லை படைத்தலைவரே! கோட்டையிலிருந்துதான் வந்திருக்கிறது. எப்படி இவ்வளவு தூரம் வீசினார்கள் என்று தெரியவில்லை!" என்றான் மற்றொரு வீரன்.

"பலவீனமான ஒரு கோட்டையை வைத்துக் கொண்டு நாம் அதை எளிதாகத் தகர்த்து விடுவோம் என்பதால் நம்மைக் கோட்டைக்கு அருகிலேயே வர விடாமல் தடுக்க முயல்கிறார்கள். இதற்கெல்லாம் நாம் அஞ்சப் போவதில்லை. வாருங்கள் முன்னேறிச் செல்வோம்!" என்றான் இந்திரவர்மன்.

படைவீரர்கள் தயக்கத்துடன் நடக்கத் தொடங்கினர். 

சில அடிகள் நடந்த்தும் இன்னொரு ஈட்டி பய்ந்து வந்த்து. இந்த முறை அது தரையில் விழுந்ததால் யருக்கும் அடிபடவில்லை.

படைக்கு வழிகாட்டி அழைத்து வந்த கார்வண்ணன், "படைத்தலைவரே! வல்லப நாட்டின் கோட்டை சிறிதாக இருந்தாலும் அதற்குள்ளிருந்து போர் செய்து எதிரிப்படைகளைத் தொலைவில் வரும்போதே தாக்க வகையாக, கோட்டைச் சுவர்களில் அவர்கள் இயந்தரங்களைப் பொருத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஓரிரு ஈட்டிகளை மட்டும் வீசி அவர்கள் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். நாம் தொடர்ந்து முன்னேறினால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஈட்டிகளை வீசக் கூடும். நம் கோட்டைக்கு அருகில் செல்வதற்குள் நம் படையில் பாதி அழிந்து விடும். மீதமிருப்பவர்களுக்கும் போரிடுவதற்கான மன உறுதி இருக்காது!" என்றான்.

"அப்படியானால் நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிறீர்களா?" என்றான் இந்திரவர்மன் கோபத்துடன்.

"வல்லப நாட்டின் கோட்டை சிறியது, அதை எளிதாகத் தாக்கி அழித்து விடலாம் என்று தகவல் சொன்னது நான்தான். ஆனால் கோட்டைக்குள்ளிருந்து கொண்டே எதிரிப் படைகளைத் தொலைதூரத்திலேயே அழிக்கும்  அமைப்புகளை அவர்கள் உருவக்கி இருப்பதை நான் அறியவில்லை. ஆனால் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!"

"இப்போது நாம் திரும்பச் செல்வோம். வேறு விதத்தில் திட்டமிட்டு மீண்டும் வருவோம்!" என்றான் இந்திரவர்மன், தன் தோல்வியை மறைத்துக் கொண்டு. 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

பொருள்: 
போர் முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 


No comments:

Post a Comment

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வழக்கம் போல் காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக்...