Sunday, February 14, 2021

454. "சுய" சிந்தனை

"நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானால் பின்பற்றுங்கள். எந்த அரசியல் கொள்கையை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால் சதந்திரமாகச் சிந்தியுங்கள். யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்"

ரவீந்திரநாத்தின் இந்தப் பேச்சுதான் ராம்குமாரை அவருடைய இயக்கத்தில் ஆர்வம் கொள்ளச் செய்தது.

ரவீந்திரநாத்தின் 'சிந்தனையே செல்வம்' இயக்கத்தில் உறுப்பினனாகச் சேர்ந்தான் ராம்குமார்.

"சுதந்திரமாச் சிந்திக்கணும்னு சொல்லிட்டு, அதுக்கு ஒரு அமைப்பு, உறுப்பினர்கள் எல்லாம் எதுக்கு? இந்த மாதிரி இயக்கங்கள் எல்லாமே மனுஷங்களை அடிமையாக்கி அவங்களை மூளைச் சலவை செய்யறதுக்குத்தான்!" என்றான் ராம்குமாரின் நண்பன் சந்தோஷ்.

"அப்படி இல்லடா. இவங்க வேற மாதிரி. அவங்க எந்தக் கொள்கையையும் உறுப்பினர்கள் மேல திணிக்கறதில்ல. மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தத்துவ ஞானிகள் சொல்றதையெல்லாம் அப்படியே ஏத்துக்காம, நாமே சிந்திச்சு முடிவெடுக்கணும்னுதான் அவங்க சொல்றாங்க. இந்தச் சிந்தனையை எல்லார்கிட்டயும் பரப்பறதுக்குத்தான் உறுப்பினர்களைச் சேர்த்து அவங்களுக்கு பயிற்சி எல்லாம் கொடுக்கறாங்க. நீ கூட இதில உறுப்பினரா சேர்ந்துக்கயேன்" என்றான் ரம்குமார்.

"ஆளை விடுப்பா! சிந்தனை செய்யறது மாதிரி கஷ்டமான வேலையையெல்லாம் நான் என் மூளைக்குக் கொடுக்கறதில்ல!" என்றான் சந்தோஷ் சிரித்தபடி.

"முன்னெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குப் போவியே? இப்பல்லாம் ஏன் போறதில்ல? சுயமாச் சிந்திச்சு, கடவுள் இல்லைங்கற முடிவுக்கு வந்துட்டியா?" என்றான் சந்தோஷ்.

"அப்படி இல்ல. ஞாயிற்றுக்கிழமை 'சிந்தனையே செல்வம்' பிரசாரக் கூட்டங்கள் இருக்கும். அதுக்கு நான் வாலன்ட்டியராப் போறேன். அதனால கோவிலுக்குப் போக முடியல" என்றான் ராம்குமார்.

"ஏண்டா, முன்னெல்லாம் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குப் போறதை ஒரு விரதம் மாதிரி செஞ்சுக்கிட்டிருந்தே. நான் எங்கேயாவது கூப்பிட்டாக் கூட வர மாட்டே. இப்ப கோவிலுக்குப் போறதை விட அவங்க கூட்டங்களுக்கு வாலன்ட்டியராப் போறதுதான் முக்கியம்னு உன்னை நம்ப வச்சிருக்காங்க.  வாலன்ட்டியர்னா  விருப்பப்பட்டுப் போறதுன்னு அர்த்தம், ஆனா நீ ஒரு கம்பல்ஷனால வாலன்ட்டியராப் போற!"

"சேச்சே, அப்படி இல்லை. அவங்க என்னை எந்த விதத்திலேயும் வற்புறுத்தல. கோவிலுக்குப் போய் இயந்திரம் மாதிரி கடவுளை வழிபடறது முக்கியமா, நம்ம கூட்டத்துக்கு வாலன்ட்டியரா வந்து பல பேர் சுயமா சிந்திக்கறதுக்கு உதவறது முக்கியமான்னு தீர்மானிச்சுக்கன்னுதான் சொன்னாங்க. வாலன்ட்டியராப் போறதுதான் முக்கியம்னு நான்தான் முடிவு செஞ்சேன்!" என்றான் ரம்குமார்.

சந்தோஷ் பெரிதாகச் சிரித்து விட்டு, "ஒரு கணவன் சொன்னானாம், என் வீட்டில நான்தான் எஜமானன், அப்படிச் சொல்லிக்க என் மனைவி எனக்கு அனுமதி கொடுத்திருக்கான்னு, அது மாதிரி இருக்கு நீ சொல்றது!" என்றான்.

அரசியல் இயல்
அதிகாரம் 46 
 சிற்றினஞ்சேராமை  
குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

பொருள்:
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்துள்ள இனத்தின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
  அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...