Monday, February 15, 2021

455. மகனிடம் ஒரு மாற்றம்!

சிறு வயதிலிருந்தே தன் மகன் பாபுவுக்குப் பல நல்ல விஷயங்களைச் சொல்லி வளர்த்து வந்தார் சச்சிதானந்தம். 

குறிப்பாக அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், மற்றவர்களுக்குச் சிறு துன்பம் ஏற்பட்டால் கூட அந்த வலியை நாம் உணர வேண்டும் போன்ற கருத்துக்களை அவனிடம் அதிகம் வலியுறுத்தி வந்தார்.

சச்சிதானந்தமே எதிர்பார்க்காத அளவுக்கு அவர் வலியுறுத்திய அந்தக் கருத்துக்கள் பாபுவின் மனதில் ஆழப் பதிந்து அவனை அன்பும் அருளும் நிறைந்த ஒரு மனிதனாக உருவாக்கி விட்டதை நினைத்து அவருக்குப் பெருமையாக இருந்தது.

பாபு வேலைக்குச் சென்று திருமணம் ஆகி வாழ்க்கையில் நிலைபெற்று விட்டான்.

ஒருநாள் பாபு தந்தையிடம் வந்து, "அப்பா! நான் நம்ம ஜாதிச்சங்கத்தில சேரலாம்னு இருக்கேன்" என்றான்.

"அதெல்லாம் நமக்கு எதுக்குடா? நம்ம வேலையைப் பாத்துக்கிட்டு முடிஞ்ச அளவுக்கு மத்தங்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருக்கறதுதான் நல்லது" என்றார் சச்சிதானந்தம்.

"மத்தவங்களுக்கு உதவறதுக்காகத்தான் நானும் ஜாதிச்சங்கத்தில சேரணும்னு சொல்றேன். நாம ஓரளவுக்கு நல்லா இருக்கோம். ஆனா நம்ம ஜாதிச் சனங்க நல்லா இருக்க வேண்டாமா? அதுக்குத்தான் ஜாதிச்சங்கத்தில சேர விரும்பறேன்" என்றான் பாபு.

'எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கறதுதானே சரியா இருக்கும்?' என்று தன் மனதில் எழுந்த கேள்வியை சச்சிதானந்தம் மகனிடம் கேட்கவில்லை. அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று அவருக்குத் தோன்றியதால், மேலே ஏதும் சொல்லாமல் பேசாமலிருந்து விட்டார்.

ஜாதிச்சங்கத்தில் சேர்ந்த பிறகு சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்து விட்டான் பாபு. தங்கள் ஜாதிக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் இன்னொரு ஜாதியைச் சேர்ந்தவர்களைப் பற்றி அடிக்கடி கடுமையாகப் பேசத் தொடங்கினான்.

"பாபு! நம்ம ஜாதிக்காரங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கறதில தப்பு இல்ல.அதுக்காக இன்னொரு ஜாதி மேல ஏன் வெறுப்பைக் காட்டணும்?" என்றார் சச்சிதானந்தம்.

"நம்ம ஜாதிக்காரங்களோட முன்னேற்றத்தை அவங்க தடுக்கும்போது, அவங்க மேல கோப்பபடாம எப்படி இருக்க முடியும்?" என்றான் பாபு.

அன்பு, அருள் என்ற பண்புகளைக் கொண்டிருந்த தன் மகனின் மனநிலை மாறி வருவதை சச்சிதானந்தம் உணர்ந்தார். ஆனால் அவனை எப்படி வழிப்படுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லை. 

ஒருமுறை அவர்கள் ஜாதிக்கும், அவர்களுக்கு எதிரிகளாகக் கருதப்பட்ட இன்னொரு ஜாதிக்கும் இடையே ஒரு கலவரம் மூண்டது. இரண்டு தரப்பிலும் சில உயிர்கள் பலியாயின.

கலவரம் துவங்கியபோது பாபு வெளியில் சென்றிருந்ததால் சச்சிதானந்தம் கவலைப்பட்டார். ஆனால் பாபு விரைவிலேயே  வீட்டுக்கு வந்து விட்டான்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவன் வெளியில் எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து கொண்டு கலவரம் பற்றியும், அதைத் தொடர்ந்து நடந்த கைதுகள், பேச்சு வார்த்தைகள் பற்றியும் தொலைக்காட்சியில் வந்த செய்திகளைப் பார்த்து வந்தான்.

பொதுவாக அந்த இன்னொரு ஜாதியைக் குறை கூறி அடிக்கடி பேசுபவன் கலவரத்துக்குப் பிறகு எதுவுமே பேசாமல் இருந்தது சச்சிதானந்தத்துக்குச் சற்று வியப்பாக இருந்தாலும், ஆறுதலாகவும் இருந்தது. 

கலவரம், கொலை என்றெல்லாம் நடந்ததும் இத்தகைய விரோதங்கள் விபரீதங்களை விளைவிக்கும் என்பதை மகன் புரிந்து கொண்டிருப்பான் என்று நினைத்துச் சச்சிதானந்தம் நிம்மதி அடைந்தார்.

ஆனால் ஓரிரு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு வந்த போலீசார் பாபுவைக் கைது செய்து கொண்டு போனார்கள். 

கலவரம் ஆரம்பித்த சமயம் இன்னொரு ஜாதியைச் சேர்ந்த இரண்டு பேரைக் கத்தியால் குத்தி விட்டு பாபு வீட்டுக்கு வந்து பதுங்கி விட்டதாகவும், குத்துப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து பாபுவைக் கைது செய்வதாகவும் கைது செய்ய வந்த போலீசார் சச்சிதானந்தத்திடம் கூறினர். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

பொருள்:
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் ஒருவர் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

Read 'After the Change in Babu's Outlook' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...